அரசையோ அல்லது அமைச்சர்களையோ விமர்சித்து கருத்து வெளியிடுவது பொது அமைதிக்குக் கேடு விளைவிக்கும் குற்றம் ஆகாது என்றும், சமூகத்திற்கு இடையே பகைமையையோ வெறுப்பையோ ஊக்குவிப்பதாக இதைக் கருத முடியாது என்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. 
பழனி நில மோசடி விவகாரம் தொடர்பாகத் தமிழக அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு கருத்துக்களைப் பரப்பியதாகக் கூறி, வினோத் சூர்யா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி வினோத் சூர்யா சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.


நீதிமன்றத்தின் காட்டமான கருத்துகள்
மனுவை விசாரித்த நீதிபதி, அரசையும் அமைச்சர்களையும் விமர்சிப்பது தொடர்பான சட்டப்பூர்வ எல்லைகளைச் சுட்டிக்காட்டி தவெக அரசுக்குக் குட்டு வைக்கும் வகையில் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டார், “அரசியல் களத்திலோ அல்லது பொது வெளியிலோ அரசையோ, அமைச்சர்களையோ விமர்சிப்பது என்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமாகக் கருத முடியாது. இத்தகைய விமர்சனங்கள் சமூகத்தினடையே பகைமையையோ அல்லது வெறுப்பையோ தூண்டுவதாகக் கூற இயலாது.” என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஜாமீனில் விடுவிக்க உத்தரவு
அரசு இயந்திரத்தையும் அமைச்சர்களையும் விமர்சிப்பவர்கள் மீது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசுக்கு அறிவுறுத்திய நீதிமன்றம், கைதான வினோத் சூர்யாவை உடனடியாக ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு, கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுவதோடு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
