கவின் நடிக்கும் மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரையின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்த கவின் வெள்ளித்திரையில் அறிமுகமாகி லிப்ட், டாடா ஆகிய வெற்றி படங்களை கொடுத்தார். அதன் பின்னர் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இருப்பினும் இவருடைய நடிப்பில் வெளியான ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் ஆகிய படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இதற்கிடையில் இவர் நயன்தாராவுடன் இணைந்து ‘ஹாய்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ‘கவின் 09’ படத்தையும் கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் வெற்றிமாறனின் தயாரிப்பில் மாஸ்க் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார் கவின்.
இந்த படத்தை விகர்ணன் அசோக் எழுதி, இயக்கியிருக்கிறார். டார்க் காமெடி – அரசியல் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தில் கவினுடன் இணைந்து ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படமானது வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


