நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பிரதமர் இல்லத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்களைப் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


பேரணிக்குத் தடை – தடுத்து நிறுத்திய காவல்துறை
டெல்லி ராஜாஜி மார்க்கில் அமைந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் இருந்து, பிரதமர் இல்லத்தை நோக்கி பேரணியாகச் செல்ல ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் முயன்றனர்.
அப்போது அவர்களை வழிமறித்த காவல்துறையினர், இந்தப் போராட்டத்திற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை எனக் கூறி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், பேரணியைத் தொடர்ந்து நடத்துவதில் காங்கிரஸார் உறுதியாக இருந்ததால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.
எம்பிக்கள் கைது & தலைவர்கள் முற்றுகை
காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்படப் பல காங்கிரஸ் எம்பிக்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரிடம் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, இடத்தைக் காலி செய்யுமாறு வலியுறுத்தினர். இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்.
காங்கிரஸின் முக்கிய கோரிக்கைகள்:
மத்திய அமைச்சர்கள் ராஜினாமா: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும், மாணவர்கள் மீதான தடியடிக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
பிரதமர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்: ஜனநாயக ரீதியில் போராடிய மாணவர்கள் மீது துணை ராணுவப் படையை ஏவி தாக்குதல் நடத்தியதற்குப் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் பதவி விலக வேண்டும்.
பின்னணி என்ன?
லடாக்கில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்த சோனம் வாங்சுக்கிற்கு ஆதரவாகவும், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராகவும் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். இந்த அடக்குமுறையைக் கண்டித்தே இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“நாங்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை. பிரதமர் இல்லத்தை நோக்கிச் செல்ல அனுமதிக்கும் வரை அல்லது எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்.”
