HomeBreaking Newsஆவின் பால் விநியோகத்தில் கட்டுப்பாடு – நாளை மாவட்டம் முழுவதும் பால் விநியோகத்தை நிறுத்த முகவர்கள்...

ஆவின் பால் விநியோகத்தில் கட்டுப்பாடு – நாளை மாவட்டம் முழுவதும் பால் விநியோகத்தை நிறுத்த முகவர்கள் முடிவு!

-

- Advertisement -

வேலூர் மண்டல அதிகாரிகள் பாரபட்சமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு – ராணிப்பேட்டையில் முகவர்கள் ஆர்ப்பாட்டம்!ஆவின் பால் விநியோகத்தில் கட்டுப்பாடு – நாளை மாவட்டம் முழுவதும் பால் விநியோகத்தை நிறுத்த முகவர்கள் முடிவு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதிய அளவு ஆவின் பால் விநியோகம் செய்யப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, நாளை மாவட்டம் முழுவதும் ஆவின் பால் விநியோகத்தை நிறுத்த முகவர்கள் முடிவு செய்துள்ளனர்.

we-r-hiring

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 85-க்கும் மேற்பட்ட ஆவின் பால் முகவர்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவர்களின் தேவைக்கு ஏற்ப பால் வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் அளவில் பால் வழங்க வேண்டும் என முகவர்கள் கோரிக்கை விடுத்தும், ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் அளவில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், வேலூர் மண்டல ஆவின் அதிகாரிகள் பாரபட்சமாகச் செயல்படுவதாகவும், தங்களுக்கு சாதகமான முகவர்களுக்கு மட்டும் கூடுதல் பால் வழங்கப்படுவதாகவும், தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்யப்படுவதாகவும் முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கண்டித்து, ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் உள்ள பால் முகவர்களுக்கான பணம் செலுத்தும் அலுவலகம் முன்பு முகவர்கள் திரண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இன்று பால் கொள்முதலுக்கான முன்பணத்தைச் செலுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், நாளை மாவட்டம் முழுவதும் ஆவின் பால் விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

முகவர்களுக்குத் தேவையான அளவு பால் தடையின்றி வழங்க வேண்டும் என்றும், முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டப்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய ராணிப்பேட்டை மாவட்ட பால் முகவர்கள் சங்கத் தலைவர் சங்கர், முகவர்களின் கோரிக்கைகளை ஆவின் நிர்வாகம் உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

முகவர்களின் இந்த முடிவால் நாளை ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

 

MUST READ