கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்ந்து அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், நூல்களில் இடம்பெற்றுள்ள முத்திரை தேதிகளைச் சுட்டிக்காட்டி தவெக அரசுக்கு திமுக கேள்விகளை எழுப்பியுள்ளது.
பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற பதிப்பகங்களின் நூல்களில் மார்ச் மாத முத்திரை காணப்படுவதாகவும், அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் நூல்களில் மட்டும் ஜூன் மாத முத்திரை இடம்பெற்றுள்ளதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டியுள்ள திமுக, சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பதிப்பகங்களின் நூல்கள் எப்போது கொள்முதல் செய்யப்பட்டன, அவற்றை வாங்க முடிவெடுத்தது யார் என்ற கேள்விகளை முன்வைத்துள்ளது.
மேலும், இந்த நூல்கள் தவெக ஆட்சிக் காலத்தில் வாங்கப்பட்டிருந்தால், அதற்கான முடிவை எடுத்தவர்கள் யார் என்றும், இதில் யாருக்குக் கமிஷன் சென்றது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், நூல்களில் உள்ள முத்திரை தேதிகளை அடிப்படையாகக் கொண்டு திமுக எழுப்பியுள்ள இந்தக் கேள்விகள் புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
