கோவை பெரியார் அறிவுலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை முன்வைத்து, திமுகவை முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெரியார் பெயரைப் பயன்படுத்தி ஊழல் செய்வதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், இந்த விவகாரத்தில் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “ஊழல் உலகமாக… திமுக கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் திமுக உயர் ரகம்தான் என்பதற்குக் கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது திமுக. பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களைப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளது திமுக” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அனைத்தும் மக்கள் பணம் என்பதால் மனம் பதைக்கிறது என்றும், பெரியார் பெயரை வைத்துக்கொண்டு ஊழல் செய்வதை வரலாறாகக் கொண்டிருக்கும் திமுகவை தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறை மன்னிக்கவே மன்னிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் திமுக நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப்போவது உறுதி என்றும் முதலமைச்சர் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
கோவை பெரியார் அறிவுலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
