மகிழ்ச்சியான கொண்டாட்டம்; சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்திய விமானப்படையின் 92ம் ஆண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணியளவில் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
இந்த சாகச விமானங்கள் தாம்பரம் விமான படைத்தளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் சாகசத்தை நிகழ்த்தவுள்ளன. இதில் சுகோய் சு 30, ஹெலிகாப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகாப்டர் (ஏஎல்ஹெச்) ஹால் தேஜா, மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரஃபேல் ஏர்கிராப்ட் உள்ளிட்ட 72 விமானங்கள் பங்கேற்க உள்ளன. பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த சாகச நிகழ்ச்சியை காண மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்துள்ளனர். சுமார் 6500 போலீசார் மற்றும் 1500 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் ஏற்பாடுகளுக்கு ஆர்.கே.சாலைக்கு பதிலாக வாலாஜா சாலையை பயன்படுத்தலாம்.
வாகன நிறுத்துமிடங்கள் காலை 9.30 மணிக்கு மூடப்படும். எனவே, தனியார் வாகனத்தில் நிகழ்ச்சியை பார்வையிட விரும்பும் பார்வையாளர்கள் கூடிய விரைவில் வருகை தர வேண்டும். ஏர் ஷோவை பார்வையிட வாகன ஓட்டிகள் அண்ணாசாலை, வாலாஜா சாலை மற்றும் சுவாமி சிவானந்தா சாலையை பயன்படுத்தலாம். எம்டிசி சிற்றுந்துகள் மூலம் அண்ணாசாலை மெட்ரோவில் இருந்து சிவானந்தா சாலையில் டிவி ஸ்டேசன் வரையிலும், வாலாஜா ரோட்டில் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு வரையிலும், ஆர்.கே சாலையில் வி.எம் தெரு சந்திப்பு வரையிலும் மாநகர பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான சாகச நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் விமானப்படை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பார்வையிட உள்ளனர். இதனால் பொதுப்பணித்துறை சார்பில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் 15க்கும் மேற்பட்ட சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பு அம்சங்கள் என்னவென்றால், முழுவதும் ஏசி மற்றும் ஏர்கூலர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.