சென்னை மத்திய கைலாஷ் அருகே நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார், முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ஓட்டிச்சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இருவரும் சமாதானமாக சென்றதை அடுத்து விபத்து குறித்து புகார் அளிக்கப்படவில்லை.


தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் நேற்று இரவு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொகுசு காரில் கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக் கழகம் வழியாக ஓ.எம்.ஆர் சாலை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். மத்திய கைலாஷ் அருகே திரும்பும்போது அதே திசையில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி ஓட்டிச்சென்ற கார் மீது, அவரது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெண் ஓட்டிச்சென்ற காரில் சிறிய அளவில் சிராய்ப்பு ஏற்பட்டது. உடனடியாக நடிகர் சிவகார்த்திகேயன் காரில் இருந்து இறங்கிச்சென்று, அந்த பெண்ணிடம் தவறுக்கு வருத்தம் தெரிவித்தாகவும், ஆனால் அந்த பெண் தன்மீது தான் தவறு என்று சிவகார்த்திகேயனிடம் கூறியதாக தெரிகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் காரில் இருந்து இறங்கியதை பார்த்த வாகன ஓட்டிகள் சாலையில் வாகனத்தை நிறுத்தி, அவரை பார்க்க முயன்றதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர்புரம் போலீஸார் மற்றும் மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் போக்குவரத்தை சீர்செய்தனர். பின்னர் நடிகர் சிவகார்த்திகேயனும், அந்த பெண்ணும் கைகுலுக்கி சமாதானம் செய்துகொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். விபத்து குறித்து இரு தரப்பும் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


