சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தங்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இன்று 2-வது நாளாக சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.


சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்-2026க்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு காரணங்களுக்காக 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டன. இந்நிலையில்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நேற்றும், இன்றும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று சென்னையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் ஏராளமானோர் பங்கேற்று விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று 2வது நாளாக வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்களுடைய பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து தங்களது பெயர்களை சேர்க்கலாம்.
வாக்காளர் பட்டியலில் நிரந்தர இடமாற்ற பதிவுகள், இறந்தோர் மற்றும் ஆட்சேபனை தொடர்பான பெயர் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்றத் தொகுதிகளிலேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் தங்கள் பெயரை சேர்க்கவோ அல்லது மாற்றவோ விருப்பப்பட்டால் படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், அதற்கான ஆவண ஆதார நகல்களை இணைத்து விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.


