spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅண்ணாவின் கதை

அண்ணாவின் கதை

-

- Advertisement -

இரா.கண்ணன்
ஐக்கிய நாடுகள் சோமாலியா ஹிர்ஷ பெல்லே மாநில அலுவலக துணைத்தலைவர் அண்ணாவின் கதை

எழுத்தாலும் பேச்சாலும் பாசத்தாலும் தமிழர்களின் இதயத்தில் நிரந்தரமாய் இடம்பிடித்த ஒரு சாமானியனின் சரித்திரமே அண்ணாவின் கதை. அந்தச் சரித்திரம் தமிழர்களின் எழுச்சிச் சரித்திரம். ஒன்றுபட்ட இந்தியாவில் தமிழர்களின் அடையாளம் தொலைந்து போகாமல் காத்த சரித்திரம். தமிழர்க்கு மொழி, இன உணர்வு ஊட்டி தமிழினத்துக்கு முகவரி தந்த சரித்திரம்!

அந்தச் சரித்திர நாயகன் பிறந்ததோ காஞ்சியில் ஓர் எளிய நெசவுக் குடும்பத்தில். பங்காரு-நடராஜன் தம்பதிக்கு 1909-ல் பிறந்த அண்ணா நெய்தது பட்டை அல்ல. தமிழினத்தின் மறுமலர்ச்சியை காஞ்சி பச்சையப்பன் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்ற அண்ணாவை, குடும்பச்சூழல் இன்டர்மீடியட்டுக்குப் பிறகு காஞ்சி நகராட்சியில் குமாஸ்தாவாக்கி சோதனைசெய்தது. நல்லவேளை, பிற்பட்டோருக்கான கல்வி உதவித்தொகை ஒன்று கிட்ட பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் சேர்ந்தார் அண்ணா. பிராமணரல்லாதார் இயக்கத்தின் நல்விளைவு அது.

we-r-hiring

பச்சையப்பனில் அண்ணா வென்ற கட்டுரைப் போட்டிகள் ஏராளம். 1932-ல் நடந்த ஏ.சேஷய்யா சாஸ்திரி கட்டுரைப் போட்டியில் முதல் பரிசுபெற்ற ‘மாஸ்கோ மாப்பரேட்’ கட்டுரை அவரது ஆங்கிலப் புலமையையும் பரந்த வாசிப்பையும் சொன்னது. அந்தக் கட்டுரையில் ரஷ்யப் புரட்சிக்கு முன்பே லண்டனில் எழுந்த ஃபேபியன் சோஷலிஸ இயக்கத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார் அண்ணா ராபர்ட் ஓவன், பென்ஸன் ஆகியோரின் பொருளாதாரக் கருத்துகளை மட்டுமின்றி பெர்னார்ட்ஷா, தாகூர் ஆகியோரின் கருத்துகளையும் அக்கட்டுரையில் மேற்கோள்காட்டியிருந்தார் கல்லூரி இறுதியாண்டில்தான் பேச்சாளரானார் அண்ணா.

1932-ல் கல்லூரி மாணவர் சங்கச் செயலாளராகவும் ஆங்கில மாணவர் கழகச் செயலாளராகவும் பொருளாதாரக் கழகச் செயலாளராகவும் இருந்தார். 1934-ல் ‘ஆனந்த விகடன் போட்டியில் வென்ற முதல் சிறுகதை கொக்கரகோ’ அவரது எதிர்காலப் புனைவிலக்கியத்துக்குக் கட்டியம் கூறியது.

அண்ணாவின் கதை

மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல, ஆசிரியர்களிடத்திலும் ஜொலித்தார் அண்ணா மாணவர் தலைவராக வலம்வந்தார். 1930-லேயே நீதிக் கட்சியில் சேர்ந்ததுடன் அக்கட்சிக் கூட்டங்களிலும் பேசினார் இந்த நேரத்தில் ஒரு வேலைக்காக சிபாரிசுக் கடிதத்துடன் சென்னையில் உள்ள சப் மாஜிஸ்திரேட்டைப் பார்க்கப்போனார். வேலை கேட்டு வந்தவரிடமே நீதிக் கட்சி சி.என்.அண்ணாதுரைதானே நீங்கள்? நீதிக் கட்சியின் ஏ.ஆர்ராமசாமி முதலியாரிடத்தில் சொல்லி, எனக்கு ஜட்ஜ் வேலை வாங்கித்தர வேண்டும்” என்று மாஜிஸ்திரேட் முந்திக்கொண்ட விநோதம் நடந்தது. அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டுத் திரும்பினார் அண்ணா

அண்ணாவைப் பந்தாடிய வறுமை
1934-ல் அரசியல், பொருளாதாரம், வரலாறு பாடங்களில் பி.ஏ.ஹானர்ஸ் பட்டம் பெற்றார். 1935-ல் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். எனினும், வறுமை காரணமாக மூன்று மாதங்களுக்கு மேல் படிப்பைத் தொடர முடியவில்லை.

தமிழாசிரியர் பொப்பிலி அரசரின் இதழில் உதவி ஆசிரியர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ட்யூட்டர் மேயர் பாசுதேவின் பாலபாரதி இதழில் பணி,  ‘நவ யுகம்’ இதழாசிரியர் என்று அண்ணாவின் வாழ்க்கை, பொருளாதாரச் சூழலால் பந்தாடப்பட்டது. 21 வயதில் பெற்றோர் பார்த்த ராணியை மணந்தார் அண்ணா “அவர் என்றுமே நல்ல வேலை வாழ்க்கையில் நல்ல நிலையை இலக்காக வைத்திருந்தவர் அல்லர் அவரது மனம் பொதுவாழ்க்கையையே விரும்பியது” என்பது அவரது துணைவியார் ராணி அம்மையாரின் நினைவுப்பதிவு.

அண்ணா பிறந்த 1909-ல் விதை போடப்பட்ட பிராமணரல்லாதோர் இயக்கம் வளர்ந்து நீதிக் கட்சியாய் மலர்ந்திருந்தது. மதம், அரசியல் அரசுப் பணிகள், கலை, இலக்கியம் என்று மூன்றே சதவீத பிராமணர்களின் ஆதிக்கம் எங்கும் ஓங்கியிருந்தது. பிராமணரல்லாதோர் நிலை உயர வேண்டும் என்ற எண்ணம் மெதுவாய் அரும்பியிருந்தது பச்சையப்பன் கல்லூரியின் பேராசிரியர் வரதராஜன் அண்ணாவை நீதிக் கட்சிக்கு அறிமுகப்படுத்த பின்னர் ‘சண்டே அப்சர்வர்’ பி.பாலசுப்ரமணியம் அவரை முறையாய் அங்கு கொண்டுசேர்க்க அண்ணாவின் திராவிட இயக்க அரசியல் பயணம், 1930-ல் நீதிக் கட்சியுடன் தொடங்கியது. ஆனால், அந்த நீதிக் கட்சிக்கு நாம்தான் மூடுவிழா நடத்தப்போகிறோம் என்பதை அப்போது அண்ணாவேகூட எண்ணியிருக்க மாட்டார்.

நீதிக் கட்சியோ சீமான்களையும் கோமான்களையும் மட்டுமே கொண்ட அடித்தட்டு மக்களோடு தொடர்பில்லாத கட்சியாக இருந்தது. பின்பு, ஏன் அண்ணா அதில் சேர வேண்டும்? அன்று, அதுதான் பிராமணர் அல்லாதாருக்கு இருந்த ஒரே அரசியல் களம், பேராசிரியர் வரதராஜன் வேறு பிராமணிய எதிர்ப்புணர்வை அண்ணாவுக்கு ஊட்டியிருந்தார். ஆனாலும் எங்கும் சுதந்திர தாகம் பொங்கி வழிந்த காலத்தில் காங்கிரஸ் இயக்கம் அவரைத் தொடாதது ஆச்சரியமே. அண்ணாவுக்கு காந்தியாரிடத்தில் மிகுந்த பற்று இருந்தது. 1942-ல் நடந்த ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்குகொள்ளாததுபற்றி அண்ணாவே வருந்தியிருக்கிறார்.

பெரியாரை ஏன் அண்ணா தலைவராக ஏற்றார்?
1935-ல் தனது 26-ம் வயதில் அண்ணாவின் முதல் தேர்தல் முயற்சி தோல்வியில் முடிந்தது. பெத்துநாய்க்கன் பேட்டையில் நீதிக் கட்சி வேட்பாளராக உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்கினார் அண்ணா. “கோயில்களில் விளக்குகள், ஆனால் குடிசைகளில் இருட்டு” என்று அண்ணா முன்பு பேசியதைச் சுட்டிக்காட்டி அவர் வென்றால், கோயில்களில் விளக்கிருக்காது என்ற பிரச்சாரம் செய்தார்கள் எதிரிகள். தோற்றுப்போனார் அண்ணா.

தோல்வி ஆண்டாக இருந்தாலும், அண்ணாவைப் பொறுத்தவரையில் 1935 மறக்க முடியாத ஆண்டு. ‘நான் கொண்ட ஒரே தலைவர் என்று அவர் விவரித்த தந்தை பெரியாரைக் கண்டது அந்த ஆண்டில்தான் திருப்பூரில் இரண்டு நாள் செங்குந்தர் மாநாட்டில் நடந்த அந்தச் சந்திப்பில், வேலைக்குச் செல்லப்போகிறீர்களா?” என பெரியார் கேட்க, “இல்லை பொதுவாழ்வே” என்று அண்ணா உரைக்க தலைவரும் தந்தையுமானார் பெரியார்.

பத்தாண்டுகளுக்கு முன்பே (1925) அரசியலை விட்டு விலகி சுய மரியாதை இயக்கம் கண்டவர் பெரியார் அண்ணாவோ சமூகம். அரசியல் என்று இரு தளங்களில் பயணிக்க விரும்பியவர். பின்பு ஏன் அரசியலை ஒதுக்கிய பெரியாரைத் தலைவராக ஏற்றார் அவர்?

அண்ணாவின் கதை

அண்ணாவின் நுண்ணறிவு, பெரியாரே தமிழகத்தின் நம்பிக்கை என்பதைக் கண்டுணர்ந்தது.

பெரியாரின் சுய மரியாதை இயக்கம் அமிலமாய்த் தகித்தது. பெரியார் புயலென்றால், அண்ணா தென்றல் இருவருக்கும் முப்பதாண்டு வித்தியாசம். 1937 முதல் முழு நேரமாய் ஈரோட்டில் பெரியாரோடு வாசம் ‘குடிஅரசு விடுதலை இதழ்களின் துணை ஆசிரியர் பயணங்கள். மொழிபெயர்ப்பு, பெரியாரின் முரட்டுக் கருத்துக்களுக்குத் தேன் தடவி ஆதரவு தேடுவது என்று அவரது தளபதியாய் வலம்வந்தார் அண்ணா

எதிரணியையும் மயக்கிய அண்ணாவின் பேச்சு
தமிழை இப்படியும் கையாள முடியுமா? அடுக்குமொழி. வார்த்தைப் பிரவாகம், கரகர குரல், மரபுசாரா சிந்தனை, புதிய புதிய சொற்றொடர்கள் என்று 5.3 அடி அண்ணா, பேச்சாளராய் விஸ்வரூபமெடுத்திருந்தார். ஆங்கிலத்தையும் தமிழைப் போலவே இனிமையாகக் கையாண்டார். அவரது எளிமையும் சகோதரப் பாசமும் இளைஞர்களை ஈர்த்தன. எதிரணியினரும் அவர் பேச்சுக்கு மயங்கினர். அவர் பேசாத தளம் இல்லை; தலைப்பில்லை என்றானது.

ஓரிடத்தில் தலைப்பு கேட்க, ‘தலைப்பில்லை என்று பதில் வர அதையே தலைப்பாக்கி அவர் பேசியது வரலாறானது. சமூகம், அரசியல், தமிழகத்தின் நிலை, வடக்கு-தெற்கு ஏற்றத்தாழ்வு, காங்கிரஸ் அரசின் தவறுகள் சங்க இலக்கியம் குறள் மொழி, பொங்கல், மாநில சுயாட்சி கிரேக்க, ரோம இதிகாசம், வரலாறு, ஆங்கில இலக்கியம், பொருளாதாரம், திராவிட நாகரிகம் . இனங்களின் விடுதலை வரலாறு என்று ஆழ்ந்த புலமையுடன் அவரது பேச்சு இருந்தது.

பெரியாரும் அண்ணாவும் காடு, மேடு, கழனி என்று தங்கள் பேச்சால் எழுத்தால், தமிழர்க்குச் சுயமரியாதை, மொழி, இன உணர்வு ஊட்டினர். திராவிட இனம், தமிழ் மொழி, தமிழர் என்று இவர்கள் 14 ஆண்டுகள் தமிழ்ச் சமுதாயத்துக்கு இணைந்து ஆற்றிய பணி, வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்கது. போராட்டமே வாழ்க்கையாய் இருந்த அந்த 14 ஆண்டுகளே தனது ‘வசந்த காலம்’ என்று முதல்வரான பிறகு விடுதலை பெரியார் பிறந்த நாள் மலருக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் அண்ணா.

1937-ல் ராஜாஜி கொண்டுவந்த கட்டாய இந்தியை எதிர்ப்பதில் பெரியார் முன்னிற்க, அண்ணா அவருக்குத் துணை நிற்க நான்கு மாதங்கள் சிறை தமிழகம் மெதுவாய் அண்ணாவை அறியத் தொடங்கியது. 1938-ல் ‘தனித் தமிழ்நாடு’. பின்னர் ‘திராவிட நாடு என்ற பிரிவினை முழக்கத்தைத் தொடங்கினார் பெரியார். பாகிஸ்தானுக்கு முன்பே திராவிடஸ்தான் கேட்டவர்கள் இவர்கள். ஆனால், தென்னகத்தில் போதிய ஆதரவு இல்லாததால் அம்முயற்சி கைவிடப்பட்டது.

1942-ல் அண்ணாவை ஆசிரியராகக் கொண்ட ‘திராவிட நாடு வார இதழ் வெளிவரத் தொடங்கியது. அவரது கட்டுரைகளுக்கும் எழுத்துக்களுக்கும் இளைஞர்களிடத்தில் பெரும் வரவேற்பு இருந்தது. சுமார் 20 புனைபெயர்களில் கட்டுரை, சிறுகதை, விமர்சனம், ஓரங்க நாடகம் என்று அண்ணா ‘திராவிட நாடு முழுதும் நிறைந்திருந்தார் பரதன், சௌமியன் சமதர்மன். சம்மட்டி ஒற்றன் வீரன், வீனஸ் என்பவை அவரது புனைபெயர்களில் சில. ‘கலிங்க ராணி’, ‘ரங்கோன் ராதா ‘குமாஸ்தாவின் பெண்’, ‘பார்வதி பி.ஏ. ‘ஆகியவை ‘திராவிட நாடு இதழில் தொடர் கதையாகவும் பின்பு புத்தகமாகவும் வெளிவந்தன.

பெரியாரைப் போல் அல்லாமல் அண்ணாவுக்குக் கலைகளின் மீது ஒரு மரியாதை இருந்தது. காங்கிரஸைப் போலவே நாடகங்களை இயக்கக் கருத்துகளைப் பரப்பப் பயன்படுத்த எண்ணி, அண்ணாவே சமூகப் பிரச்சார நாடகங்கள் எழுதத் தொடங்கினார் கல் மனம் படைத்த நிலச்சுவான் தார்கள், போலி மடாதிபதிகள், காதல், பொருந்தா மணம், விதவை மணம், சாதிகளற்ற, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் போன்றவற்றைப் பற்றி அவரது நாடகங்கள் பேசின.

பெரியாரை நாடகங்களுக்கு அழைத்துச்சென்று, மக்களிடையே அவை ஏற்படுத்திய தாக்கத்தையும் காணவைத்தார் அண்ணா கலையுலகிலும் கால்பதித்தார். கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா. கே.ஆர்.ராமசாமி. டி.வி. நாராயணசாமி (டி.வி.என்.) என்று பலர் திராவிட இயக்க அனுதாபிகளாய் இருந்தனர்.

அண்ணாவின் கதை

அண்ணாவின் முதல் நாடகமான ‘சந்திரோதய’த்தைப் பார்த்து ஒருவர் அண்ணா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். அவரை 1944-ல் சிவாஜியாய் நடிக்க அண்ணாவிடம் அழைத்துப்போனார் டி.வி.என். மராட்டிய மாவீரன் சிவாஜி சூத்திரன் என்பதால் அவனுக்குப் பட்டம் கட்ட மறுத்த பிராமணர்களையும் அதன் பின் இருந்த பிராமணியத்தையும் கேள்விக்குள்ளாக்கியது நாடகம். அண்ணாவிடம் காஞ்சியில் தஞ்சம் அடைந்திருந்த நாடக நடிகர் கணேசன் ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ய’த்தில் நடித்து, பெரியாரால் ‘சிவாஜி’ ஆனார் அதே நாடகத்தில் காகபட்டரின் வேடத்தில் நடித்திருக்கிறார் அண்ணா. ‘சந்திரோதயம்’ நாடகத்தில் ஜமீன்தாராக நடித்திருக்கிறார்.

தீயாய்ப் பரவிய சொற்போர்
1942-44 ஆண்டுகள் பெரியார், கம்ப ராமாயணயத்தையும் பெரிய புராணத்தையும் கடுமையாக எதிர்த்த நேரம். “தமிழர்கள் இந்துக்கள் அல்லர், ஆனால், கம்ப ராமாயணமும் பெரிய புராணமும் அவர்களிடம் அப்படியொரு உணர்வை, தாக்கத்தை உண்டாக்குகின்றன – ஆரியத்தை அடையாள நிமித்தம் அதை வளர்த்தெடுக்கின்றன. ஆகையால் எரிக்கிறோம்” என்றார் அண்ணா தமிழறிஞர்கள் ரா.பிசேதுப் பிள்ளை நாவலர் சோமசுந்தர பாரதியிடத்தில் அண்ணா, பெரியாரின் நிலைக்காகப் புரிந்த சொற்போர் பெரும் தீயாய்ப் பரவி இளைஞர்களை அவர்பால் இழுத்தது. அந்த ஆயிரக்கணக்கானோரில் ஒருவர்தான் நாவலர் நெடுஞ்செழியன் சேதுப்பிள்ளையோடு பேசிய பேச்சே ‘தீ பரவட்டும் என்று பின்னர் ஒரு சிறு புத்தகமாய் வெளியிடப்பட்டு புரட்சிசெய்தது. இப்படி மேடைப்பேச்சுகள் புத்தகமாய் வெளிவந்ததும் அண்ணாவால் தான். இலகுவாக நூல் வடிவம் பெரும் வகையிலேயே அவர் பேசினார் இந்த நூல்களும் இளைஞர்களை அவர்பால் திருப்பின

அண்ணாவின் பேச்சுக்கும் கருத்துக்கும் முன்பு இத்தமிழறிஞர்களின் வாதம் எடுபடவில்லை. ஆனாலும்,அண்ணாவிடம் மிகுந்த தன்னடக்கமும் பெரியோரை மதிக்கும் பண்பும் அமைந்திருந்தது. திருச்சியில், ஒருசமயத்தில் அண்ணா பேசவிருந்த அதே நாளில், நேரத்தில் நாவலர் சோமசுந்தர பாரதி பேசுகிறார் என்பதற்காகத் தனது பேச்சை ரத்துசெய்யச் சொன்ன பெருந்தன்மையும் இருந்தது. சோமசுந்தர பாரதியின் பேச்சுக்கு யாரும் போக மாட்டார்கள் என்றார் கூட்டத்தை ஏற்பாடு செய்த டி கே. சீனிவாசன். அதனால்தான், நமது கூட்டம் வேண்டாம் என்கிறேன் என அத்தமிழறிஞருக்கு எந்தச் சிறுமையும் வராமல் பார்த்துக் கொண்டார் முப்பத்து நான்கே வயதான அண்ணா

நீதிக் கட்சியின் களங்கம் துடைத்தஅண்ணாதுரை தீர்மானம்
தனது கடைசிக் கட்டத்தில் இருந்த நீதிக் கட்சிக்கு 1938-ன் இறுதியில் பெரியார் தலைவராகியிருந்தார். 1940-ல் கி.ஆ.பெ.விஸ்வநாதம் விலக்க அண்ணா பொதுச்செயலாளர் ஆனார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு ரூ.25,000 நிதி திரட்டி நாவலர் சோமசுந்தர பாரதி தலைமையில் வழங்கினார். பெரியாரின் தலைமை நீதிக் கட்சியைப் பிழைக்க வைத்தாலும் ஆங்கிலேயர்களுக்கு வால் பிடித்த கட்சி என்ற அவப்பெயரை நீதிக் கட்சியால் உதற முடியவில்லை. 1944-ல் சேலத்தில் பெரியார் வரைந்து, அண்ணா கொண்டுவந்த ‘அண்ணாதுரைதீர்மானம் ஆங்கிலேயர் கொடுத்த பட்டங்களையும் பதவிகளையும் நீதிக் கட்சியினர் துறக்கச் செய்தது அந்த அவப்பெயரைச் சிறிது துடைத்தது பெயர்களில் சாதியை எடுத்தது. சுயமரியாதை இயக்கமும் நீதிக் கட்சியும் இணைந்து ஒரு மக்கள் இயக்கமாய் மலரும் வகையில் நீதிக் கட்சியை ‘திராவிடர் கழக ‘மாய் மாற்றியது.

அண்ணாவின் கதை

கால ஓட்டத்தில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கின. 1946-ல், ‘கட்சியினர் கருப்புச் சட்டை அணிய வேண்டும் என்று பெரியார் விதித்த விதிகள் முதல் விரிசலைக் கொணர்ந்தது. அதை அணிய மறுத்ததோடு, ‘கருப்புச் சட்டை கழகத்தை மேலும் மக்களிடமிருந்து பிரிக்கும்’ என்றார் அண்ணா திராவிட நாடு கோரிக்கைக்கு ஜின்னாவிடம் பெரியார் ஆதரவு தேடிய விதம் அவ்வாண்டு அண்ணா கவிஞர் பாரதிதாசனுக்குப் பொற்கிழி தந்தது என்று ஒரு இடைவெளி உருவாகியிருந்தது. அண்ணா எதிலும் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் வரைந்த உருவகக் கதைகள் அவருக்கும் பெரியாருக்கும் இருந்த உறவையும் அது சிதைந்து போனதையும் உணர்த்தும் வகையில் படிப்பவர் மனத்தைப் பிழிந்தது.

15 ஆகஸ்ட் 1947 இந்தியாவின் சுதந்திர தினம் இப்பிளவின் உச்சகட்டமானது. சுதந்திர தினத்தை ‘துக்க தினம் ‘என்றார் பெரியார். அண்ணாவோ, “விடுதலைப் போராட்டம் நெடியது: இது நம் விடுதலைக்கான முதல் படி ” என்று பெரியாரின் கருத்துக்கு மாற்றாய் எட்டுப் பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பெரியார் பொறுத்துக்கொண்டார். ஆனால், மே 1948-ல் தூத்துக்குடி கருப்புப்படை மாநாட்டில் அண்ணா கலந்துகொள்ளவில்லை.

ஜூன் 1948-ல் கட்டாய இந்தி, பிரிந்திருந்தோரை மீண்டும் தற்காலிகமாய் இணைத்தது. தந்தை மனம் மாறி தனயனை ஈரோடு 23-24, 1948 அக்டோபர் மாநாட்டுக்குத் தலைமை தாங்க அழைக்கவும் வைத்தது. அண்ணாவை சாரட் வண்டியில் அழைத்துவந்து “உரிமையாளரிடம் சாவியை ஒப்படைக்க முடிவு கட்டிக்கொண்டேன்” என்று சொன்னபோதும். பெரியாரின் போக்கில் ஒரு மாறுதல் தென்படுவதாக உணர்ந்தார் அண்ணா

திரையுலகம் கண்ட புதுமை
‘வேலைக்காரி’, ‘நல்லதம்பி’ என்று படங்களுக்கு அண்ணா எழுதத் தொடங்கியிருந்தார். அவரது எழுத்தாற்றலைப் பிரதானப்படுத்தியே இப்படங்கள் எடுக்கப்பட்டன. ‘சட்டம் ஓர் இருட்டறை வழக்கறிஞரின் வாதம்தான் விளக்கு ‘கத்தியைத் தீட்டினாயே ஒழிய புத்தியைத் தீட்ட வில்லை நீ’, ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டும்’ என்ற அவரது வசனங்கள் தமிழ்த்திரை உலகு அதுவரை கண்டிராத கேட்டிராததைப் பேசின ‘திரைக்கதை வசனம் அண்ணாதுரை எம் ஏ என்பதைத் திரையில் பார்த்து ரசிகர்கள் பரவசம் அடைந்தார்கள் “தணிக்கை ஏதும் செய்யாமலிருந்தால் ஒரே திரைப்படத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடுவேன்” என்று சொல்லும் அளவுக்கு திரைப்படங்களின் மீது அவருக்கு நம்பிக்கையிருந்தது. அண்ணா எழுதிய ரங்கோன் ராதா நாடகமும் ‘வண்டிக்காரன்’ சிறுகதையும் கருணாநிதி திரைக்கதை வசனத்தில் திரைப்படங்களாயின. ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி சிறுகதைக்கு இராம. அரங்கண்ணல் திரைக்கதை வசனம் எழுதினார். கட்டுரைத் தலைப்புகளும்கூட பின்பு திரைப்படத் அவரது தலைப்புகளாயின.

ஆனால், பெரியாரோ அண்ணாவிடத்தில் முழு நேர அர்ப்பணிப்பு இல்லை என்று பின்பு குறை சொன்னார். 14 மே 1949-ல் ராஜாஜியைத் திருவண்ணாமலையில் ரகசியமாகச் சந்தித்த பெரியாரிடம் காரணத்தை விளக்க வேண்டும் என்று அண்ணா கேட்க அது எனது சொந்த விஷயம்’ என்றார் பெரியார் பின்பு 9 ஜூலை 1949-ல் சுமார் 30 ஆண்டுகள் இளைய மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டு, அவரைத் தனது வாரிசு என்றார் பெரியார் ‘சாவி’ கை மாறிப்போனது. உரிமையாளரும் மாறிப்போயிருந்தார். ஏன்? பெரியாருக்கு அரசியலின் மீது பெரும் அவநம்பிக்கை இருந்தது. அவர் சமூக மாற்றத்தை மட்டுமே விரும்பினார். அண்ணாவும் அவரது தம்பிகளும் அரசியல் கனவு கொண்டிருந்தனர் என்று அவர் புரிந்துகொண்டார்.

திராவிட நாடே இறுதி லட்சியம்!
சோர்ந்துபோய் காஞ்சிக்குச் சென்றுவிட்ட அண்ணாவை அழைத்து வந்து, திமுக தோன்ற ஒரு பெரும் காரணமாய் இருந்தார் பெரியாரின் அண்ணன் மகன் ஈ.வெ.கி.சம்பத் 17 செப்டம்பர் 1949 ராபின்சன் பூங்காவில், மழைக்கிடையே திமுக உருவானது. “பெரியாரே திமுகவுக்கும் தலைவர்” என்றார் அண்ணா “திகவுக்கும் திமுகவுக்கும் வேறுபாடு இல்லை. திராவிட நாடே இறுதி லட்சியம்’ என்றார்.

அண்ணாவின் கதை

1949-ல் ‘மாலைமணி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். திமுகவின் ஆரம்ப காலத்தில் அந்த நாளேடு முக்கியப் பங்காற்றியது. 1953-ல் திமுகவின் அதிகாரபூர்வமான நாளேடாக   நம் நாடு’ இதழைத் தொடங்கி, அதற்கும் ஆசிரியராக இருந்தார். இந்த இரண்டு ஏடுகளுமே வெகு காலம் தொடரவில்லை.

அண்ணா எழுதிய ‘ஆரிய மாயை’ நூல் 1951-ல் தடைசெய்யப்பட்டது. அண்ணாவுக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், மக்களிடையே எழுந்த எதிர்ப்பு பத்து நாட்களில் அவரை சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தது. தடைசெய்யப்பட்ட அண்ணாவின் மற்றொரு நூல் ‘இலட்சிய வரலாறு அரசு அந்நூலுக்கு விதித்த ரூ.3,000 ஜாமீன் தொகை, பின்பு நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்பட்டது.

அண்ணாவும் அவரது தம்பிகளும் திமுகவை வளர்ப்பதில் பம்பரம் போல் சுழன்றனர். ‘திராவிட நாடு திமுகவின் தாரக மந்திரமாயிற்று. பெரியாரோ அவர்களை மிகக் கடினமாகத் தாக்கினார் குமாரசாமி ராஜாவின் காங்கிரஸ் அரசு அண்ணா திமுகவினர் எழுத்துக்களுக்கும் படைப்புகளுக்கும் தடைவிதித்து, வழக்குகள் தொடுத்து அவர்களுக்கு நல்ல விளம்பரம் தேடித்தந்தது. இதற்கிடையே கருணாநிதியும் மற்ற தம்பிகளும் தமிழ்த் திரைத் துறையைத் தங்கள் முத்திரை எழுத்துகளால் கைப்பற்றியிருந்தனர் வசனங்களும் காட்சிகளும் தணிக்கைக்குத் தப்ப சிலேடையாக, ஜாடைமாடையாக, அண்ணா திமுகவைப் பற்றிய அறிமுகத்தைத் தந்துகொண்டே இருந்தன.

அன்பு மனம் கொண்ட அண்ணா
கலைவாணர், கே.ஆர்.ராமசாமி, சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்று திமுக வானம் திரை நட்சத்திரங்களால் ஜொலித்தது. எம்ஜிஆர் வந்த பிறகு, சிவாஜி கணேசன் 1956-ல் திமுகவை விட்டு காங்கிரஸுக்குப் போய்விட்டார். அவரது ‘கட்டபொம்மன்’ நாடகத்துக்குத் தலைமை தாங்கி வாழ்த்தியபோது அண்ணா சொன்னதுதான் “எங்கிருந்தாலும் வாழ்க!” என்ற புகழ்பெற்ற வாழ்த்து.

அண்ணாவுக்கும் கருணாநிதிக்கும் முதலிலிருந்தே ஒரு நெருக்கமான உறவு இருந்தது. திமுகவில் இல்லையெனினும் கலைவாணர் திமுக மாநாடுகளில் வில்லுப்பாட்டு நடத்தினார். ‘தீணா மூனா கானா’ என்று அவரது படத்தில் பாட்டு வைத்தார். ராமசாமி தனது பணத்தையெல்லாம் கட்சிக்காகக் கொடுத்தார். டி.வி.என். அண்ணாவுக்குக் கிடைத்த முதல் மணியானார். கே.ஆர் ராமசாமியும் சிறிது காலம் சிவாஜி கணேசனும் அண்ணாவின் ஆதரவில் காஞ்சியில் இருந்தனர். கே.ஆர்.ராமசாமி படத்தில் இல்லையேல் தனது கதையைப் படமாக்க வேண்டியதில்லை என்று சொன்ன மனம், அவருக்குப் பின்பு எம்.எல்.சி. தந்தது, ‘பராசக்தி’யில் கணேசன் இருக்கட்டும் என்று வாதாடியது எல்லாம் அண்ணாவின் பெரிய மனதுக்குச் சில உதாரணங்கள்.

ஒரே இரவில் அண்ணா, ராமசாமிக்காக எழுதியதுதான் ‘ஓரிரவு’ 49 காட்சிகளைக் கொண்ட 3 மணி நேர ‘ஓரிரவு’ நாடகத்தையும் ஒரே இரவில்தான் எழுதி முடித்தார். ‘ஓரிரவு’ ஆறு மாதங்கள் நடந்து புரட்சி செய்தது. நாடகத்தைக் காண நாகையிலிருந்து திருவாரூருக்கு மக்கள் ரயிலில் சென்ற அதிசயமும் நடந்தது. ‘தென்னாட்டு பெர்னார்ட் ஷா’ என்று அண்ணாவைப் பற்றி கல்கியைப் புகழ வைத்தது. பின்னர், அது திரைப்படமாக மாறியபோது, அதற்கான கதை வசனத்தையும் ஒரே இரவில் எழுதி முடித்தார் அண்ணா.அண்ணாவின் கதை

தனது பெயருக்கேற்ப அண்ணாவின் சகோதரப் பாசமே திமுகவைப் பெரிதும் வளர்த்தது. அவரது தலைமையில் திமுக ஒரு பெரிய குடும்பமாய் இயங்கியது. ஒவ்வொரு தொண்டனையும் முன்னணித் தலைவர்கள் தெரிந்துவைத்திருந்தார்கள் அவர்கள் வீடுகளில் தங்குவதும் அவர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில், அண்ணா இதர முன்னணியினர் கலந்துகொள்வதும் பழக்கமானது. திமுக ஒரு பெரிய குடும்பமானது. ஆனாலும், ரத்த உறவுகள் சிதையாமல் பார்த்துக்கொள்வதில் அண்ணா கவனமாய் இருந்தார். . ‘ஹோம்லேண்ட்’ துணை ஆசிரியர் எம்.எஸ்.வேங்கடாச்சலத்திடம் திருமணத்தை நடத்திவைக்கும் தனது காலில் விழக் கூடாது என்றும் அவரது பெற்றோர் காலில்தான் விழ வேண்டும் என்றும் தெளிவாய்ச் சொல்லிவிட்டார். அதற்கு ஒப்புக் கொண்ட பிறகே தேதி கொடுத்தார்.

அண்ணாவின் எளிமை மலைக்க வைக்கக் கூடியது. செருப்புகூட அணியாமல் அவர் பல காலம் இருந்ததாக அரங்கண்ணல் பதிந்திருக்கிறார். கைக்கடிகாரம் அணிந்ததில்லை. . பல நேரங்களில் சவரம்கூடச் செய்துகொள்ளாத அண்ணாவாகவே அண்ணா இருந்தார். தொண்டர்களின் இல்லங்களிலேயே தங்கினார். முதல்வரான பிறகும் அந்த வாழ்க்கைமுறையே தொடர வேண்டும் என்று விரும்பினார். அவர்களிடையே வளையவந்தார். அவர்கள் குடும்ப சுக துக்கங்களை அறிந்தார், பங்கெடுத்துக்கொண்டார். செல்வந்தர்களையும் ஆடம்பரத்தை விட்டு விலகியே இருந்தார்.

பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், தேங்காயும் உடைக்க மாட்டேன்!
ராஜேந்திர பிரசாத் நேருவுக்கு எதிராகக் கருப்புக் கொடி, இந்தி எதிர்ப்புப் போராட்டம், திருத்தணியில் எல்லாப் போராட்டம், பொதுக் கூட்டங்களில் தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளுக்காகக் குரல் கொடுத்தல், மாவட்ட மாநாடுகள், 1952 தேர்தலில் திராவிட நாடு கொள்கைக்கு ஒப்புக்கொண்ட 45  வேட்பாளர்களுக்கு ஆதரவு,

மும்முனைப் போராட்டம் என்று கட்சி வளர்ச்சிக்குப் புதுப்புது உத்திகளைக் கண்டுபிடித்துச் செயல்படுத்தினார் அண்ணா, பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியபோது. “பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், பிள்ளையார்க்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன்” என்றார்.

1955-லிருந்து ‘திராவிட நாடு இதழில் ‘தம்பிக்கு… ‘வாரந்தோறும் கடிதங்கள் வரையத் தொடங்கினார் அண்ணா அதற்கு முன்பும் 1938-ல் விடுதலை தொடங்கி ‘திராவிட நாடு வரை அவ்வப்போது கடிதங்களை எழுதி வந்திருக்கிறார் அண்ணா ஜனவரி 1969 வரை அவர் எழுதிய 290 கடிதங்கள் அண்ணன் நேரில் வந்து பேசுவதுபோலவே இருந்தன. ‘ஹோம்லேண்ட் ‘ ‘ஹோம்ரூல்’ இதழ்களில் ‘டியர்பிரதர்’ என்ற தலைப்பில் அண்ணாவின் 26 ஆங்கிலக் கடிதங்கள் வெளியாயின. அண்ணாவின் கடிதங்கள் மட்டுமே ஏறக்குறைய 3,000 பக்கங்கள் கொண்டவை. அவை உலக அரசியலிலிருந்து, தமிழர் நாகரிகம் வரை பேசின கட்சி முன் இருந்த சவால்களை எடுத்துக்கூறின. தம்பிகளே திமுக என்றன.

1957 தேர்தலில் 15 பேர் வென்றனர். இருவர் நாடாளுமன்றத்துக்குச் சென்றனர். திமுகவின் சட்டமன்றத் தலைமையை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவரானார் அண்ணா அவ்வாண்டு ஹோம்லேண்ட்’ ஆங்கில இதழைத் தொடங்கினார்.     1959-ல் சென்னை மாநகராட்சி கைக்கு வந்தது. கூடவே, கட்சியில் இருந்த புகைச்சலும் வெளியே வந்தது. திரைத் துறையினர் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் கட்சி திசை மாறிப்போனதாகவும் சம்பத் குறை சொன்னார். அதன் தொடர்ச்சியாக, இடையில் நெடுஞ்செழியனைப் பொதுச்செயலாளர் ஆக்கியிருந்த அண்ணா, 1960 சென்னை பொதுக்குழுவில் கட்சி இரண்டாக நின்ற நிலையில், மீண்டும் அவரே பொதுச்செயலாளரானார் அண்ணா மடாதிபதிபோல் செயல்படுவதாகக் குற்றம் சுமத்தினார் சம்பத். 1961-ல் வேலூரில் நடந்த பொதுக்குழுவில் சம்பத் தான் தாக்கப்பட்டதாகச் சொன்னார். கட்சி இரண்டாக உடையத் தொடங்கியது. ஒட்டவைக்க எடுத்த முயற்சிகள் தோற்றன. 9 ஏப்ரல் 1961 அன்று சம்பத் கண்ணதாசன் போன்றோர் தமிழ் தேசியக் கட்சி கண்டனர் அண்ணாவுக்கு சம்பத் வெளியேறியது மிகுந்த வேதனையைத் தந்தது.

காங்கிரஸை அச்சுறுத்திய திமுகவின் வளர்ச்சி
இந்நிலையில், 1962 தேர்தலில் 50 இடங்களை திமுக வென்று எதிர்க்கட்சியானது. ஆனால், காஞ்சிபுரத்தில் அண்ணா தோற்றிருந்தார். அது அவர் மாநிலங்களவைக்குப் போகக் காரணமானது. தனது கன்னிப் பேச்சில் தான் ஒரு திராவிடன் என்று பேசி, நாடெங்கும் திமுகவைத் திரும்பிப்பார்க்க வைத்தார். அவர் கேட்ட திராவிட நாட்டை நேரு பின்னர் அவையில் மறுத்தாலும் திமுகவின் வளர்ச்சி காங்கிரஸை அச்சுறுத்தவே செய்தது. 1963-ல் அரசியல் சட்டத்தைத் திருத்தி பிரிவினை கோருவதைத் தடைசெய்தது காங்கிரஸ். மாநிலங்களவையில்

அண்ணாவின் பேச்சுகள் அத்தனையும் முத்துகள் இந்தி வேண்டாம் என்பதற்கு அவர் எடுத்துவைத்த வாதங்கள் காலத்தைக் கடந்தும் நிற்பவை.

அண்ணாவின் கதை

விலைவாசி எதிர்ப்புப் போராட்டத்தில் வேலூர் சிறையில் இருந்த அண்ணா அக்டோபர் 1962 சீனப் படையெடுப்பைக் காரணம் காட்டி திராவிட நாடு கோரிக்கையை ஒத்திவைத்தார் பின்பு கைவிட்டார் திராவிட நாடு கோரிக்கையை திமுக விட்டுவிட வேண்டும் என்ற காங்கிரஸார் அவரை இப்போது ஏளனம் செய்தனர். அண்ணா சட்டை செய்யவில்லை. கட்சியைக் காப்பாற்ற அதுவே வழி என்றார்.

1963-ல் காமராஜர் இந்திய அரசியலுக்குப் போக பக்தவத்சலம் தமிழக முதல்வரானார். 1964-லிருந்து அரிசிப் பற்றாக்குறை ஒரு பெரும் பிரச்சினையானது. 1965-ல் மாணவர்களின் இந்திப் போராட்டத்தை காங்கிரஸ் கையாண்ட விதம் அக்கட்சிக்குப் பெரும் வெறுப்பைச் சம்பாதித்துத் தந்தது. 1967 தேர்தலில் வலது சுயராஜ்ய கட்சி, இடது கம்யூனிஸ்ட்டுகள் என்று முற்றிலும் மாறுபட்ட அரசியல் சித்தாந்திகளை திமுக அணியின் கீழ் அண்ணாவின் சாணக்கியம் கொண்டு வந்திருந்தது. எம்ஜிஆர் முதன்முறையாகப் பரங்கிமலையில் நிறுத்தப் பட்டார். அவரது முகத்தைக் தக் காட்டினாலே முப்பதாயிரம் வாக்குகள் விழும் என்றார் அண்ணா, எம்ஜிஆரோ ராதாவால் சுடப்பட்டார். குண்டடிபட்ட எம்ஜிஆர் இன்னும் சக்தி வாய்ந்தவராயிருந்தார். மருத்துவமனையிலிருந்து அவர் வாக்கு கேட்டது திமுக வெற்றிக்குப் பெரும் துணை புரிந்தது.

இப்படியெல்லாமும் ஒரு அரசியல் தலைவர் இங்கே இருந்தார்!
திமுக 138 தொகுதிகளில் வெற்றிபெற்று, அறுதிப்பெரும்பான்மை பெற்றது. காமராஜர் தோற்றுப்போனார். அண்ணா வேதனைப்பட்டார். ஆட்சி வெகு சீக்கிரமே கைக்கு வந்துவிட்டதாக வருந்தினார். அந்தத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிப்பதையே முழுநேர வேலையாக இருந்த பெரியாரைக் கண்டு வாழ்த்துபெற வெற்றிபெற்ற அண்ணா திருச்சிக்குப் புறப்பட்டார். பெரியாரோ நெகிழ்ந்துபோனார். ஆமாம். இப்படியெல்லாமும் ஒரு அரசியல் தலைவர் இங்கே இருந்தார்.

1967, மார்ச் மாதம் 6-ம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழிலேயே பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார். அண்ணாவையும் சேர்த்து ஒன்பது பேர் கொண்ட துறை அமைச்சர் அமைச்சரவை கருணாநிதி பொதுப்பணித் அதுவரையில் பெரும் அதிகாரிகளையும் உயர் வர்க்க மக்களையும் மட்டுமே கண்டிருந்த தலைமைச் செயலகம் சாதாரண, சாமானிய ஊர் மக்கள் உரிமையோடு உள்ளே வருவதையும் போவதையும் கண்டது. சாமானியர்கள் ஆட்சிக்கு வந்திருந்தனர். மாவட்டங்களிலும் மக்கள் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் குறைகளை மாவட்ட நிர்வாகத்துக்கு நேரடியாக எடுத்துச்சென்றனர்.

அண்ணாவின் கதை

1967 ஏப்ரல் 14 சித்திரை முதல்நாளில், ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப் பலகையைத் திறந்துவைத்தார். ஜூன் 9 அன்று தலைமைச் செயலகத்தில் திருவள்ளுவர் படத்தையும் திறந்துவைத்தார். சுயமரியாதை மணங்களுக்கு சட்ட ஒப்புதல், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கை என்று அண்ணா வேகமாகச் செயல்பட்டார். எனினும், திராவிட நாடு கேட்டதற்கான காரணங்கள்* இன்னும் அப்படியே இருக்கின்றன என்றார். அவரது ரூபாய்க்குப் படி அரிசித் திட்டம் சென்னை, கோவையில் மட்டும் செயல்படுத்தப்பட்டு, பின்பு நிதியின்மையால் கைவிடப்பட்டது.

1968-ல் அண்ணா மேற்கொண்ட அமெரிக்கப் பயணம் பெரும் செய்தியானது. யேல் பல்கலைக்கழகம் அண்ணாவை சப் ஃபெல்லோ வாக்கி அமெரிக்காவுக்கு அழைத்து தமிழகத்தைப் பெருமைப்படுத்தியது.

நாகரிகத்தின் உச்சமல்லவோ அண்ணா
1968-ல் அண்ணாவின் அரசு நடத்திய உலகத் தமிழ் மாநாடு தமிழரின் தொன்மையை தமிழின் பெருமையை உலகுக்குச் சொன்னது. தமிழறிஞர்களின் சிலைகளைக் கடற்கரைச் சாலைகளில் நிறுவினார். அண்ணா தனது இல்லத் திருமண விழாபோல் நேரில் சென்று காமராஜர், ராஜாஜி ஆகியோரை அழைத்தார் நாகரிகத்தின் உச்சமல்லவோ அண்ணா யார் கண்பட்டதோ? அவருக்குப் புற்றுநோய் என்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்கு அமெரிக்கா சென்றார் அண்ணா அவரது உடல்நிலை கருதி தமிழ்நாடு பெயர் சூட்டு விழாவுக்குப் போக வேண்டாம் என்றனர் மருத்துவர்கள். “தமிழ்நாடு பெயர் மாற்ற மகிழ்ச்சி விழா நடைபெறும் இன்றைய தினம் பேசுவதாலேயே இந்த உடலுக்கு ஊறு நேரிடும் என்றால், இந்த உடல் இருந்தே பயனில்லை” என்று சொல்லிவிட்டார் அண்ணா. அவர் கடைசியாகக் கலந்துகொண்டது 1969 ஜனவரி 4 அன்று நடந்த கலைவாணர் சிலைத் திறப்பு விழாவில்தான்.

அண்ணாவின் கதை

திரும்ப சென்னையில் நடந்த இரண்டாவது அறுவை சிகிச்சையை ஒத்திப்போட முடியுமா என்றார் அண்ணா “நல்ல நாள் பார்க்கிறீர்களா” என்று கேட்ட டாக்டர் மில்லரிடத்தில் அண்ணா சொன்னார். “இல்லை இல்லை. ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன் அதை நாளைக்குள் முடித்துவிடுவேன் அதற்குப் பின் இறந்தாலும் கவலை இல்லை.”

3 பிப்ரவரி 1969 அண்ணாமறைந்தார். தமிழர்கள்கடலென வந்து அஞ்சலி செலுத்தினர். அதுபோன்ற கூட்டத்தை அதுவரை உலகு கண்டதில்லை. ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. ஆனால், அவர் ஊட்டிய தமிழர் உணர்வும் அவர் முன்னெடுத்த தமிழ் அரசியலும் தமிழும் தமிழரும் உள்ளவரை நிலைத்திருக்கும்; கூடவே, அண்ணாவின் பெயரும்!

“பேரறிஞர் அண்ணா : மொழி, நிலம், அடையாளத்தின் அரசியல் “

MUST READ