spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைராகுலுக்கு நேரடி மிரட்டல்! தேர்தல் ஆணையம் பிரஸ் மீட்! மோடி அரசின் அடுத்த திட்டம்!

ராகுலுக்கு நேரடி மிரட்டல்! தேர்தல் ஆணையம் பிரஸ் மீட்! மோடி அரசின் அடுத்த திட்டம்!

-

- Advertisement -

வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர்கள் ராகுல்காந்தியின் எந்த குற்றச்சாட்டையும் தவறு என்று மறுக்கவில்லை. மாறாக அவர் மீது அவதூறு பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளனர் என்று ஊடகவியலாளர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ராகுல்காந்தியின் வாக்காளர் உரிமை பேரணி மற்றும் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர் சந்திப்பு குறித்து ஊடகவியலாளர் சத்யராஜ அளித்துள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-  எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி நேற்று பீகாரில் மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்துகிறார். வாக்காளர் உரிமைப் பேரணி என்று தலைப்பில் அந்த பேரணியை நடத்தினார். பேரணி நடைபெறுகிற அதே நேரத்தில் இந்தியாவின் தேர்தல் ஆணையர்கள் மூவரும் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். ராகுல்காந்தியின் பேரணி நாடு முழுவதும் தலைப்பு செய்தி ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே தேர்தல் ஆணையம் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தியதா என்கிற கேள்வி எழுகிறது? அதற்கு காரணம் ராகுல்காந்தி ஒரு வாரத்துக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து, எப்படி எல்லாம் வாக்குகள் திருடப்பட்டிருக்கிறது என்பதை மிக விரிவாக ஆதாரங்களுடன் நிருபித்தார். அந்த ஆதாரங்கள் எல்லாம் பொய் என்று தேர்தல் ஆணையம் தற்போது வரை ஒரு வார்த்தைகள் கூட சொல்லவில்லை. அது முறைகேடானது என்று சொல்லவில்லை. ஏனென்றால் அவை எல்லாம் தேர்தல் ஆணையம் கொடுத்த தரவுகளை எடுத்துக்கொண்டு அதில் என்ன என்ன தவறுகள் உள்ளன? என்ன முறைகேடு நடந்துள்ளது? என்று பவர் பாய்ண்ட் போட்டு பேசினார். ராகுல் சொல்லிய குற்றச்சாட்டில் என்ன தவறுகள் இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் பேசி இருக்க வேண்டும். ஆனால் அவை எதையும் பேசவில்லை.

ராகுல்காந்தி பீகாரில் பேரணி நடத்துகிற நேரத்தில், தேர்தல் ஆணையர்கள் சரியாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார்கள். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார், வாக்காளர்களை குறிவைத்து தேர்தல் ஆணையத்தின் தோளில் துப்பாக்கி வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர். பொய் குற்றச்சாட்டுகளை கண்டு மக்கள் அஞ்ச மாட்டார்கள். தேர்தல் ஆணையமும் பயப்படாது என்று சொல்கிறார். ஆனால் ராகுல்காந்தி, தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களை காண்பித்து ஒரே வீட்டில் 80க்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். பூஜியம் என்கிற வீட்டு எண்ணில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் உள்ளனர் என்பது உள்ளிட்ட பல்வேறு தவறுகளை சுட்டிக்காட்டினார். தேர்தல் ஆணையம் ராகுல் காண்பித்த ஆவணங்கள் தவறானது. தவறுகள் நடைபெறவில்லை என்று உண்மையான ஆவணங்களை காண்பித்து இருக்க வேண்டும். ஆனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார், ராகுல்காந்தி தேர்தல் ஆணையம் மீது அவதூறு பரப்புகிறார். வாக்கு திருட்டு என்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று சொல்கிறார்.

மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் மாலை 5 மணிக்கு மேல், திடீரென வாக்குகள் கூடியது. அது எப்படி நடைபெற்றது? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். தேர்தல் நடைபெற்ற அன்று மாலை 5 மணிக்கு 58 சதவீத வாக்குகள் பதிவானதாக சொன்ன ஆணையம், மறுநாள் 66.05 சதவீதம் என்று வாக்குகள் பதிவாகியதாக சொல்கிறீர்கள். கிட்டத்தட்ட 7.8 சதவீதம் வாக்குகள் அதிகமாகி உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் 12 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 85 எம்எல்ஏக்கள் உள்ளனர். அந்த வாக்குச்சாவடிகளில் மட்டும் எப்படி திடீரென வாக்குகள் அதிகமாகியது?. இவற்றை எல்லாம் ஆதாரத்தோடு ராகுல்காந்தி கேள்வி எழுப்புகிறார். ஆனால் அதற்கு பதில் சொல்லாமல், அவதூறு பரப்புகிறார் என்று தேர்தல் ஆணையர்கள் சொல்கிறார்கள். 2024 மக்களவை தேர்தலின்போது மோடி, நாடு முழுக்க இஸ்லாமியர்களை குறித்து அவதூறாக பேசினார். தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது? சிறுபான்மை மக்களை ஊடுருவல்காரர்கள் என்று சொன்னார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முஸ்லீம் லீகின் தேர்தல் அறிக்கை என்று மோடி விமர்சித்தார். ஆனால் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

தேர்தல் ஆணையத்தின் சட்டத்தை அவசர அவசரமாக திருத்தி, தேர்தல் குறித்த சிசிடிவி காட்சிகளை யாருக்கும் தர வேண்டியது இல்லை என்று திருத்துகிறீர்கள். மற்றொருபுறம் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய தனி சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதற்கு காரணம் தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு ஒரு மாதிரியாக பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகியோர், அந்த குழுவில் இடம்பெற வேண்டும் என்று இடைக்கால தீர்ப்பை வழங்கியது. ஆனால் மோடி அரசு, புதிதாக உருவாக்கிய  சட்டத்தில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் இடம்பெறுவார். ஆனால் தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, பிரதமரால் பரிந்துரைக்கப்படும் கேபினட் அமைச்சர் இருப்பார். தற்போது மோடியும், அமித்ஷாவும் அந்த குழுவில் உள்ளனர். ராகுல்காந்தியிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் ஞானேஸ்குமாரை தேர்தல் ஆணையராக நியமித்தார்கள்.

 

வருகிற நவம்பர் மாதம் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்கிறோம் என்கிற பெயரில் 65 லட்சம் பேருக்கு வாக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள் சொல்கிற 11 ஆவணங்களில் எதுவும் இல்லை என்கிறார்கள். அந்த 11 ஆவணங்களில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பேன் கார்டு போன்ற எந்த ஆவணங்களும் கிடையாது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 நாட்களுக்கு முன்பு
தீர்ப்பு சொன்னது. நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில் மீண்டும் சேர்க்க பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். 11 ஆவணங்கள் மட்டுமின்றி ஆதாரையும் ஒரு ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சூரியகாந்த் இந்த தீர்ப்பை வழங்க காரணம், எதிர்க்கட்சிகள் இறந்துவிட்டதாக சொல்லி நீக்கப்பட்ட பலரும் உயிருடன் உள்ளனர் என்று அவர்களை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினர். தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மறுஆய்வு செய்து பலரை நீக்குவது எதற்காக என்றால், பிகார் தேர்தலில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவதற்காக என்று ஆதாரத்தோடு எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. அதற்கு காரணம் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி முஸ்லீம் மக்கள் வாழும் பகுதிகளில்தான் அதிகமாக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

"தமிழகத்தில் 12.55% வாக்குப்பதிவு"- தேர்தல் ஆணையம் தகவல்!

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் முதல் 5 மாவட்டங்கள், முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளாகும். இதுதான் சந்தேகத்தை கிளப்புகிறது. எதிர்க் கட்சிகள் நீக்கப்பட்டவர்களின் முழுமையான விவரங்களை கேட்டபோது, தேர்தல் ஆணையம் தர மாட்டோம் என்று முரண்டுபிடித்துக் கொண்டிருந்தது. உச்ச நீதிமன்றம், 65 லட்சம் பேரின் விவரங்களை பூத் வாரியாக பிரிண்ட் செய்து ஒட்ட வேண்டும். அனைத்து டிஜிட்டல் வழிகளிலும் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. ஆனால் தற்போது வரை தேர்தல் ஆணையம் அதை வெளியிடவில்லை. அப்போது தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள், பொதுமக்களுக்கு ஏதோ ஒரு வகையில் மிகப்பெரிய அவநம்பிக்கை எழுந்துவிட்டது. அதனுடைய வெளிப்பாடாக தான் ராகுல்காந்தி மிகப்பெரிய பேரணி நடத்துகிறார். அவர் அவதூறு பேசிவிட்டு பேரணியை நடத்தவில்லை. தன்னுடைய பேரணிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து கர்நாடக தேர்தலில் என்ன என்ன முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்று ஆதாரத்தை குவித்து விட்டார். அந்த ஆதாரங்கள் எல்லாம் தவறு என்று இதுவரை தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை.

நேற்று தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்து, ராகுல்காந்தியின் மீது அவதூறு பரப்பியுள்ளனர். நாட்டின் குடிமக்களாகிய நாம் தேர்தல் நடைமுறைகள் மீது பல சந்தேகங்கள் இருக்கிறது. அதற்கு பதில் சொல்லுங்க என்று கேட்கிறோம். ஆனால் அவர்கள் எந்த பதிலும் சொல்லாமல் மழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போதாவது தேர்தல் ஆணையம் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கிறதா? என்று பார்ப்போம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ