“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல; அது திமுக அரசியலின் அடிப்படை தத்துவமாகக் கருதப்படுகிறது. இந்த நிலைப்பாட்டின் வரலாறும், அரசியல் பொருளும் புரிந்துகொள்ளப்படாமல் பல்வேறு விமர்சனங்களும் தவறான விளக்கங்களும் இன்றளவும் முன்வைக்கப்படுகின்றன.


1962-ல் இந்தியா – சீனா போருக்குப் பிறகு நமது உரிமையை நம் நாட்டில், நம் நாட்டினரிடம் இருந்துதானே பெற முடியும் என உணர்ந்த அறிஞர் அண்ணா ‘திராவிடநாடு’ கோரிக்கையைத் தளர்த்தினார். இதனால் திமுகவில் இருந்து EVK.சம்பத் வெளியேறினார். இருப்பினும், திமுக பிரிவினைவாதக் கட்சி என்ற குற்றச்சாட்டு சில தேசியக் கட்சிகளாலும், வடஇந்திய அரசியல் வட்டாரங்களாலும் தொடர்ந்தது.
1969-இல் அறிஞர் அண்ணா மறைவிற்குப் பிறகு, தி.மு.கவைத் தலைமையேற்று வழி நடத்திய கலைஞரின் முழக்கமே “மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!”. இதனையே பிற்காலத்தில் நீதியரசர்_ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து மாநில உரிமைகளை வகுத்தார். 16-4-1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாநில உரிமைக்கான தீர்மானத்தை ஏற்று ஆலடி அருணா பேசியது, அவரின் சிறந்த பேச்சுகளில் ஒன்று. இன்று ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, கூட்டணி ஆட்சி எனத் தேர்தல் காலத்தில் பரபரப்புடன் பேசப்படுகிறது. ஆனால் திமுகவின் நிலைப்பாடான “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்பதன் முழுப் பொருளை அறியாமலும், புரியாமலும், அறிந்திருந்தாலும் அரசியலுக்காக, கூட்டணிக்காக, கூடுதல் தொகுதிக்காக இன்று பல விவாதங்கள் நடக்கிறது.
கூட்டாட்சி vs கூட்டணி ஆட்சி
“மத்தியில்_கூட்டாட்சி” கூட்டாட்சி என்பது வேறு; கூட்டணி ஆட்சி என்பது வேறு. ஒன்றிய அரசில் திமுகவின் நிலைப்பாடு கூட்டாட்சி, கூட்டணி ஆட்சியல்ல. இந்தியாவில் மொழி, பண்பாடு, நிலப்பரப்பு, தட்பவெப்பம், மக்கள்தொகை என மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. பல தேசங்களைக் கொண்ட நாடு தான் இந்தியா. இந்தப் பன்முகத் தன்மைக்கு ஊறு ஏற்படாத வகையில் ஒன்றிய அரசு இயங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் 1′ நவம்பர் 1956 அன்று பிரிக்கப்பட்டபோது கூட்டாட்சித் தத்துவம் உதித்தது. அதை, தி.மு.க உயர்த்திப் பிடித்தது. மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாட்டின் நிலப்பரப்பு சுருங்கியது, “அந்தப் பகுதியும் இந்தியாவுக்குள் தானே இருக்கு” என்று காமராசர் சமரசம் செய்தார்.
இதே போலத்தான் மொழி, சமூகநீதி, கல்வி, வரி-நிதி, நதி என மாநில உரிமைகள் நசுக்கப்பட்டன. இந்த உரிமையை ஓரளவு பெற்ற தமிழ்நாடு தழைக்கிறது பல மாநிலங்கள் தவிக்கிறது. இதற்கு 69% இட ஒதுக்கீடே சிறந்த சான்று. மாநிலங்களின் உரிமைக்குரல் ஒன்றிய அரசில் ஒலிக்க, ஓங்க கூட்டாட்சி அவசியம். அநேக மாநிலத்தில் தேசியக் கட்சி நிர்வாகிகள் மாநில உரிமையைப் உறக்க பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இது தலைகீழ் என்பதே நமக்குத் தலைகுனிவு. இதற்கு NEET, OC EWS சிறந்த எடுத்துக்காட்டு. “மாநிலத்தில்_சுயாட்சி” 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களால் ஆனதே இந்தியா. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி குணமுண்டு. சுயாட்சி என்பதை ஏதோ சுயநல ஆட்சி என்றோ, பிறருடன் சேராத ஆட்சி என்றோ பொருள் கொள்வதற்கல்ல.
மாநிலத்தில் சுயாட்சி என்றால்?
சுயாட்சி என்பது ஒன்றிய அரசைச் சார்ந்து, நம்பி, ஏங்கி, அதன் தயவில் ஆட்சி செய்யாமல், தங்கள் மாநிலத்தின் உரிமையை, அடிப்படையை நிர்ணயிக்கும் உரிமையை அம்மாநில அரசே முடிவு செய்வதாகும். ராணுவம், வெளியுறவு, பணம், சர்வதேச விமானம், கப்பல் மற்றும் வரி பகிர்வு போன்ற அடிப்படை விடயங்களை ஒன்றிய அரசு கவனிக்க வேண்டும். மற்றவைகளை மாநிலங்களே கவனித்துக் கொள்வதே சுயாட்சி. அண்ணா உருவாக்கிய தி.மு.க, கலைஞர் வகுத்த “மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி” என்பதில் சமரசம் செய்யாமல் இன்றும் அரசியல் செய்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
கூட்டாட்சி, சுயாட்சி வார்த்தைகளை முழுமையாகப் புரிந்து அரசியல் செய்யும் இயக்கம் தான் திமுக. மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை இதுவரை தமிழ்நாடு பார்த்ததில்லை. தமிழ்நாட்டில் தேசியக் கட்சிக்கு அதிகாரம் தரும் நிலையில் தமிழர்களும் இல்லை. தேசியக் கட்சிக்கு அதிகமான தொகுதிகளை வழங்கிய போதெல்லாம் மாநிலக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்தது இல்லை என்பதே தமிழக வரலாறு.
2026ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் NDA ஆட்சி என பாஜக சொல்லிக்கொண்டு அதிக இடங்களைக் கேட்கிறது. ஆனால், ADMK இதனைத் தவிர்க்கிறது. இதே போல, INDIA கூட்டணியில் தமிழ்நாட்டில் காங்கிரசு முரண்டு பிடிக்கிறது. இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவைத் தருகிறோம் என மாநிலக் கட்சிகள் சொல்லலாம். ஒன்றியத்தில் தேசியக் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் இந்நிலை மாறலாம். சில வாரங்கள் அரசியல் சதுரங்கத்தில் காய்கள் இடமாறும், காயங்களும் காட்சிகளும் மாறும். ஆனால் திமுக வலியுறுத்தும் “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற அடிப்படை கோட்பாடு மாறாது என்பதே அதன் அரசியல் நிலைப்பாடு.
இவ்வாறு பார்க்கும்போது, இந்த முழக்கம் ஒரு தேர்தல் வசனமல்ல; அது இந்திய ஒன்றியத்தின் அமைப்பு, மாநிலங்களின் உரிமை மற்றும் சமூகநீதி அரசியலை இணைக்கும் கோட்பாட்டு வடிவமாக திகழ்கிறது.


