Homeசெய்திகள்கட்டுரைஉலகையே திரும்பிப் பார்க்க வைத்த உன்னத தமிழர்… கூகுள் சிஈஓ சுந்தர் பிச்சை பிறந்த தின...

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த உன்னத தமிழர்… கூகுள் சிஈஓ சுந்தர் பிச்சை பிறந்த தின சிறப்புப் பதிவு!

-

மனிதனாகப் பிறந்தால் எதையாவது சாதிக்க வேண்டும் என்று எப்போதும் சொல்லப்படுவதுண்டு. ஆனால் அப்படி எல்லாராலும் சாதித்துவிட முடிவதில்லை. ஏனெனில் சாதனை என்பது சாதனையாளர்களுக்கு சொந்தமானது.

தன் வாழ்நாளில் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு மணி நேரத்தையும், ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியையும் தானே செதுக்கியவர்களால் மட்டுமே அனைவரும் வியந்து திரும்பி பார்க்கும் சாதனைகளைப் படைக்க முடியும். அப்படி தமிழகத்தில் பிறந்து உலகையே திரும்பி பார்க்க வைத்தவர் சுந்தர் பிச்சை.

அவரைப் பற்றி நாம் ஏராளம் தெரிந்து வைத்திருக்கிறோம். இருந்தாலும் இன்று அவர் பிறந்தநாள் என்பதால் அவரையும் அவரின் சாதனையும் நினைவு கூர்ந்து பெருமை கொள்வோம்.

1972-ல் மதுரையில் ரகுநாதா பிச்சை மற்றும் லெட்சுமி பிச்சை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் சுந்தர ராஜன்.

சுந்தர் பிச்சையின் தந்தை ஜிஇசி நிறுவனத்தில் மின் பொறியியலாளராக பணியாற்றினார். எனவே அப்போதே சுந்தர் பிச்சை வீட்டில் தொலைபேசி இருந்தது. அது தான் சுந்தர் பிச்சைக்கு டெக்னலாஜி மீது அதிக ஆர்வம் ஏற்பட அடித்தளமாக அமைந்தது.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் காரக்பூரில் உள்ள ஐஐடியில் உலோகப் பொறியியல் பிரிவில் பட்டம் படித்தார் சுந்தர் பிச்சை. பின்னர் அமெரிக்க ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் உதவித் தொகையுடன் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவே மேல் படிப்புக்காக அமெரிக்க பறந்தார்.

சுந்தர் பிச்சை ஐஐடி கரக்பூரில் படித்துக் கொண்டிருக்கும்போது அஞ்சலி என்ற பெண்ணைச் சந்தித்து பழகினார். இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். எனவே காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு காவ்யா மற்றும் கிரண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சுந்தர் பிச்சைக்கு எப்போதும் டெக்னலாஜி மீது அதிக ஆர்வம் இருந்ததால் அப்போதும் இப்போதும் டெக்னலாஜி என்றாலே நம் நினைவுக்கு வரும் அமெரிக்காவின் சிலிகான் வேலி பகுதிக்குள் நுழைந்து விட அதிக ஆர்வம் காண்பித்து வந்தார். அவர் ஆசைப்பட்ட படியே

சிலிக்கான் வேலியில் உள்ள செமி கண்டக்டர் தயாரிப்பு நிறுவனத்தில் பொறியாளராகவும் தயாரிப்பு மேலாளராகவும் அவருக்கு வேலை கிடைத்தது. அதையடுத்து 2004-ம் ஆண்டு சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார்.

ஆரம்பத்தில் ஒரு சிறிய குழுவில் கூகுளின் தேடல் பகுதியில் வேலை பார்த்தார். சுந்தர்பிச்சை கூகுளில் சேர்ந்த நேரத்தில் கூகுள் தேடுதல் எந்திரம் ஆக மட்டுமே இருந்தது. கூடவே மைக்ரோசாப்ட், Yahoo உள்ளிட்ட நிறுவனங்களும் கூகுளுக்கு பெரும் போட்டியாக இருந்தது. மேலும் கூகுளுக்கு என்று தனியாக Browser அப்போது இருக்கவில்லை. எனவே மற்ற நிறுவங்களையே சார்ந்து இருக்க வேண்டியிருந்தது.

எனவே கூகுள் தங்களுக்கென்று தனியாக ஒரு Browser உருவாக்க வேண்டும் என்று முதல் அடி எடுத்து வைத்தது சுந்தர் பிச்சை தான். 2008 ஆம் ஆண்டு Google Chrome Browser வெளியிடப்பட்டது பின்னர் Chrome Browser-ல பல வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து மக்களின் ஆஸ்தான Browser ஆக மாற்றியதில் பெரும்பங்கு வகித்தவர் சுந்தர் பிச்சை.

பின்னர் யூடியூப் செயலில் விளம்பரங்கள் வரவைத்து நிறுவனத்திற்கு அதிக வருவாய் ஈட்டிக்கொடுத்தார். கூகுள் மேப் செயலியிலும் சுந்தர் பிச்சையின் பங்கு அபாரமாக இருந்தது.

இப்படி சுந்தர் பிச்சை தொட்டதெல்லாம் பொன் ஆனது. அதையடுத்து சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனத்தில் அடுத்தடுத்து பெரிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டு வந்தது.

பின்னர் கூகுளின் நிறுவனர்கள் லாரி பேஜ், செர்ஜி ப்ரின் இருவரும் அல்பாபாட் நிறுவனத்தின் பொறுப்புகளை கவனிக்க சென்றதும் தனக்கு பின்னர் கூகுளை திறமையான கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவெடுத்து சுந்தர் பிச்சை வசம் கூகுளின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தனர்.

2015ல் அதிகாரபூர்வமாக கூகுள் நீறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அதிகாரியாக அறிவிக்கப்பட்டார் சுந்தர் பிச்சை.

அதன்பிறகு கேட்கவா வேண்டும். ஓவர்நைட்டில் உலக பேமஸ் ஆனார் சுந்தர் பிச்சை. ஒரு இந்தியன் உலகத்தையே கைக்குள் வைத்திருக்கும் நிறுவனத்தின் தலைவர் ஆகிவிட்டார் என்று இந்தியன் அனைவரும் பெருமையுடன் மார் தட்டிக் கொண்டனர். அப்போதில் இருந்து தற்போது வரை சுந்தர் பிச்சை அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக தொடர்ந்து வருகிறார்.

இன்று டெக்னலாஜி குறித்த மக்களுக்கு ரோல் மாடல் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு அனைவரும் சொல்லும் பெயர் சுந்தர் பிச்சை. கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்று வள்ளுவர் சொன்ன வாக்கிற்கு எடுத்துக்காட்டாக நம்மிடையே வாழ்ந்து காட்டிக் கொண்டிருப்பவர் தான் நம் சுந்தர் பிச்சை! அவரின் சாதனைகள் தொடரும். தொடர்ந்து கொண்டே இருக்க நாமும் வாழ்த்துவோம்!

MUST READ