மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தியின் பேச்சை கேட்டு ராகுல்காந்தி, தவெக உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தால், அது தமிழ்நாட்டில் காங்கிசு கட்சிக்கு முடிவுரை எழுதுவதாக அமைந்துவிடும் என்று வல்லம் பஷீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக திராவிட வெற்றிக் கழக முதன்மை செயலாளர் வல்லம் பஷீர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- அண்மையில் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் ஆகியோர் டெல்லியில் ராகுல்காந்தியை தனியாக சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பங்கு இல்லை என்று சொன்னதற்கு பிறகு இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்து உறுதி ஆகிறது. அடுத்த வாரம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தமிழகம் வருகிற போது மறைமுகமாக விஜயை சந்திக்க வாய்ப்புகள் உள்ளன. அப்போது காங்கிரஸ் தரப்பில் 70 தொகுதிகளை கொண்ட பட்டியலை விஜயிடம் வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

சர்ச்சைக்குரிய இரண்டு நபர்கள், ராகுல்காந்தியை சந்தித்து உள்ளனர். இதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதை திமுக நிர்வாகிகள் உணர்ந்தே இருக்கிறார்கள். 2006ல் கலைஞர் மைனாரிட்டி ஆட்சி அமைத்தார். ஆனால் ஆட்சியில் யாருக்கும் பங்கு தரவில்லை. ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது விஜயின் வருகைக்கு பிறகு கூர்தீட்டப்பட்டு இருக்கிறது. விஜய் அப்படி சொல்கிறபோதே இடதுசாரிகள் இது ஆர்எஸ்எஸ்-ன் குரல் என்று கண்டுகொண்டனர். அவர் ஆர்எஸ்எஸ்ன் குரலாகவே ஒலித்தார்.

விஜய் கூட்டணி ஆட்சி என்று சொன்னபோது, எந்த கட்சியும் அதை கண்டுகொள்ள வில்லை. ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்டவர்கள் கூட அவருடைய பேச்சை ஆதரிக்கவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவு அங்கே போய் நிற்கிறது. ராகுல்காந்தி காங்கிரசுக்குள் ஆர்எஸ்எஸ் ஊடுருவிவிட்டது என்று தனது பதவியை ராஜினாமா செய்கிறபோது சொன்னார். அவருடைய கருத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறபோது, பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் ஆகியோருடைய நடவடிக்கைகள் அதை உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.
எனக்கு சந்தேகம் என்ன என்றால், கே.சி.வேணுகோபால் எதற்காக மறைமுகமாக விஜயை சந்திக்க வேண்டும்? திமுகவிடம் சொல்லிவிட்டே போய் விஜயை சந்திக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரேமலதா விஜயகாந்தை போன்றாவது, வெற்றி தான் தங்களுடைய இலக்கு என்று கருத்தை வெளிப்படுத்த வேண்டும். அதேபோன்று காங்கிரசும் தங்களுக்கு கூட்டணியில் அதிக இடங்களும், அதிகாரத்தில் பங்கும்தான் கொள்கை. அதை யார் கொடுக்கிறார்களோ?, அவர்களிடம் போய் நாங்கள் சேர்ந்துவிடுவோம் என்று அறிவித்துவிட வேண்டும்.

நீங்கள் ஒருபுறம் திமுக ஏன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்த குழு அமைக்கவில்லை? ஏன் தேர்தலுக்கான பணிகளை தொடங்கவில்லை என்று திமுக மீது குற்றங்களை சுமத்துகிறார்கள். ஆனால் திமுகவினர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். எஸ்.ஐ.ஆரை முழுமையாக எதிர்கொண்டது திமுக தான். திமுகவுக்கு அடிப்படை கட்டமைப்புகள் உள்ளன. அவர்களுக்கு எப்போது தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்பது தெரியும். ஆனால் இவர்கள் தொடர்ந்து பொய் பேசிக்கொண்டு, மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்கான கண்ணியம் சிதைக்கப்படுகிறது.
தேசிய அளவில் இடதுசாரிகளின் தலைமை பீடமாக கருதப்பட்ட காங்கிரஸ், இன்றைக்கு அதிக இடங்களும், கூட்டணி ஆட்சியில் பங்கும் கிடைத்தால் தாங்கள் பாஜகவோடு கூட்டணி வைக்கத்தயார் என்கிற நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறதா? என்கிற கேள்வி எழுகிறது. அதேவேளையில் ராகுல்காந்தியின் தலைமை மீது தற்போதும் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அந்த நிலைக்கு கட்சியை அவர் கொண்டுசெல்ல மாட்டார். இவர்களின் எண்ணம் ஈடேறாது என்று தான் நான் புரிந்து கொள்கிறேன்.

கடந்த முறை ராகுல்காந்தி காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்தபோது, மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி பேசுகிற அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்பது தனக்கு தெரியும் என்றும், இருந்தாலும் உங்கள் ஆசையை வெளிப்படுத்தி உள்ளீர்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதாகவும் அங்கு போய் வந்த எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒரு சந்திப்பு நடைபெறுகிறது. அது சர்ச்சைக்குரியதாக மாறிவிட்டது. இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் பெரிய சலசலப்பு வந்துவிட்டதா? என்றால், நிச்சயமாக அப்படி சலசலப்பு இருக்காது என்று ராகுலின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாக சொல்கிறேன். ஒருவேளை அவர்கள் ராகுல்காந்தியை சம்மதிக்க வைத்துவிட்டார்கள் என்றால், அது காங்கிரஸ் கட்சி செய்கிற வரலாற்று பிழைகளில் இதுவும் ஒன்றாக அமையும்.
தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு உயிர் கொடுக்கும் ஆக்சிஜன் என்பது திமுக தான். அந்த ஆக்சிஜனை உருவிவிட்டால் காங்கிரஸ் டெட் பாடி ஆகிவிடுவார்கள். விஜயுடன் கூட்டணிக்கு செல்கிறபோது அவரால் 8 சதவீதம் வாக்குகள் பெற முடியும் என எண்ணுகிறேன். அப்போது காங்கிரஸ் எத்தனை சதவீதம் வாக்குகளை பெறும்? காங்கிரசுக்கு 10 சதவீதம் இருந்தால் கூட 18 சதவீதம் தான் வரும். இந்த 18 சதவீதத்தை வைத்துக்கொண்டு வெற்றி பெற முடியுமா?

செல்வப்பெருந்தகை தங்கள் தரப்பில் 3 மாதங்களுக்கு முன்னதாகவே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டபோதும், திமுக சார்பில் இன்னும் அமைக்கவில்லை. தங்களுக்கு எத்தனை இடங்கள் என்று தெரிந்தால் தான் களத்திற்கு செல்ல இலகுவாக இருக்கும். இதனை புரிந்துகொண்டு திமுக தரப்பில் உடனடியாக குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனை ஏற்றுக்கொண்டு திமுக தரப்பில் வரும் 22ஆம் பேச்சுவார்த்தை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில், தொகுதி பங்கீடு விவகாரத்தில் தாங்கள் நட்பு ரீதியாக தனித்துப் போட்டியிட்டதையும் செல்வப்பெருந்தகை சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார்.
விளிம்பு நிலையில் இருந்து இன்றைக்கு அதிகாரத்தை கைப்பற்றி இருக்கும் செல்வப்பெருந்தகை இப்படி பேசி இருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர்களுக்கு அதிகபட்சமாக தொகுதி பங்கீட்டிற்கு பிறகு வேட்பாளர் தேர்வு மட்டும் தான் உள்ளது. ஆனால் திமுகவுக்கு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் வேலை உள்ளது. வாக்குச்சாவடி முகவர்களை தயார்படுத்துகிற வேலை உள்ளது. காரணம் உங்களுடைய வேட்பாளருக்கும் தேர்தல் வேலைகளை பார்க்கப் போவது திமுக நிர்வாகிகள் தான். அதற்கான வேலைகளை திமுக செய்து கொண்டிருக்கிறது.

எத்தனை தொகுதிகள் என்று தெரிந்தால் தான் தேர்தல் வேலை செய்ய முடியும் என்கிறார். அப்போது கூட்டணி கட்சிகள் நிற்கும் இடங்களுக்கு தேர்தல் வேலை செய்ய மாட்டீர்களா? இதற்கு பெயர் கூட்டணியா? திமுக வேண்டும் என்றால் இதை வாஞ்சையோடு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் திமுக நிர்வாகிகளிடம் இது வெறுப்புணர்வை ஏற்படுத்தும். அப்போது நீங்கள் எப்படி தேர்தலை எதிர்கொள்வீர்கள். பூர்ஷ்வா மனநிலை கொண்ட மாணிக்கம் தாகூர் பேசியதில் எனக்கு வருத்தம் இல்லை. ஆனால் எங்களின் உணர்ந்த விளிம்பு நிலை மக்களான செல்வப்பெருந்தகை இப்படி பேசியது, தவறு என்று சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.


