காங்கிரஸ் கட்சியில் உருவாகி வருகிற செங்கோட்டையன்தான் மாணிக்கம் தாகூர். அவர் செங்கோட்டையனை போலவே மரியாதையை இழந்து தவெகவில் இணைவார் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் விமர்சித்துள்ளார்.


திமுக மீது மாணிக்கம் தாகூர் மீண்டும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- காங்கிரஸ் கூட்டணியை பலம் இழக்க செய்ய வேண்டும் என்று எடுத்துக்கொண்ட முயற்சிதான் விஜய் இறக்கப்பட்டது முதலானவையாகும். தற்போது அந்த வேலை காங்கிரசுக்குள் இருந்தும் நடக்கிறது. இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று ராகுல்காந்திக்கு நன்றாக புரிகிறது. காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் 25 முதல் 35 வரை இடங்கள் கேட்கிறது என்பது முக்கியமல்ல. வெற்றி பெறுவதை வைத்து என்ன செய்ய வேண்டும்? தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ள 10 காங்கிரஸ் மற்றும் 30 கூட்டணி கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணியின் சார்பில் வலிமையாக பேசுகிறார்கள். பாசிசத்திற்கு எதிராக இந்திய அளவில் பலத்த குரலாக ஒலிப்பதற்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படியான சூழலில் இந்த கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற வேலையை தான் விஜய் செய்தார். முதலில் விசிகவை குறிவைத்தார். பின்னர் மற்ற கட்சிகளை குறிவைத்தார். எதுவும் நடக்கவில்லை. கடைசியாக காங்கிரஸ் வருகிறார்கள்.

தமிழ்நாடு காங்கிரசின் பலத்திற்கு ஏற்ப இடங்களும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இங்கு காங்கிரஸ் கட்சியின் பலம் என்பது என்ன? காங்கிரஸ் 2014 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு என்ன ஆனது? தோல்வி மட்டுமல்ல. டெபாசிட் வாங்கினார்களா? 2019, 2024லும் நீங்கள் வெற்றி பெற்றதற்கு காரணம் திமுகவின் பலம்தான். அது இல்லாவிட்டால் அவர்களால் வெற்றி பெற்றிருக்க முடியாது. கூட்டணி ஆட்சி என்கிற தீயை பற்றவைத்தவர் விஜய் தான், அந்த தீ இன்று தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ளதாக சொல்கிறார்கள். மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களுக்கு அவர்தான் தலைவரா? இப்படி பேச அவமானமாக இல்லையா? மாணிக்கம் தாகூரால், திமுக, அதிமுக ஆதரவு இல்லாமல் விருதுநகரில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ்காரரை நிறுத்தி வெற்றி பெற வைக்க முடியுமா? காங்கிரஸ் சார்பில் கிரிஷ் ஜோடாங்கர் குழு அமைக்கப்பட்டது. திமுக சார்பில் கனிமொழி தலைமையிலான குழுவினர் ராகுலை சந்தித்து பேசினர். அடுத்து வரும் 22ஆம் தேதி பேச்சுவார்த்தைக்குழு அமைக்கப்படுகிறது. நடுவில் நீங்கள் பேசினால் அதன் அர்த்தம் என்ன?

உங்களுடைய நோக்கம் என்பது திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவது ஆகும். காங்கிரஸ் கட்சியில் 18 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு ஆதரவாக ஒரு எம்எல்ஏ ஆதரவு தெரிவித்தார்களா? அப்போது நீங்கள் யாருடைய குரலை எதிரொலிக்கிறீர்கள்? ராகுல்காந்தி எப்படி உங்களை ஆதரிப்பார்? ராகுல்காந்தி நினைத்தால் விஜயை அழைத்து எத்தனை தொகுதிகள், அமைச்சர் பதவிகள் என்று பேசி டெல்லியில் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பார்? ஏன் அவர் செய்யவில்லை? இதேதான் பீகாரிலும் நடந்தது. தற்போது தமிழ்நாட்டிலும் நடக்கிறது. கர்நாடகா, ஆந்திராவில் காங்கிரஸ் தங்களுக்கு இடம்தர வேண்டும் என்று திமுக, விசிக கேட்டால் இவர்கள் தருவார்களா? இவர்களின் நோக்கம் என்பது பாசிசத்திற்கு எதிரான திமுகவை பலம் இழக்க செய்து, பாஜகவை பலப்படுத்துவது. அதைதான் விஜய் செய்கிறார். அதையே தான் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் செய்கிறார்கள். ஒட்டுமொத்தத்தில் காங்கிரசுக்குள் உருவாகி வருகிற செங்கோட்டையன்தான் மாணிக்கம் தாகூர். அவரை தூக்கி வெளியே போட்டால், அவர் ஒன்றுமே கிடையாது.

திமுக வெறுப்புணர்வு காங்கிரஸ்காரர்களிடம் இருக்கிறது. ஆனால் குறைந்த அளவே உள்ளது. கோபண்ணா, செல்வப்பெருந்தகை போன்றவர்கள் நேர்த்தியாக பேசிவிட்டு செல்லவில்லை. கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு ஆகியவற்றை கேட்கிற இடத்தில் கேளுங்கள். அதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் நீங்கள் வெளியில் வந்து பேசுகிறபோது, கேள்வி கேட்கிற உரிமை பத்திரிகையாளர்களுக்கு உண்டு. நீங்கள் திமுகவுக்கு எதிராக உள்ளடி வேலை செய்வதை ஊக்கப்படுத்துகிறீர்கள் என்றால், அதே வேலையை திமுக செய்யாதா? முதலமைச்சரால் செய்ய முடியாதா? இதற்கும் மேல் நீங்கள் எம்.பி. ஆவீர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், அதை டெலிட் செய்து விடுங்கள். நீங்க செங்கோட்டையன் வேலை பார்க்கிறீர்கள். அவரை போலவே மானம் இழந்து, மரியாதை இழந்து கடைசியில் தவெகவில் மெர்ஜ் ஆவீர்கள். உங்களால் காங்கிரஸ் கட்சி உடையவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் இருவருடைய நோக்கம் தமிழ்நாட்டில் திமுகவை வீழ்த்த வேண்டும் அவ்வளவுதானே. காங்கிரசை உடைத்துப்பாருங்கள். தமிழ்நாட்டில் நீங்கள் என்ன விதமான அசைவை ஏற்படுத்த முடியும் என்று பார்க்கலாம். டீயும், பண்ணும் சாப்பிட்டுவிட்டு சுவர் எழுத்துப்பிரச்சாரம் மூலம் காங்கிரசை அதிகாரத்தில் இருந்து தூக்கிவீசிய கட்சி திமுக.

இவர்களுக்கு எல்லாம் ஸ்டாலின் பதில் கொடுக்க மாட்டார். அனேகமாக ஆ.ராசா பதில் கொடுப்பார் என்று நினைக்கிறேன். திமுகவால் அவதூறை சுமந்ததாக மாணிக்கம் தாகூர் சொல்கிறார். அவர் 2-ஜி விவகாரத்தை குறிப்பிடுகிறார். 2ஜியில் கொள்கைப்படி நடந்ததாக ஆ.ராசா சொல்கிறார். உங்களுடைய பதில் என்ன? மன்மோகன் சிங்கின் பதில் என்ன? பழியை சுமந்தது திமுக. 2-ஜி குறித்து மாணிக்கம் தாகூர் ஒரு புத்தகம் போட்டு நாங்கள் காரணம் அல்ல என்று விளக்கம் கொடுத்திருக்கலாமே? திமுக செய்த தவறுகளை தூக்கி சுமந்ததால் தான் 9 பேர் வெற்றி பெற்றீர்களா? உங்களுடைய தலைவர் ராகுல்காந்தி தமிழ்நாட்டில் எத்தனை பிரச்சாரம் செய்தார். ஆனால் நீங்கள் உள்பட அனைவரையும் ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். நீங்க வெற்றி பெறுவதற்காக செலவு செய்தீர்கள். அதனால் உங்கள் குடும்பத்தில் இருந்து அழுத்தம் வரலாம். இதை எல்லாம் வைத்து திமுகவை மிரட்டிவிடலாம் என்று நினைத்தீர்கள் என்றால் ஸ்டாலின் அதற்கான ஆள்இல்லை. நீங்கள் அவரோடு பழகி இருப்பதால் அவரை தெரிந்து இருக்க வேண்டும். ஒரு முடிவு எடுத்துவிட்டார் என்றால் ஸ்டாலின் உறுதியாக நின்றுவிடுவார். அதற்கு பிறகு உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

திமுக அரசு ரூ.5000 வழங்கியது தேர்தலுக்காக என்று விஜய் விமர்சித்துள்ளார். பணமே வாங்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு ரூ.5000 கொடுத்தால் வாங்கிக் கொண்டு ஓட்டுபோடுங்கள் என்றால் என்ன அர்த்தம்? இப்போது தான் சம்மர் வந்ததா? என்று கேட்கிறார்கள். அடுத்தும் திமுக ஆட்சிக்கு வந்து ரூ.2000 வழங்கினால் மாணிக்கம் தாகூரும், அவரது சகோதரர் பிரவீன் சக்கரவர்த்தியும் தூக்கு மாட்டி தொடங்கி விடுவீர்களா? இவர்கள் தங்களுடைய வளங்களை பாதுகாக்க பாஜகவோடு ரகசிய உறவு வைத்துக்கொள்கிறார்கள். அதற்கு பாஜக ஒரு விலை கேட்கிறது. அந்த விலைக்காக தான் தற்போது திமுக கூட்டணிக்கு எதிராக செயல்படுகிறார்கள். இது காங்கிரஸ்காரர்கள் எல்லோருக்கும் தெரியும். கூடிய விரைவில் காங்கிரஸ் இரண்டாக உடையலாம். ஒன்று திமுகவோடு கூட்டணிக்கு செல்லும். மற்றவர்கள் தனியாக சென்று ஒன்னுமில்லாமல் போகும். அதற்கு பிறகு நீங்கள் தவெக போவீர்கள். அங்கே போய் ஒன்னுமில்லாமல் போய் விடுவீர்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


