திமுக கூட்டணி காங்கிரஸ் செய்கிற துரோகம் என்பது, தமிழ்நாட்டை பாஜகவுக்கு காட்டிக்கொடுப்பது போன்றது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டி உள்ளார்.


திமுக – காங்கிரஸ் இடையே மோதல் வலுத்து வரும் சூழலில் இது குறித்து இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- சேலம் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், கூட்டணி ஆட்சி என்று தாம் போட்ட அரசியல் குண்டு தற்போது எல்லா கூட்டணிகளிலும் வெடித்து கொண்டிருப்பதாகவும். இதனால் ஸ்டாலின் பதறுவதாகவும், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு சரிபட்டு வராது என்று சொல்வதாகவும் கூறியுள்ளார். அதேவேளையில் ஆட்சியில் பங்கு கேட்டு வருகிற பிரவீன் சக்கரவர்த்தி ராகுல் காந்தியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய், விக்கிரவாண்டியில் போட்ட பொலிட்டிக்கல் பாம்பை ஒரு நாய்கூட மதிக்கவில்லை. கொஞ்சம் எடப்பாடி ஏமாறுவார் போன்று தெரிந்தது. பின்னர் அவர் சுதாரித்துக்கொண்டார். இத்துப்போன நாஞ்சில் சம்பத், செங்கோட்டையன் போன்றவர்கள் தான் அவர் கட்சியில் சேர்ந்துள்ளனர். இந்த ஸ்க்ரிப்ட்டை ஆதவ் அர்ஜுனா எழுதி கொடுத்தாரா? அல்லது பிரவீன் சக்கரவர்த்தி எழுதிக்கொடுத்தாரா? என்று தெரியவில்லை.

தமிழக அரசு வழங்கியுள்ள ரூ.5000 என்பது மகளிர் உரிமைத்தொகை ரூ.3000 மற்றும் கோடைகால சிறப்புத்தொகுப்பு ரூ.2000 ஆகும். மகளிர் உரிமைத்தொகை என்பது விஜயின் விசில் சத்தம் வருவதற்கு முன்பே கொடுக்கப்பட்டதாகும். தேர்தலை காரணம் காட்டி இதை முடக்க பார்ப்பதாக விளக்கமும் கொடுத்திருக்கிறார். பாஜக வழக்கறிஞரான அஸ்வினி உபாத்தியாயா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் என்ன வேண்டும் என்று வழக்கு தொடருவார். நீதிபதிகளும் அதை கருணையோடு, பரிசீலித்து செய்வார்கள்.
இப்படி நான் சொல்ல காரணம் என்ன என்றால்? எஸ்.ஐ.ஆர் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று வழக்கு தொடரப்பட்ட நிலையில், எஸ்.ஐ.ஆரை எப்படி சுமூகமாக நடத்துவதற்கான வேலைகளை உச்சநீதிமன்றம் செய்து கொண்டிருக்கிறது. அதனால் முதல்வர் சுப்ரீம் கோர்ட் என்று சொல்லவில்லை. ஆனால் நான் அந்த பெட்டிஷனை சந்தேகப்படுகிறேன். தன்னால் தான் இது நடந்தது என்று சொல்கிற விஜய்க்கு சொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனால் விஜய் இப்படி சொன்னது மாணிக்கம் தாகூர் போன்ற அவருடைய எதிர்கால கூட்டணி கட்சியினருக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கும்.

தமிழ்நாடு தலைகுனியாது, தமிழ்நாடு போராடும் என்றால் யாரை எதிர்த்து போராடும்? என்று ஆர்.என்.ரவி கேட்கிறார். பாஜகவை எதிர்த்து தான் போராடும். ஒன்றிய அரசை எதிர்த்து தான் போராடும். எதற்காக என்றால் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராடும். நீங்கள் தமிழ்நாட்டிற்கு எதற்காக முதலமைச்சர் ஆக வேண்டும் என்று துடிக்கிறீர்கள்? தமிழ்நாட்டின் வரி வருவாயை பிடிங்கிக்கொள்வது முதல் இந்தி திணிப்பு, தமிழ் மாநில உரிமைகளை பறிக்கிற, தமிழின விரோத மனப்பான்மையோடு, பார்ப்பனிய ஆதிக்க கண்ணோட்டத்தோடு செயல்படுகிறார்கள் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளும் பேசுகிறார்கள். விஜய்க்கு அது பிரச்சினை இல்லை. அவர் பேச வேண்டியது இல்லை.
அப்படி பேசினால் ஜனநாயகன் படம் வராது. கரூர் கேஸ் ஆகிவிடும் என்பதற்காக அவர் பேசவில்லை. அவருடைய கொள்கையே பாஜக எதிர்ப்பு அல்ல. சீமான் கூட அவ்வப்போது பாஜகவை விமர்சிப்பார். அப்படி ஒரு விமர்சனம் விஜயிடம் இருந்து வந்தது இல்லை. அப்போது விஜய் பாஜகவின் பி டீம் தான். தேர்தல் அரசியல் கணக்கு போட்டு, திமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் பிரிக்கிறார். அது திமுகவுக்கு மறைமுகமாக சாதகம் என்று பார்க்கக்கூடாது. மாறாக விஜய்க்கு கூடி இருக்கிற அந்த கூட்டம், வெகு விரைவில் பாஜகவின் காலாட்படையாக மாற இருக்கிற கூட்டமாகும். அப்படி ஒரு கூட்டத்தை விஜய் உருவாக்கி வைத்திருக்கிறார்.

பாஜகவை கனவிலும் கூட எதிர்க்காத, எதிர்க்க வேண்டும் என்று நினைக்காத, எதிர்க்க முடியாது என்று மேடைக்கு மேடை சத்தியம் செய்கிற விஜயுடன் கூட்டணி சேர வேண்டும் என்று பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் மனதில் வைத்துக் கொண்டு இந்தியா கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கிறார்கள். அப்போது இவர்களை யார் என்று அழைப்பது. பிரவீன் சக்கரவர்த்தி ராகுல்காந்தியை சந்திக்கப் போவது குறித்து அனைத்து ஊடகங்களிலும் உடனுக்குடன் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியை உடைக்க பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றவர்கள் தினமும் கோடி மீடியாவுக்கு தீணி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது ராகுல்காந்திக்கு தெரியாதா?
பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்தை குருமூர்த்தி ட்வீட் செய்துள்ளார். ஆட்சியில் பங்கு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் உறுதிபட சொல்லிவிட்டார். அது குறித்து பேசிய ஜோதிமணி, அது முதல்வரின் கருத்து. பேச்சுவார்த்தையின் போது அதை நாங்கள் பேசுவோம் என்று சொல்கிறார். அதை பேச ஜோதிமணி யார்? கட்சியின் தலைவர் ராகுல் காந்தியோ, மாநில தலைவர் செல்வப் பெருந்தகையோ தான் இதை பேச வேண்டும். இவர்கள் எதற்கு அதை பேசுகிறார்கள்? ஸ்டாலின் சிலர் சதி செய்வதாக கூறியுள்ளார். ஆனால் நான் சொல்கிறேன், காங்கிரஸ் தலைமை தான் சதி செய்கிறது.

ராகுல்காந்தியை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல. கரூர் சம்பவத்திற்கு ராகுல்காந்தி அழைத்து பேசினார். ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக ட்வீட் போட்டார். நீங்கள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளீர்கள். உங்கள் கூட்டணி கட்சியை கடுமையாக விமர்சிக்கும், கரூர் சம்பவத்திற்கு பொய் பழிபோட்ட விஜயை, தவறு என்று ராகுல்காந்தியோ, காங்கிரஸ் தலைமையோ கண்டித்ததா? ஜனநாயகன் படத்திற்கு மோடியை கண்டிக்கும் ராகுல்காந்தி, திமுகவை விமர்சக்கும் விஜயை கண்டிக்க வில்லை. அப்போது ஒரு கூட்டணியில் இருக்கிற கட்சி என்பதற்கான நாணயமும், நேர்மையும் இல்லாத கூட்டம் தான் காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் கட்சிக்கும், விஜய்க்கு என்ன வித்தியாசம் உள்ளது? ராகுல்காந்தி சுயமாக பேசுகிறார். விஜய் சுயமாக பேசவில்லை. விஜயுடன் உள்ள ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் போன்றவர்களும், பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றவர்களும் எந்தவித மக்கள் தொடர்பும் இல்லாதவர்கள். ஆதவ் அர்ஜுனாவுக்கும், பிரவீன் சக்கரவர்த்திக்கும் என்ன வித்தியாசம்? இருவரும் ஒரே வேலையை தான் பார்க்கிறார்கள். காங்கிரஸ் கட்சி திமுகவின் தயவில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். எந்தவித அடித்தளமும் இல்லாதவர்கள். இப்படியான மக்கள் ஆதரவு இல்லாதவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு ராகுல்காந்தி நடந்தால் அதற்கு என்ன அர்த்தம்.

பாஜகவை எதிர்க்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிற விஜயுடன் நாங்கள் சேர்ந்தால் ஆட்சியை பிடித்து விடுவோம் என்பது காங்கிரசின் கருத்தாக இருக்குமானால் அதை வெளிப்படையாக அறிவித்துவிட்டு கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள். உங்களுடைய பாஜக எதிர்ப்பு என்பது, அதிகாரத்துக்கு வருவதற்கான ஒரு நாடகம். பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் பேசுகிறதை பார்க்கும்போது, பாஜக கைக்கொட்டி சிரித்தால் பரவாயில்லை. கூட்டணி பலவீனம் ஆனாலோ, திமுக தோற்றுப் போனாலோ பரவாயில்லை. நமக்கு பதவி கிடைக்க வேண்டும். இல்லா விட்டால் கூட்டணி நாசமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் பாஜக எதிர்ப்பாளர்கள் என்று நாம் நம்ப வேண்டுமா?
ஒருவேளை அவர்களுடைய திட்டம், விஜயுடன் செல்வதாக இருந்தால் அதை வெளிப்படையாக அறிவித்து விட்டுபோக வேண்டும். பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களை காங்கிரசில் உள்ள மற்றவர்கள் எதிர்த்து பேசாததற்கு காரணம் அவர்களுக்கு தலைமையின் ஆசிர்வாதம் உள்ளது என்றுதான் நினைக்கிறேன். அப்படி இருந்தால் முன்பு த.மா.கா உடைத்தது போன்று உடைத்து விடுங்கள். ஏனென்றால் பாஜக எதிர்ப்பு என்பது 2026 உடன் முடிந்து போகப்போவது இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


