விஜயுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை மத்திய பாஜக அரசு விரும்பாது என்றும், பாஜகவை பகைத்துக்கொள்ள விஜயே விரும்ப மாட்டார் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


திமுக காங்கிரஸ் இடையிலான மோதல் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக அரசு மிகவும் ரகசியமாக ரூ.5000 வழங்கிய நிலையில், இது குறித்து விளக்கம் அளித்து முதலமைச்சர் வீடியோ வெளியிட்டார். அப்படி ரூ.5000 வழங்கியது காங்கிரஸ் கட்சிக்கு சிறுபான்மையின மக்கள் மத்தியில் ஆதரவை அதிகரிக்கவே செய்து இருக்கும். திமுக தேர்தல் பணிகளுக்கு போய் பல மாதங்கள் ஆகிவிட்டது. கூட்டணி பேச்சுவார்த்தை 22ஆம் தேதி தொடங்கும் என்று அறிக்கையில் மூன்று வரிகளில் தான் கூறியிருந்தனர். மற்ற பணிகள் மேற்கொண்டிருப்பதை பெரிய பட்டியலை போட்டிருந்தனர். இதில் மறைமுகமாக திமுக சொல்வது இந்த பணிகள் எதிலும் நீங்கள் வரவில்லை என்பதுதான்.
அப்போது காங்கிரசுக்கு எவ்வளவு இடங்கள் தரும் என்றால்? பழைய இடங்களை தான் தரும். முடிந்தால் குறைக்கவும் செய்யும். காரணம் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணிக்கு வருகிறது. அவர்களுக்கு சில இடங்களை தருவார்கள். காங்கிரஸ் கட்சி தனித்துக் கூட்டணி அமைத்து, அதிக இடங்களில் போட்டியிட்டு வளரவேண்டும் என்பதில் தவறில்லை. ஆனால் விஜய் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியை பிடித்து விடுவார்கள் என்று அவர்கள் நம்பவில்லை.

திமுக – அதிமுக என்கிற கள நிலவரத்தில் தவெக, நாதக யாருடைய வாக்குகளை பிரிப்பார்கள் என்பது கணக்கு. திமுக எதிர்ப்பு வாக்கு வங்கிதான் ஒரு பகுதி போகிறது. திமுக வாக்கு வங்கியில் ஓட்டை போட வேண்டும் என்றால் சிறுபான்மை வாக்குகள் மட்டும் தான் ஒரே துருப்புச்சீட்டு. அந்த சிறுபான்மையினர் வாக்குகள் உங்களுக்கு வருவதற்கு வாய்ப்புகளே கிடையாது. விஜய் கிறிஸ்துவர் என்பதாலேயே, அந்த மக்களின் வாக்குகள் விஜய்க்கு போய்விடுமா? கிறிஸ்தவ திருச்சபைகளும் கணக்குகள் வைத்திருக்கும் அல்லவா? தமிழ்நாட்டை பொறுத்தவரை விஜயால் இஸ்லாமியர் வாக்குகளை உடைக்க முடியவில்லை என்றும், அதேவேளையில் கிறிஸ்தவர்களின் வாக்குகளை பிரிப்பதாகவும் சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் 4 – 5 சதவீதம் பேர் உள்ளனர். குறைந்தபட்சம் 2.5 சதவீதம் வாக்குகள் மாறுவதாக வைத்தாலும், அதனை சரிகட்ட திமுக முயற்சிக்கும். ஆட்சிக்கு ஆதரவான வாக்குகளை பெருக்குவதற்காக தான் ரூ.5000 வழங்கப்பட்டது. மக்களிடம் இதை நினைவுபடுத்துவது தான் திமுகவின் வேலையாகும். மறக்கக்கூடாது என்பதற்காக தான் ரூ.2000 தருவோம் என்று சேர்த்து அறிவித்துள்ளனர்.

அரசியல் என்பது மிகவும் நுணுக்கமானது. நட்சத்திர அந்தஸ்து. மேடையில் பேசுவது. பதிவுகளை போடுவது போன்றவை களத்தில் வேலை செய்யாது. களத்தில் வேலை செய்யப்போவது களப்பணியாளர்கள் தான். அவர்கள் வலிமையாக இருக்க வேண்டும். வேட்புமனுத்தாக்கல் முதல் வேலை பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கும் ஆட்கள் இல்லை. விஜய் கட்சிக்கும் ஆட்கள் இல்லை. ஆளில்லாதவர்கள் சேர்ந்து ஆண்டிகளே மடம் கட்டினால், மடம் எப்படி உருப்படும்? தேர்தல் மோடுக்கு தமிழ்நாடு போய் 6 மாதம் ஆகிவிட்டது. திமுக நேரேட்டிவ் எல்லாம் செட் செய்து கொண்டுவந்துவிட்டார்கள். திமுகவுக்கு எதிரான வாக்குகளை உடைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
காங்கிரசும் கொஞ்சம் உடைத்தால் மகிழ்ச்சி தான். விஜய் கடைசி நேரத்தில் பின்வாங்கி விடுவார். கடைசி நேரத்தில் காங்கிரஸ் தனித்துப்போட்டியிட்டு உங்களின் 18 சதவீத வாக்கு வங்கியை நிரூபியுங்கள். அடுத்தமுறை சேர்ந்து நிற்கலாம் என்று சொன்னால் என்ன ஆகும்? அதைதான் திமுகவும் எதிர்பார்க்கிறது. அமித்ஷா கூப்பிட்டு மிரட்டினால் விஜய் படுத்துவிடுவார். நடிகர் என்பதால் வேறு வழியில்லை. விஜயும், காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்க பாஜக விரும்புமா? முதலில் விஜய் அதை ஏற்றுக்கொள்வாரா?

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி விஜயுடன் சேர்ந்தால், அந்த கட்சியின் மீதான விமர்சனங்கள் விஜய் மீதும் வருவார்கள். ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் துரோகம் செய்ததாக கூறி, திமுகவுக்கு ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் வாக்களிப்பதில்லை. தற்போது அது விஜய்க்கும் பாதிப்பை ஏற்படுத்தும். விஜயை பொருத்தவரை தேசிய கட்சியை தன்னுடன் சேர்த்துக்கொண்டால் அது தன்னுடைய இமேஜை பூஸ்ட் செய்யும் என்று நினைக்கிறார். அப்படி செய்த உடன் அவர்களை கழற்றி விட்டுவிடுவார். தேசிய கட்சி மற்றவர்களை கழற்றி விடும்போது, விஜய் கழற்றி விட மாட்டாரா? மாணிக்கம் தாகூரும், பிரவீன் சக்கரவர்த்தியும் காங்கிரசை வேறு அணிக்கு அழைத்துச்செல்ல போகிறார்கள் என்றால் அகில இந்திய தலைமையின் தோல்வியாகும். ராகுல்காந்தி தவறாக வழிநடத்தப்படுவதாக சொல்கிறார்கள்.ஆனால் ஒரு கட்சி தலைவர் அப்படி தவறான வழிநடத்தலுக்கு உள்ளாகக்கூடாது.
கட்சியினர் சொல்வதை எல்லாம் தலைவர்கள் கேட்பார்களா? ராகுல்காந்தியை பொறுத்தவரை அவருக்கு கேரளா தான் முக்கியத்துவம். விஜய் உடனான கூட்டணி கேரளா, பாண்டிச்சேரிக்கு உதவலாம் என்று கணக்கு இருக்கலாம். இதே மக்களவை தேர்தலின்போது மாணிக்கம் தாகூர் இந்த கருத்தை சொல்லியிருந்தால், உடனடியாக அவருக்கு கொட்டு விழுந்து இருக்கும். தமிழ்நாட்டில் 18 எம்எல்ஏக்கள் கிடைக்கும். ஆட்சியில் பங்கு கிடையாது. அவர்களாகவே போட்டி போட்டு வரட்டும். இப்படி பேசுவதால் காங்கிரசுக்கு முக்கியத்துவம் கூடுகிறது என்று அவர்கள் நினைக்கலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


