பெண்கள் வாக்குகளை கவர ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை அறிவித்தது போன்று அடுத்தபடியாக இளைஞர்களின் வாக்குகளை கவர புதிய திட்டத்தை திமுக அறிவிக்க உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.


மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.5000 வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று மாத மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைகால சிறப்பு தொகுப்பாக ரூ.5,000-ஐ பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியையும், எதிர்க்கட்சிகளுக்கு பலத்த அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. சட்டமன்றத் தேர்தலை நோக்கி செல்கிறபோது பெண்களை கவரும் விதமாக எடப்பாடி பழனிசாமி பல அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அவற்றை எல்லாம் விஞ்சும் விதமாக பெண்களின் கைகளில் பணத்தை கொண்டுபோய் முதலமைச்சர் சேர்த்துள்ளார். எதிர்க்கட்சிகள் இதை அரசியல் ஸ்டண்ட் என்று சொல்வார்கள். விஜய், கோடைக்காலம் வருவது இப்போது தான் கண் தெரிந்ததா? என்று கேட்கிறார். கோடைக்காலம் இப்போது தான் வருகிறது. தேர்தலும் இப்போது தானே வருகிறது. ஒரு அரசியல் கட்சி தேர்தலை நோக்கி செல்கிறபோது என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்வார்கள். பீகாரில் ரூ.10,000 கொடுத்தபோது விஜய் எங்கே போயிருந்தார்?

தேர்தல்களில் அதிக இலவசங்களை வழங்குவதால் நிதி நெருக்கடி ஏற்படுகிறது. இதனை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2013ல் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் தேர்தலில் இலவசம் வழங்குவது தொடர்பாக அறிவிக்க தடை விதிக்க கோரிய நிலையில், உச்சநீதிமன்றம் அதில் தலையிட மறுத்துவிட்டது. தற்போது அந்த தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்யப் போகிறார்கள். இந்த 2 வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கலாம். அப்போது அரசு சார்பில் நிதி வழங்குவதற்கு முடியாத நிலை ஏற்படலாம். நாட்டில் 12 மாநிலங்களில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவற்றை நிறுத்த முயற்சிக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் திட்டங்களால் பல்வேறு திட்டங்களால் 1.75 கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவதாக திமுக நினைக்கிறது. அவர்களை எல்லாம் திமுகவுக்கு வாக்களிக்க செய்ய அக்கட்சி முயற்சிக்கிறது. ரூ.5000 வழங்கியுள்ளது தங்களின் வாக்குகளை உறுதிபடுத்தும் என்றும் நினைக்கிறார்கள். பொதுமக்களிடம் வழங்கிய நிதியை இனி திரும்பப் பெற முடியாது. அவ்வாறு வாங்கினால், அது அதிமுக – பாஜவுக்கு பின்னடைவாக அமையும். ஆனால் நீதிமன்றத்திற்கு சென்று கண்டனம் தெரிவிப்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன.

நிதி நெருக்கடியால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2.5 வருடங்களுக்கு பின்னர் தான் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து கல்வி நிதி போன்றவை வரவில்லை. இந்த சூழ்நிலையில், தேர்தலுக்காக திமுக அரசு நிதி வழங்குவதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு உள்ளதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.அதேவேளையில் திமுக அரசு நிதி பற்றாக்குறையை தங்களால் சமாளிக்க முடியும் என்று நினைக்கின்றனர். மத்திய அரசு, விவசாயிகளுக்கு தலா ரூ.9000 தர உள்ளனர். மத்திய அரசின் கடன் 2014ஆம் ஆண்டில் 52 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது ரூ.200 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு அரசுக்கு ரூ.4.2 லட்சம் கோடி கடன் உள்ளதாக கூறியபோது, கார்கே மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பேசுகிறீர்களா? அல்லது தமிழ்நாட்டின் பட்ஜெட் பற்றி பேசுகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். கடன் வரம்புக்குள் இருந்தாலோ, திருப்பி செலுத்துகிற சக்தி இருந்தால் மட்டுமே ரிசர்வ் வங்கி மாநிலங்களை கடன் வாங்க அனுமதிக்கும். சொந்த வரி வருவாயை மட்டும் வைத்து அரசாங்கத்தை நடத்த முடியாது. அதனால் கடன் வாங்கி தான் ஆட்சியை நடத்த முடியும். மத்திய அரசின் ஆதரவு இன்றியே தமிழ்நாட்டின் ஜிடிபி இரட்டை இலக்கத்தில் உயர்ந்துள்ளது.

திமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய போதும், மகளிர் உரிமைத் தொகையை ரூ.2000 ஆக உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கு காரணம், எடப்பாடி பழனிசாமி ரூ.2000 தருவேன் என்று கூறியதுதான். அவர் அறிவித்ததன் காரணமாக திமுக அரசும் அறிவித்துள்ளது. இனிமேல் எடப்பாடி பழனிசாமியால் ரூ.2500 என உயர்த்தி அறிவிக்க முடியாது. அப்படி செய்தால் அது அரசியல் என்று தெரிந்துவிடும். ஸ்டாலின் ஏற்கனவே கொடுத்துக் கொண்டிருப்பதால், அவர் தருவார் என்று நம்புவார்கள். ஆனால் எடப்பாடி சொன்னால் நம்ப மாட்டார்கள். திமுக அரசு மீண்டும் மே மாதம் ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும். அப்போது ரூ.2000 வழங்குவதை அவர்கள் யோசித்துவிட்டு தான் அறிவித்திருப்பார் என்று தோன்றுகிறது. அடுத்து சில நாட்களில் இளைஞர்களுக்கு எதோ திட்டம் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இளைஞர்கள் எல்லாம் விஜய் பக்கம் உள்ளனர் என்று சொல்லப்படுகிற நிலையில், அவர்களின் வாக்குகளை பெறும் விதமாக திட்டத்தை அறிவிக்க உள்ளார். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு ஒன்டைம் பேமெண்ட் வழங்கலாம் என்ற திட்டம் உள்ளது. உடனடியாக செய்யலாமா? அல்லது ஆட்சிக்கு வந்ததும் செய்யலாமா? என்ற யோசனையும் உள்ளது. அடுத்த ஒருவாரத்திற்குள்ளாக இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


