மாநில சுயாட்சி விவகாரத்தில் திமுக பிரிவினையை தூண்டுவதாக, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுவது தவறான கருத்தாகும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
மாநில சுயாட்சி தீர்மானம் நிறைவேற்றியது குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- கலைஞர் மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டுவந்துள்ளதை போன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்துள்ளார். இதன் மூலம் அன்றைக்கு இருந்த அதே சூழல் நிலவுகிறது. அல்லது அதைவிட மோசமாகியுள்ளது என்று புரிந்து கொள்ளலாம். கூட்டாட்சி தத்துவம் என்கிற வார்த்தை பல்வேறு விதங்களில் சீரழிக்கப்படுகிறது. வரிப்பகிர்வில் அநீதி நடைக்கிறது. தமிழ்நாடு கொடுக்கும் நிதியை முழுமையாக கேட்கவில்லை. குறைந்தபட்ச நியாயத்தோடு நடந்துகொள்ளுங்கள் என்று சொல்வதற்கும் உரிமை இல்லை. பொதுப்பட்டியிலில் உள்ள விஷயங்களில் மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக சட்டங்களை இயற்றுவது, அதற்கு நீதிமன்றங்களை காரணம் காட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதெல்லாம் தொடர்வதால் இதுபோன்ற நினைவூட்டும் விஷயங்கள் நடைபெறுகிறது. இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்று நாட்டிற்கு தெரியப்படுத்துகிறோம். இந்த தீர்மானத்தை போடுவதால் மத்திய அரசு தங்களை மாற்றிக்கொள்வது கிடையாது.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரிவினையை தூண்டுவதாக சொல்கிறார். இந்த விஷயத்தில் நாம் பாஜகவின் வாதத்தை கேட்கவே கூடாது. எந்த விதத்தில் இது பிரிவினையை தூண்டுகிற செயலாகும். தமிழ்நாட்டை பிரித்துகொடுங்கள் என்று கேட்கிறோமா? மாநில சுயாட்சிக்கு அதுதான் அர்த்தம் என்றால் நயினார் நாகேந்திரன் இன்னும் படிக்க வேண்டியது எவ்வளவோ உள்ளது என்ற அர்த்தம். பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு துளி கூட நன்மை செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. இன்னும் அவர்கள் திருந்தவே இல்லை. எந்த தவறு நடைபெற்றாலும் பாய்ந்துகொண்டு வந்து நியாயப்படுத்துகிறார்கள். இந்த ஜென்மத்தில் அவர்கள் வளரப்போவது கிடையாது. ஆளுநரை, நயினார் நாகேந்திரன் சந்திக்க போவது தவறில்லை.
அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கைவிட்டார். திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளபோது, அதிமுக அப்படியே தனியாக இருக்க வேண்டும் என யாரும் எதிர்பார்க்க முடியாது. இது இயல்பான கூட்டணி. ஏற்கனவே கூட்டணி வைத்த கட்சியாகும். அதிமுக மீது விமர்சனங்கள் வைக்கலாம். அதற்காக தமிழ்நாட்டையே அடகு வைப்பதாக கூறுவது தவறாகும். கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்கிறார். கூட்டணி தலைமை வகிக்கும் கட்சி அதை சொல்ல வேண்டும். நேற்று கட்சி தொடங்கிய விஜய் சொல்கிறார் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று. கூட்டணி ஆட்சி என்பது தமிழ்நாட்டில் தோற்றுப்பான ஒன்று. ஒரு பெரிய கொள்கை முடிவு எடுக்கிறோமே குறைந்தபட்சம் நிர்வாகிகளிடம் பேசினாரா? அப்போது கூட்டணி அமைந்த விதம் விமர்சனத்திற்குள்ளானது.
அதிமுக – பாஜக கூட்டணிக்கு 5 சதவீதம் சிறுபான்மையினர் கூட வாக்களிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டிற்கு பாஜக எதாவது நல்லது செய்துள்ளது என்று கேள்வி எழுந்தால் அதிமுக நிலைமை மோசமாகும். ஆனால் நடைபெறுவது சட்டமன்றத் தேர்தல். நான்தான் முதலமைச்சர் ஆக போகிறேன். எனக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரத்தை எடுத்துச் சென்றார் என்றால் விளைவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதனால் தான் எடப்பாடி பழனிசாமி கட்சியை அடகு வைத்து விட்டார் என்று தொண்டர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். கூட்டணி அறிவிப்பதற்கு முன்னால் எடப்பாடி பழனிசாமியிடம் பேசவே கிடையாது. டெல்லியில் சென்றும் கூட்டணி பேசவில்லை என்றுதானே சொன்னார். அப்போது கூட்டணி தொடர்பாக எப்போது பேசினார்கள். அப்படி கள்ளத்தனமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டிய அவசியம் கிடையாது. இன்னும் அதிமுக பெரிய கட்சியாகத்தான் உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன மரியாதை கிடைக்குமோ அது கிடைக்கும்.
அதிமுக – பாஜக கூட்டணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி கூட்டணி என்று சொல்கிறார். இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் திமுகவை வீழ்த்தும் வலிமை அதற்கு இல்லை. பாமக வந்தால், இந்த கூட்டணி வட மாவட்டங்களில் நிச்சயமாக திமுகவை வீழ்த்தும். திமுகவைவிட வலுவான அணியாக இருக்கும். கொங்கு பகுதிகளிலும் வலுவான அணியாக இருக்கலாம். ஆனால் தெற்கில், டெல்டாவில், மத்திய மாவட்டங்களில் என்ன நிலைமை? ஆட்சியை பிடிக்க அனைத்து இடங்களிலும் ஓரளவு மெஜாரிட்டி ஜெயிக்க வேண்டும். அப்போது இது போதாது. போக போக இந்த அணியில் வாக்கு வங்கியை நிருபித்த வேறு கட்சிகள் சேர்ந்தால் பலமாகும். இன்றைக்கு திமுகவை வீழ்த்துவதற்கான பலம் அந்த 2 கட்சிகளுக்கும் கிடையாது.
அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த நேரம் தவறான நேரமாகும். இது டிசம்பர், ஜனவரி மாதத்தில் அறிவித்திருந்தால் அதிமுக குறித்து விமர்சனங்களை முன்வைக்க அவர்களுக்கு நேரம் இருக்காது. அதிமுக வேறு அணி அமைத்துவிடக்கூடாது என்று தடுப்பதற்காகதான் அமித்ஷா கூட்டணி என்ற லாக் போட்டு தடுத்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். லாயத்தில் போட்டு பூட்டிவைப்பது போல எடப்பாடி பழனிசாமியை பூட்டிவைத்து விட்டார்கள். அது நடைபெற்ற அடுத்த நாளே விஜய் கதறிக்கொண்டு அறிக்கை வெளியிட்டார். அந்த வார்த்தைகள் எல்லாம் விரக்தியின் உச்சத்தில் உள்ள வார்த்தைகள். ஏன் அதற்கு முதல்நாள் வரை அதிமுக குறித்த விமர்சனங்கள் எங்க போனது? விஜய் பார்வையில் அதிமுக ஊழல் செய்த கட்சிதான். அந்த அதிமுகவை விமர்சிக்காமல் இருந்தவர், கூட்டணி அமைந்த உடன் இரவு எல்லாம் எழுதி காலங்காத்தால அந்த அறிக்கையை வெளியிடுகிறீர்களே? அப்படி ஒரு வேலை நடைபெறுவதை அறிந்த அமித்ஷா அதை தடுப்பதற்காக கூட்டணியை உறுதிபடுத்தி இருக்கலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.