மொழிப்போர் தியாகிகள் தினம் – ஜனவரி 25
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ம் தேதி இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை போற்றும் வகையில் திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பொதுக் கூட்டங்களை நடத்தி மக்களுக்கு தாய்மொழியின் முக்கியத்துவத்தை விளக்கி வருகின்றனர்.


கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்று பல அறிஞர்கள் தமிழ் மொழியின் பெருமைகளை கூறியுள்ளனர். அந்த மூத்த மொழிக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மத்தியில் ஆண்டக் காங்கிரஸ் கட்சியும், தற்போது ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் பாஜகவும் கொள்கை வேறுபாடுகள் இல்லாமல் தமிழகத்தில் இந்தியை திணிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றனர்.
1937ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் முதல்வர் ராஜகோபாலாச்சாரியார் கட்டாயம் இந்தி தேவை என்று பேசினார். அதனை தந்தை பெரியார் மற்றும் சில தமிழ் அமைப்புகள் கடுமையாக எதிர்த்தனர். அந்த எதிர்ப்புகளை மீறி 1938ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளிக்கூடங்களில் இந்தி கட்டாயம் என்று ராஜாஜி ஆணை பிறப்பித்தார். அதனை எதிர்த்து தந்தை பெரியார் தலைமையில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினார்கள். அப்பொழுது பெரியார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அந்தப் போராட்டத்தில் தாளமுத்து, நடராஜன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த ராஜாஜியின் அரசு 1940 ஆண்டு இந்தி திணிப்பை கைவிடுவதாக அறிவித்தது.
அப்போதைய சென்னை மாகாண அரசு 1948ம் ஆண்டு மீண்டும் இந்தி கட்டாயம் என்று அறிவித்தது. அப்பொழுதும் விழித்திருந்த இளைஞர்கள், மாணவர்கள் கடும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் 1950ம் ஆண்டு இந்தி கட்டாயம் இல்லை என்று பின்வாங்கியது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கும் போது ஆட்சி மொழியாக எந்த மொழியை பயன்படுத்துவது என்று விவாதம் எழுந்தது. அதிகார மையத்தில் வடமாநிலத்தவர்களும், பிராமணர்களும் இருந்ததால் “இந்தி” ஆட்சி மொழி என்றும் இந்தி பேசாத மாநில மக்கள் இந்தி மொழியை கற்றுக்கொள்வதற்கு 15 ஆண்டு காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. 1965ம் ஆண்டு இந்தி மொழியே இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் பல மாநிலங்களில் இந்தி மொழிக்கு எதிரான மனநிலையே இருந்தது.

அதனால் 1963 ல் கொண்டுவந்த ஆட்சி மொழி சட்டத்தில் இந்தி மொழியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரலாம் என்று அப்போதைய மத்திய அரசால் திருத்தம் கொண்டுவரப்பட்டது. “தொடரலாம்”என்று திருத்தப்பட்டதை “தொடரும்” என்று திருத்த வேண்டும் என்று அறிஞர் அண்ணா வலியுறுத்தினார். இரண்டிற்கும் பொருள் ஒன்றுதான் என்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினார். பலத்த எதிர்ப்பு இருந்தும் 1963 ஏப்ரல் 23ம் தேதி அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஆங்காங்கே பரவத் தொடங்கியது, மாணவர்கள், இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வீதிக்கு வந்து போராட்டத்தில் இறங்கினார்கள். திருச்சி மாவட்டம் கீழப்பழுவூர் சின்னச்சாமி என்பவர் இந்தி திணிப்பை கண்டித்து ஜனவரி 25ம் தேதி தீக்குளித்து உயிரிழந்தார். அப்பொழுது முதலமைச்சராக இருந்த பக்தவாச்சலம் 1964 மார்ச் மாதம் மாநிலத்தில் மும்மொழி கொள்கையை அறிமுகப்படுத்தினார்.
அந்த சட்டம் அமலுக்கு வரும் நாள் 1965 ஜனவரி 26 ம் தேதி நெருங்க நெருங்க நாடெங்கும் பதற்றம் அதிகரித்தது. தந்தை பெரியார் தலைமையில் ஒரு பக்கமும் அறிஞர் அண்ணா தலைமையில் இன்னொரு பக்கத்தில் இருந்தும் இளைஞர்கள் ஆர்பரித்தனர். இந்தி எதிர்ப்புப் போராட்டக்காரர்களை ஒருங்கிணைக்க ”தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்பு சங்கம்” உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் சார்பில் ஜனவரி 17ம் தேதி திருச்சியில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.

திமுக சார்பில் ஜனவரி 25ம் தேதி கருப்பு தினமாக அறிஞர் அண்ணா அறிவித்தார். அறிஞர் அண்ணா உள்ளிட்ட திமுகவின் முக்கிய பிரமுகர்கள் 3000 பேர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தில் முன்னணி வீரர்களாக இருந்த எல்.கணேசன், கா.காளிமுத்து, சீனிவாசன், துரைமுருகன், சேடப்பட்டி முத்தையா, வை.கோபல் சாமி ஆகியோர் 1965 ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தில் முன்னணியில் இருந்தவர்கள்.
இந்தி திணிப்பிற்கு எதிராக மதுரையில் நடைபெற்ற ஊர்வலத்தில் காங்கிரஸ் காரர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் காங்கிரஸ் அலுவலகத்தை தீ வைத்து எரித்தனர். அந்த நிகழ்வு மதுரை முழுவதும் கலவரமாக வெடித்தது. அடுத்தடுத்து மாநிலம் முழுவதும் கலவரம் பரவியது. ரயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. பேருந்துகள் எரிக்கப்பட்டது. பொது சொத்துக்கள் சேதமடைந்தது. கலவரத்தை கட்டுப்படுத்த துணை ராணுவ வீரர்கள் வந்தனர்.
1965 ஜனவரி 26 அதிகாலை கோடம்பாக்கத்தை சேர்ந்த சிவலிங்கம் என்ற இளைஞர் தீக்குளித்தார். ஜனவரி 27 அரங்கநாதன் என்பவர் தீ குளித்து உயிரிழந்தார். அதனை தொடர்ந்து முத்து, சாரங்கபாணி, வீரப்பன் ஆகியோர் தீக்குளித்து மாண்டனர். மேலும் பலர் விஷம் அருந்தி மடிந்தனர்.
ஜனவரி 28 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. அப்பொழுது காங்கிரஸ் அரசின் மத்திய அமைச்சர்களாக இருந்த சி.சுப்பிரமணியன், ஓ.வி.அழகேசன் ஆகியோர் மத்திய அரசின் பிடிவாதப் போக்கை கண்டித்து பதவியை ராஜினாமா செய்தார்கள். இறுதியில் அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி 1965 பிப்ரவரி 11ம் தேதி மும்மொழி கொள்கையை வாபஸ் பெற்றார். அதனை தொடர்ந்து பிப்ரவரி 12ம் தேதி இந்தி எதிர்ப்பு போராட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 1967 ல் மாநில கட்சியான திமுக இந்தியாவிலேயே முதன்முதலில் ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் தோல்வியை தழுவியது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு இந்தி எதிர்ப்புப் போராட்ட களமே முக்கிய காரணமாக இருந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதன்முதலில் தீக்குளித்து மறைந்த கீழப்பழுவூர் சின்னச்சாமியின் நினைவு நாள் ஜனவரி 25 ”மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளாக” அனுசரிக்கப்படுகிறது.


