ஜே.பி.நட்டாவின் தமிழக வருகையால் அரசியலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்திவிட முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


ஜே.பி.நட்டா தமிழக வருகையின் நோக்கம், அதிமுக கூட்டணியில் விஜய் இணைவாரா? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அதிமுகவின் செயற்குழு கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. இதற்கு முன்னதாக பாஜக உடன் கூட்டணி அமைத்தார்கள். அதற்கு கட்சியினரிடம் ஒப்புதல் வாங்கினாரா? என்றால் கிடையாது. அதிமுகவில் எப்போது பொதுச்செயலாளருக்கு அதிகாரம் கொடுப்பது என்பது உள்ளது. 1977 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் உடன் எம்ஜிஆர் கூட்டணி அமைத்தார். பெரிய அளவுக்கு தொகுதிதகள் இல்லாவிட்டாலும் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்தால் போதும் என்று நினைத்தார். ஆனால் துரதிர்ஷடவசமாக இந்திரா காந்தி தோற்றுவிட்டார். பிரதமராக வந்த மொரார்ஜி தேசாய்க்கு, எம்ஜிஆர் மீது வெறுப்பு இருந்தது. அதற்கு சில மாதங்களுக்கு பின்னர் சட்டமன்றத் தேர்தல் வந்தது. ஜனதா கட்சி, தங்களுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று எம்ஜிஆரை வற்புறுத்தியது.

எம்ஜிஆர் தனியாக நிற்கலாம் என முடிவு செய்து சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். திமுகவும் 1976ல் ஆட்சி கலைக்கப்பட்டதால் நம்ம பக்கம் அனுதாபம் இருக்கும் என்று சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தனியாக போட்டியிட்டது. அதனால் இந்திரா காங்கிரஸ், ஜனதா கட்சிகளும் தனியாக போட்டியிட்டன. 30 சதவீத வாக்குகள் வாங்கி எம்ஜிஆர் வெற்றி பெற்றார். அதற்கு பிறகு 1980 தேர்தலில் நேரடியாக திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. இந்த கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. திமுக – காங்கிரஸ் கட்சிகள், கூட்டணி ஆட்சியை நோக்கி போட்டியிட்டன. ஆளுக்கு தலா 117 இடங்களில் போட்டியிட்டனர். யார் வெற்றி பெற்றாலும் கலைஞர் தான் முதலமைச்சர் என்று இந்திரா காந்தி சொன்னார்கள். ஆனால் அந்த தேர்தலில் திமுக தோற்றது. கடைசியில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி அமைந்தது. அதன் பிறகு 1984 என்று வரிசையாக பல உதாரணங்களை சொல்லலாம். இன்றைக்கு 2026.ஐ நோக்கி வந்துவிட்டோம்.

தமிழ்நாடு தேர்தல் களம் என்ன மாதிரியான நிலையை நோக்கி செல்கிறது. இதில் விஜயையும் சேர்த்து தான் கணக்கில் எடுக்க வேண்டும். அவர் படப்பிடிப்பிற்காக தான் மதுரைக்கு வருகிறார். இதனால் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள இளைஞர்கள் எல்லாம் அங்கு தான் இருக்கிறார்கள். கூட்டணி அரசியல் எதை நோக்கி போகிறது. அதிமுக செயற்குழு கூட்டத்தில் பாஜக உடன் கூட்டணி ஏற்றுக் கொண்டோம் என ஒரு தீர்மானம் போட்டுத்தான் ஆக வேண்டும். பகல்காம் தாக்குதலை கண்டித்து தீர்மானம் போடுகிறார்கள. இது இஸ்லாமிய வெறுப்பாக இஸ்லாமியர்களால் பார்க்கப்படும். அப்போது எங்கே இஸ்லாமியர்கள் வாக்கு தீர்மானிக்கிற சக்தியாக உள்ளதோ அங்கே அதிமுக – பாஜக அணி வெற்றி பெறாது. அதிமுக இப்படி இதை கையாள போகிறது என்று செயற்குழு கூட்டத்தில் வியூகம் வகுப்பார்கள்.

2001ஆம் ஆண்டில் ஜெயலலிதா கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்ததே அதிகபட்ச இடங்களாகும். 140க்கு சற்று ஏறக்குறைய தான் அதிமுக போட்டியிட்டது. ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியவில்லை. எல்லோரும் அதிமுக தனி மெஜாரிட்டி வராது என்று நினைத்தோம். கூட்டணி ஆட்சி என்பதை தேர்தலுக்கு கூட்டணி சேர்கிறபோது ஒப்பந்தத்தில் சொல்வது கிடையாது. அதிமுக கூட்டணியில் யாரெல்லாம் இருந்தார்கள் என்றால் காங்கிரஸ் இருந்தது. அந்த கட்சியில் இருந்து பிரிந்துவந்த தமாகா இருந்தது. அவர்கள் ஏன் கூட்டணி ஆட்சி என்று காங்கிரசை வலியுறுத்தவில்லை. அதற்கு காரணம் அது போனி ஆகாது என்பதுதான். எத்தனை இடங்களில் போட்டி என்பதை வைத்து, கூட்டணி ஆட்சி என்று சொல்வார்கள். அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக எல்லாம் ஓரணியில் வர வேண்டும் என்றால், ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு இடம் தர முடியும்?

மத சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கெடுத்து வைத்துள்ளார்கள். இதற்கு முன்பு இப்பாடியான ஒரு கணக்கு நம்மிடம் கிடையாது. வாஜ்பாய் காலத்தில் திமுக கூட்டணி வைத்தபோது, அவருக்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிடையாது. வாக்கு சதவீதம் அடிப்படையில் பார்த்தால் 2 கூட்டணிகளும் ஒன்றாகத்தான் தெரியும். ஆனால் எதார்த்த சூழலில் அது தொகுதிக்கு தொகுதி மாறுபடும். குறிப்பாக மதச் சிறுபான்மையினர் அதிகமாக உள்ள தொகுதிகளில் அது மாறுபடும். அதனால்தான் திமுக மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு கொடுக்கிறது,சுரேஷ் ராஜனுக்கு மீண்டும் பொறுப்பு வழங்குகிறது. தென் மாவட்டங்களில் கிறிஸ்தவ வாக்கு வங்கியை பெற வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும். அந்த வாக்குகள் விஜயிடம் போய்விடக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது எல்லாம் கணக்கு அடிப்படையில்ல தான் போகிறது.

என்.டி.ஏ கூட்டணிக்குள் விஜயை வருவார? இல்லையா? என்கிற கேள்வி எழலாம். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வருகையால் தமிழக வாக்கு வங்கியை திருப்பிவிட முடியாது. அமித்ஷா, மோடி என்றால் அவர்களுக்கு என்று தனி செல்வாக்கு உள்ளது. விஜய், அதிமுக கூட்டணிக்கு வருவதாக வைத்துக்கொண்டால் அவர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கும் என்று சொல்வாரா? 2011ஆம் ஆண்டுக்குள் விஜயகாந்தை கூட்டணிக்குள் கொண்டுவந்தபோது, இருவரும் ஒரு கூட்டத்தில் கூட சேர்ந்து பேசவில்லை. கடைசியில் ஒரு கூட்டத்தில்தான் சேர்ந்து பேசினார்கள். அப்போதும் ஜெயலலிதாவை முதலமைச்சர் ஆக்குவோம் என்று சொல்லவில்லை. கடைசியில் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகினார்.
பாமக ஆட்சியில் பங்கு வேண்டும் என்று சொல்கிறார்கள். தேமுதிகவுக்கும் முதலமைச்சர் கனவு உள்ளது. அது திமுகவின் பொதுக்கனவுக்கும் பொருந்தி வராது. ஆளாளுக்கு ஆட்சியில் பங்கு கேட்டால், நம்முடைய கூட்டணி கட்சிகளும் பங்கு கேட்பார்கள் என்று திமுகவுக்கும் பயம் உள்ளது. தமிழ்நாடு அரசியல் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. அதற்கான முதற்புள்ளி இன்று தொடங்குகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


