ஓபிஎஸ், என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகியது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது ஆகியவை பாஜக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவர் சந்தித்து பேசியதன் நோக்கம் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஓபிஎஸ் காலையில் நடைபயிற்சியின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அதன் பிறகு மதியம் அதிமுக உரிமை மீட்புக்குழு கூடி, என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகிவிட்டனர். ஓபிஎஸ் சுற்றுபயணம் மேற்கொள்ளும் திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். கூட்டணி தொடர்பாக தேர்தல் சமயத்தில் முடிவு எடுப்பதாக முடிவு எடுத்துள்ளனர். என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது எதிர்பார்த்த ஒன்றுதான். ஓபிஎஸ் தரப்பை பாஜக அலட்சியப்படுத்தியது. எடப்பாடியின் பேச்சை கேட்டுக்கொண்டு தமிழகம் வந்த பிரதமர் மோடி, ஓபிஎஸ-சந்திக்காமல் போய்விட்டார். இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரிய அவமதிப்பு ஆகும். பாஜக மீது ஒருபுறம் கோபம் இருந்தாலும், இதற்கு காரணமான எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாக வீழ்த்த வேண்டும் என்று ஓபிஎஸ் நினைக்கிறார். எடப்பாடி பழனிசாமி அதிமுக ஒற்றுமைக்கு எதிராக உள்ளதால், அவரை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த வேண்டும் என்பது தான் ஒபிஎஸ் தரப்பு எடுத்திருக்கும் முடிவு. துரோகியை வீழ்த்த எதிரியுடன் கூட கூட்டணி சேரலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டனர். பண்ருட்டி ராமச்சந்திரன், தவெக தான் திமுகவுக்கு நேர் எதிராக இருக்கும் என்று சொல்கிறார். தவெக உடன் ஓபிஎஸ் கூட்டணி சேர்ந்தாலும் சேரலாம் என்று சமிக்ஞைகளை கொடுக்கிறார்.
ஒபிஎஸ் தரப்பின் முதன்மையான நோக்கம் என்பது எடப்பாடியை அரசியல் ரீதியாக தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். சட்டப்பூர்வமான போராட்டம் சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அது எப்போது முடியும் என்று தெரியாது. மேலும், எடப்பாடி பழனிசாமி மிகவும் புத்திசாலித்தனமாக பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளார். வழக்குகளையும், தேர்தல் ஆணைய விவகாரங்களையும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்வதற்கும், வழக்குகள் வராமல் இருப்பதற்கும் பாஜக உதவும். பாஜக எடப்பாடி பழனிசாமியை தான் ஆதரிப்பார்கள். தேர்தல் நெருங்கும்போது தம்மை தூக்கி போட்டுவிடுவார்கள் என்று ஓபிஎஸ் தரப்புக்கு தெரிந்துவிட்டது. அதனால் நம்முடைய பாதையை நாம் தான் அமைத்துக்கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முடிவுக்கு வந்துவிட்டனர். அதன் பிறகு தான் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்தார்கள். அதற்கு முன்னதாக ஓபிஎஸ் தரப்பில் இருந்து தவெக உடன் பேச்சுவார்த்தை உறுதிபடுத்தி விட்டார்கள். இரு தரப்பிலும் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நெருக்கத்தில் எப்படிபட்ட சூழல் ஏற்படுகிறது என்பதை பொறுத்து முடிவு செய்யலாம் என்று எண்ணுகின்றனர். அதனால் அனைத்து பக்கத்திலும் கூட்டணி கதவுகளை திறந்து வைக்கலாம் என்று நினைக்கின்றனர். அந்த கணக்கின் அடிப்படையில் தான் திமுக கதவையும் திறந்து வைக்கிறார்.
ஓபிஎஸ் அணி தாங்கள் திமுக உடன் இணைந்துகூட பயணிப்போம் என்று பாஜகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த சந்திப்பை நடத்தியுள்ளது. மேலும் தவெக அணி வெற்றி பெறுமா என்கிற சந்தேகமும், தனக்கு அங்கு உரிய மரியாதை கொடுக்கப்படுமா? என்கிற சந்தேகமும் ஓபிஎஸ்க்கு இருக்கலாம். திமுகவை இறுதிக்கட்ட வாய்ப்பாகதான் வைத்துள்ளனர். ஓபிஎஸ் தரப்பினர் திமுகவில் போய் சேருவது என்பது சரியாக வராது. அதனால் அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் எழுதிய கடிதம் வெளியானது ஒரு அரசியல் வியூகம் தான். ஓபிஎஸ் தரப்பினர் எதிர்பார்த்தது போலவே பிரதமர் மோடி, ஓபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை. இதனால் அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு காரணம் கிடைத்துவிட்டது. தவெக, திமுக என்று இரு வாய்ப்புகளையும் ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்துகிறது.
ஓபிஎஸ் மேற்கொண்ட நகர்வு பாஜகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. எடப்பாடியின் பேச்சை கேட்டுக்கொண்டு பாஜக தவறு செய்துவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய அளவு வாக்குகள் கிடையாது. ஜெயலலிதா 46 சதவீதத்தில் விட்டுச்சென்ற நிலையில், இன்றைக்கு 20 சதவீதம் தான் உள்ளது. ஓபிஎஸ், தினகரன் போன்றவர்கள் இல்லாவிட்டால் தென் மாவட்டங்களில் பெரிய அளவுக்கு வாக்குகளை பெற முடியாது. எடப்பாடியிடம் கட்சி உள்ளதால், அவர் பேச்சை கேட்டு இந்த முடிவை எடுக்கிறார்கள். ஆனால் ஓபிஎஸ், தினகரன் போன்றவர்கள் குறிப்பிட்ட வாக்கு வங்கியை கையில் வைத்துள்ளனர். அதனை பாஜக இழப்பார்கள்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் அலுவலகத்தில் இருந்து, ஓபிஎஸ் தரப்புக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் வரும் 26ஆம் தேதி அன்று பிரதமர் மோடி, ஓபிஎஸ்-ஐ சந்திக்க உள்ளார். நீங்கள் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று அதில் தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் தரப்பில் தனியாக கட்சி நடத்தவோ, அல்லது தனியாக போராடாவோ தன்னிடம் போதிய நிதி வசதிகள் இல்லாததால் அவர் யோசிக்கிறார். ஓபிஎஸ் ஆதரவாளர்கள், பிரதமரின் இந்த ஆபரை ஏற்க வேண்டாம். நாம் ஏற்கனவே எடுத்த முடிவிலேயே பயணிப்போம் என்று சொல்கிறார்கள். ஓபிஎஸ் முடிவை உடனடியாக மாற்றினால், மக்கள் மத்தியில் நம்பிக்கையை இழக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளனர். டெல்லி பாஜகவோ, பிரதமர் மோடியே, ஓபிஎஸ்-ன் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்பார்க்கவில்லை. ஓபிஎஸ் தற்போது நடவடிக்கை எடுக்காவிட்டால் அவருடன் உள்ளவர்கள் எல்லாம் போய் திமுகவில் இணைந்து விடுவார்கள். தன்னை சுற்றி இருப்பவர்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஓபிஎஸ்க்கு உள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் நடைபெற்ற பொதுக்குழு அனைத்தும் சட்டவிரோதமானது. அதனால் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்பதுதான் அவர் தரப்பு வாதமாகும். அதே விஷயத்தை தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளார். எடப்பாடி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட முறை சரியில்லை. அதனால் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தன்னுடைய வழக்கு முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் பீகார் மாநில தேர்தல் பணிகள் காரணாக முடிவு எடுக்க சில மாதங்கள் ஆகும் என்று எடப்பாடி பழனிசாமி தலைக்கு மேலே கத்தியை தொங்கவிட்டு விட்டார்கள். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பின்னடைவை சந்தித்துள்ளார். சூர்ய மூர்த்தி, அதிமுக உறுப்பினர் இல்லை என்று சொல்வதன் மூலம் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு எடப்பாடி கோரிக்கை விடுத்தார். எனினும் நீதிமன்றம் அவர் ஜெயலலிதா காலத்திலேயே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தவர், அதை புதுப்பிக்காதது உங்களின் தவறு என்று சொல்லிவிட்டார்.
எடப்பாடி பழனிசாமியுடன் யாரும் கூட்டணி அமைக்க தயாராக இல்லை. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது நெகட்டிவ் பேக்டராக உள்ளது. பாஜக இருந்தால் வாக்குகளை இழக்க வாய்ப்பு உள்ளதால் யாரும் சேர மறுக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி வேறு எதையும் யோசிக்காத வகையில் 10 மாதங்களுக்கு முன்னதாகவே லாக் செய்துவிட்டார்கள். அதிமுகவில் உள்ள தங்கமணி, வேலுமணி போன்றவர்கள் வழக்குகள் காரணமாக பாஜக உடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் எடப்பாடியையும் சேர்த்து தள்ளிக்கொண்டு போய்விட்டனர். ஏன் இந்த முடிவை எடுத்தோம் என்று எடப்பாடி பழனிசாமி வருந்திக் கொணடிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை வேலுமணி தான் செய்து கொண்டிருக்கிறார். எடப்பாடி கூட்டத்திற்கு ஆட்களை கூட்டிவர வேலுமணி தான் பணம் வினியோகம் செய்கிறார் என்று தகவல் வருகிறது.