மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உச்சநீதிமன்றமே அவ்வப்போது தீர்ப்புகளில் விளக்கம் அளித்துள்ளதாக விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்தது குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதற்கு ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை திரவுபதி முர்மு எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அல்லது மாநில அரசு ஏதாவது சட்ட மீறலில் ஈடுபட்டுள்ளதா? இவ்வளவு பெரிய தீர்ப்பை தரக்கூடிய அளவுக்கு உச்சநீதிமன்றத்திற்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்தது யார்? ஆளுநர்கள் கொடுத்தார்கள். குடியரசுத் தலைவர் அதற்கு துணை போனார். அதனால் உச்சநீதிமன்றத்திற்கு வேறு வழியில்லை. தமிழ்நாடு அரசு சென்று உச்சநீதிமன்றத்தில் முறையிடுகிறபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டு அந்த வாதங்களின் முடிவில் யார் பக்கம் நீதி உள்ளது என்று பார்த்து, அந்த நீதியை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இதில் தவறு செய்தவர்கள் ஆளுநர்கள். அவர்களை கேளுங்கள். ஒரு ஜனநாயகத்தை மதிக்கக்கூடிய அரசாக இருந்தால் , குடியரசுத் தலைவர் ஆளுநர்களை பார்த்து காலதாமதம் செய்வது ஏன் என்று கேட்டிருக்க வேண்டும். குடியரசுத் தலைவர் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்குகிறார். எத்தனை எத்தனை சட்டங்களை சட்டத்தை மீறி இந்த ஒன்றிய அரசு இயற்றுகிறபோது, அது குறித்து எந்த கேள்வியும் கேட்காமல் உடனடியாக கையெழுத்து போட்டு அனுப்பக்கூடிய இந்த குடியரசுத் தலைவர், தமிழ்நாடு அரசு அனுப்புகிற நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்?
அரசியலமைப்பு சட்டம், ஒரு மாநில அரசுக்கு சட்டம் இயற்றும் அதிகாரத்தை கொடுத்துள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு தான் ஒரு மாநில அரசு சட்டத்தை இயற்றுகிறது. அதை ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் வாங்க வேண்டும் என்று சொல்கிறது. ஆளுநர் அதை வாங்கி ஒப்புதல் கொடுக்க வேண்டும். ஆனால் அவர் கொடுக்க மறுக்கிறார். அந்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்க முடியாது என்றும் சொல்ல மறுக்கிறார். ஏனென்றால் அவரால் அப்படி சொல்ல முடியாது. அவரால் மசோதாவை திருப்பி அனுப்ப முடியும். விளக்கம் கேட்க முடியும். அப்போது, சட்டத்தில் அவர்க்ளது வரையறை என்ன என்பது அவர்களுக்கு நன்றாக தெரிந்ததால் தான் இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள். அவர்கள் காலத் தாழ்வு என்கிற விஷயத்தை கையில் எடுத்து வைத்துக்கொண்டு மாநில அரசுகளை பழி வாங்குகிறார்கள். குறிப்பாக பாஜக ஆளாத மாநிலங்களில் தான் இந்த பிரச்சினை இருக்கிறது. தமிழ்நாடு அரசு சட்டத்திற்கு உட்பட்டு சட்டங்களை இயற்றி அனுப்புகிறது. மோடி அரசு இயற்றிய சட்டங்கள் சட்டப்படியானதே கிடையாது. வேளாண் சட்டங்களை ஏன் பின்வாங்கினார்கள். அப்போது மக்கள் விரோத சட்டம் என்று தெரிந்தும் கூட குடியரசுத் தலைவர் ஒப்பதல் வழங்கியுள்ளார். சட்டப்படி இயற்றப்படாத சட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கிறீர்கள். சட்டத்தை மீறி செய்யப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறீர்கள். அப்படி எதாவது ஒரு சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி அனுப்பியுள்ளது என்று சொல்லுங்கள்.
ஆளுநருக்கு காலக்கெடு விதிக்கும் விவகாரத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி சென்றால் ஆளுநருக்கு என்ன கிரவுண்ட் உள்ளது? ஏனென்றால் சட்டதில் சொல்லப்பட்டுவிட்டது யார் யாருக்கு என்ன அதிகாரம் என்று. சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. குடியரசுத் துணை தலைவர் கேட்கிறார், உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தை விட பெரிய பவரா? என்கிறார். அப்போது நாடாளுமன்றத்திற்கு தான் உச்ச அதிகாரம் உள்ளது என்று சொல்கிறார். அப்போது அதே தான் சட்டமன்றத்திற்கும் பொருந்தும். அப்போது சட்டமன்றமா? ஆளுநரா? என்றால் யாருக்கு அதிகாரம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமா? அல்லது மத்திய அரசின் கையாளாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரா? யாருக்கு அதிகாரம்? அதிகாரம் இருந்தால் உச்சநீதிமன்றம் சொல்லி இருக்குமே? கால நிர்ணயம் இல்லை என்கிற ஒரு காரணத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மாநில அரசை அவமதிப்பீர்களா? உச்சநீதிமன்றம் எப்படி கால நிர்ணயம் செய்கிறது. யார் அதிகாரத்தை கொடுத்தார்கள் என்று கேட்கிறார்கள். உச்சநீதிமன்றம் சட்டத்தை இயற்றவில்லை. மாநில அரசு சட்டமன்றம்தான் சட்டத்தை இயற்றி அனுப்பியது. அவற்றின் மீது ஆளுநர், குடியரசுத் தலைவர் முடிவுகளை எடுக்கவில்லை என்கிறபோது, உச்சநீதிமன்றம் சட்டப்படி ஒரு தீர்வை வழங்க வேண்டிய நெருக்கடி உள்ளதால் தங்களுக்கு இருக்கக்கூடிய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளிக்கிறது. அரிதினும் அரிதான வழக்குகளில் இந்த அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள்.
பிரதமர் தனது பதவிக்கு உரிய கண்ணியத்தோடோ நடக்கிறார். ஜனாதிபதி அந்த பதவிக்கு உரிய மாண்போடா நடந்துகொள்கிறார். ஒன்றிய அமைச்சர்கள் மாண்போடா நடக்கிறார். ராணுவ பெண் அதிகாரியை முஸ்லிம் என்பதற்காக தீவிரவாதிகளின் சகோதரி என்கிறார்கள். இது மத்திய அமைச்சர் என்கிற பொறுப்புக்கு மாண்பா? ஏனென்றால் அவர்களுக்கு இருக்கக்கூடிய பொறுப்பை விட, அதற்கு இருக்கக்கூடிய மாண்பை விட அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற வெறி கொண்ட சித்தாந்தம் அவர்களை வழிநடத்தும்.அதுதான் எல்லா இடங்களிலும் வெளிப்படும். நாம் இந்த விவகாரத்தை தொடர்ந்து சட்ட ரீதியாக எதிர்கொள்ளும். இன்றைக்கு முதலமைச்சர் மிகக் கடுமையான எதிர்வினையை செய்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டால் அதற்கு உரிய சட்ட விலக்கத்தை மாநில அரசு வைக்கும். மாநில அரசுகள் வைக்கும். ஜனாதிபதி எழுப்பியுள்ள 14 கேள்விகளுக்கும் உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது. புதிதாக வழக்குகளை எடுத்துவைத்துக்கொண்டு விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. இந்த கேள்விகள் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.