பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடைவதால், அடுத்த பிரதமராக யோகி ஆதித்யநாத்தை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆனால் மோடி தரப்பில் அமித்ஷாவை அடுத்த பிரதமராக அறிவிக்க வேண்டும் என்று அழுத்தம் தரப்படுவதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேசிய தலைவர் தேர்வு தொடர்பாகவும், அடுத்த பிரதமர் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் மோடி – அமித்ஷா இடையே நிலவும் மோதல் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி வெளியிட்டுள்ள காணொலி பதிவில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி, முன்னெப்போதும் இல்லாத வகையில் 5 நாடுகளுக்கு மிக நீண்ட பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் உள்கட்சியில் இருக்கும் நெருக்கடி. பாஜகவின் சட்ட திட்டங்களின்படி 75 வயது நிறைவுபெற்றால், அவர்கள் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட வேண்டும். கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்ற போதே 75 வயதானதை சுட்டிக்காட்டி பதவியில் இருந்து விலகிட சொன்னார்கள். ஆனால் தனக்கு 75 வயதாகும் வரை பதவியில் இருப்பதாக கூறிவிட்டுதான் அவர் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றார்.
தற்போது செப்டம்பர் மாதம் வந்தால் மோடிக்கு 75 வயது நிறைவு பெறுகிறது. அதனால் பிரதமர் பதவியில் இருந்து மோடி விலகிதான் ஆக வேண்டும். கட்சியை தொடங்கிய அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களையே 75 வயதானதால் ஆர்.எஸ்.எஸ் அனுப்பி விட்டது. அதனால் பிரதமர் பதவியில் இருந்து விலகிட மோடிக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இந்த சூழலில் பாஜகவின் தலைவராக மோடியின் ஆதரவாளர் வந்தால் மட்டுமே அவர் 2029 வரை பிரதமர் பொறுப்பில் தொடர முடியும். வேறு யாரும் தலைவராக வந்தால், அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்டமாக பாஜகவின் தலைவராக ஆர்.எஸ்.எஸ் தரப்பு நபரையே நியமிக்கலாம். ஆனால் பிரதமர் பொறுப்புக்கு யோகி ஆதித்யநாத்தை கொண்டுவரக் கூடாது. தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தான் அடுத்த பிரதமராக கொண்டுவர வேண்டும். இதற்கு சம்மதம் இல்லாவிட்டால் தாங்கள் தெரிவிக்கும் நபர்தான் பாஜகவின் அடுத்த தலைவராக வர வேண்டும் என்று பிரதமர் மோடி, அமித் ஷா தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தான் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தரப்பில் மவுனமாக இருக்கிறார்கள்.
இதனிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி.யும், மோடி – அமித் ஷா-வின் தீவிர ஆதரவாளருமான நிஷிகாந்த் துபே, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரதமர் ஆக முடியாது என்றும், அவரை போன்று பாஜகவில் பலர் உள்ளனர் என்றும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். மேலும், உத்தரபிரதேசத்தில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவதற்கு அமித்ஷா தான் காரணம். அவரை மறந்துவிட்டு யோகியை பெரிய ஆள் போல பேசக்கூடாது. இன்றைக்கு உ.பி-யில் பாஜக இருப்பதற்கு காரணம் யோகி கிடையாது. அமித்ஷா தான். யோகி ஆத்தியநாத்தை விட பெரிய தலைவர்கள் என்று சிலரை குறிப்பிட்டு சொல்கிறார்.
ஆர்எஸ்எஸ் தரப்பில யோகி ஆதித்யநாத்தை அடுத்த பிரதமராக முன்னிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அவர் பெரிய தலைவர் கிடையாது என்று நிஷிகாந்த் துபே சொல்கிறார். அவர் அடுத்த பிரதமர் அமித்ஷா என்று சொன்னதால் ஆர்எஸ்எஸ் தரப்பு கதி கலங்கி போய்விட்டது. ஏற்கனவே மோடி பிரதமர் பதவிக்கு வந்து 11 வருடங்கள் ஆகும் நிலையில், அமித்ஷா வந்தால் மீண்டும் குஜராத்திகளின் கை ஓங்கிவிடும் என்று நினைக்கிறார்கள். மோடி பிரதமர் பதவியில் இருந்து விலகினால் அவரது ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட சர்வதேச லாபிகள் அனைத்தும் சரிந்துவிடும்.
அதானி, அம்பானி போன்ற குஜராத்திக்கார்களை வளர்த்து விடும் நிலையில், இந்நிலையில் அதிகாரம் உ.பி-கார்களின் கைகளுக்கு சென்றால் அவர்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு அனாதை ஆகிவிடுவார்கள் என்று எண்ணுகிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் முன்பு ஒரு முறை சொன்னார், அதானி நிறுவனத்தின் உரிமையாளர் அதானி கிடையாது. பிரதமர் மோடி தான் என்று. அதற்கு காரணமாக அவர் சொல்வது, சிலருக்கு உலகின் முதல் பணக்காரர் ஆக வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அந்த ஆசை பிரதமர் மோடிக்கும் உள்ளது. அதனால்தான் வங்கிகளில் உள்ள பணத்தை எல்லாம் அதானி நிறுவனத்திற்கு மாற்றிவிடுகிறார் என்று சொன்னார். அதற்காக தான் கெஜ்ரிவால் சிறையில் வைக்கப்பட்டார்.
அப்போது அதிகாரம் பறிபோனால் எல்லாம் மாறிவிடும் என்பதற்காக அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர ஆர்.எஸ்.எஸ் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது. பாஜகவின் தேசிய தலைவராக ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த நபரை நியமித்தால், 2029 வரை பிரதமர் பதவியில் நானே தொடர்வேன். 2029-க்கு பிறகும் அமித்ஷா பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் மட்டும் தான் இதற்கு ஒப்புக்கொள்வோம். இல்லாவிட்டால் பாஜகவுக்கு தங்கள் ஆதரவாளர் ஒருவரையே தலைவராக நியமித்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர்.
அப்படி எதிர்த்து கேட்டால் ஆர்எஸ்எஸ் அமைப்பையே காலி செய்து விடுவார்கள். அதேவேளையில் ஆர்எஸ்எஸ் தரப்பில் யோகி ஆதித்யநாத்தை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் காரணமாகவே நிஷிகாந்த் துபேவை வைத்து யோகியை விமர்சித்துள்ளனர். இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் – பாஜக மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. எனவே விரைவில் மோடி – அமித்ஷா தரப்புக்கு பெரிய அளவிலான அதிர்ச்சி காத்திருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.