Homeசெய்திகள்கட்டுரைஆட்சி அதிகாரமும் 'ஜனநாயகன்' ரிலீஸும் - கொண்டாட்டப் போர்வையில் விதிமீறல்கள்!

ஆட்சி அதிகாரமும் ‘ஜனநாயகன்’ ரிலீஸும் – கொண்டாட்டப் போர்வையில் விதிமீறல்கள்!

-

- Advertisement -

தமிழ்நாடு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துகொண்டே, திரையிலும் நாயகனாக வலம்வரும் சி. ஜோசப் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு உள்ளிட்டப் பெரு பட்டாளமே நடித்திருக்கும் இத்திரைப்படம், அரசியல் களத்திலும் சினிமா வட்டாரத்திலும் மிகப்பெரிய புயலையே கிளப்பியிருக்கிறது.ஆட்சி அதிகாரமும் 'ஜனநாயகன்' ரிலீஸும் - கொண்டாட்டப் போர்வையில் விதிமீறல்கள்!

ஆனால், இந்த ரிலீஸைக் கொண்டாட்டம் என்ற ஒற்றைச் சொல்லால் மட்டும் கடந்து சென்றுவிட முடியாது. அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் அதிகாரத் தோரணை, ரசிகர்களின் கட்டுக்கடங்காத அட்ராசிட்டிகள் மற்றும் அரசின் போக்கில் தென்படும் முரண்பாடுகள் எனப் பல கேள்விகளை இது எழுப்பியுள்ளது.

we-r-hiring

காக்கிச் சட்டையும் முதலமைச்சரின் படமும்: அரணா? அதிகாரத் துஷ்பிரயோகமா?
முதலமைச்சரின் திரைப்படம் வெளியாகிறது என்பதால், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காவல்துறை காட்டிய ‘அதி தீவிர’ அக்கறை சாமானிய மக்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்துள்ளது. தாம்பரம் சிட்லப்பாக்கம் வரதராஜா திரையரங்கம், குரோம்பேட்டை வெற்றி திரையரங்கம் என ஒவ்வொரு திரையரங்கிற்கும் ஒரு உயர் அதிகாரி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காலை 7 மணி முதலே காவலர்கள் நிறுத்தப்பட்டு, ரசிகர் கூட்டத்தைக் சீர்செய்வதும், தள்ளுமுள்ளுவைத் தடுப்பதும்தான் காவல்துறையின் முதன்மைப் பணியாக மாற்றப்பட்டுள்ளது. சாமானிய மக்களின் பாதுகாப்புக்கும் போக்குவரத்து நெரிசலுக்கும் ஓடோடி வரவேண்டிய காவல்துறை, ஒரு திரைப்பட ரிலீஸிற்காக இப்படி அணுவணுவாக வேலை செய்வது எந்த விதத்தில் நியாயம்? அதிகாரத்தின் நிழல் காவல் துறையின் மீதும் படர்ந்திருக்கிறதோ என்ற சந்தேகத்தை இது கிளப்புகிறது.ஆட்சி அதிகாரமும் 'ஜனநாயகன்' ரிலீஸும் - கொண்டாட்டப் போர்வையில் விதிமீறல்கள்!

சட்டத்தையும் விதியையும் காற்றில் பறக்கவிட்ட ரசிகர் அட்ராசிட்டிகள்!
சென்னை கோயம்பேடு ரோகினி திரையரங்கம் எப்போதும் கொண்டாட்டங்களின் முகவரிதான். ஆனால், இன்று அங்கு அரங்கேறிய சம்பவங்கள் கொண்டாட்டத்தின் எல்லையைத் தாண்டி அராஜகத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டன.

 காவலர்களின் காலடியில் அட்ராசிட்டி
ரசிகர் ஒருவர் திரையரங்க வளாகத்திற்குள் நின்றிருந்த காரின் மீது ஏறி நின்று, விஜய் பேனருக்குச் சூடம் காட்டி ஆரவாரம் செய்துள்ளார். பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் இறங்கச் சொல்லியும், அவர்களைத் துச்சமாக மதித்து, காவலர்களின் கால்களுக்கு அருகிலேயே தேங்காயை உடைத்துத் தன் ‘பவர்’ காட்டியுள்ளார்.

ஆட்சி அதிகாரமும் 'ஜனநாயகன்' ரிலீஸும் - கொண்டாட்டப் போர்வையில் விதிமீறல்கள்!

 காற்றில் பறந்த பட்டாசுத் தடை
திரையரங்குகளில் தீ விபத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கக் கூடாது என்பதற்காக வளாகத்திற்குள் பட்டாசு வெடிக்கக் கடுமையான தடைகள் உண்டு. ஆனால், ‘ஆளும் முதலாளியின் படம்’ என்ற மிதப்பிலோ என்னவோ, அந்தத் தடைகளையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு ரோகினி திரையரங்க வளாகத்திற்கு உள்ளேயே சரவெடிகளைக் கொளுத்திப் போட்டு அலப்பறை செய்துள்ளனர். சட்டத்தையும் விதிமுறைகளையும் மதிக்க வேண்டிய முதலமைச்சரின் ஆதரவாளர்களே இப்படி வீதியில் இறங்கி அராஜகம் செய்வது, மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றிரவு ‘விஐபி’ ஷோ; இன்று அமைச்சர்களின் ‘ஜனநாயகன்’ பக்தி!
அதிகாரப்பூர்வமாக இன்று படம் ரிலீஸாவதற்கு முன்பே, நேற்றிரவே இதற்கான சிறப்புத் திரையிடல் அரங்கேறியுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய், தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து படத்தைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர். இன்று காலையோ, அரசு நிர்வாகமே திரையரங்கிற்கு இடம் பெயர்ந்ததைப் போலக் காட்சியளித்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராம்குமார், ரேவந்த் சரண், அமைச்சர்கள் என். ஆனந்த், அருண்ராஜ், அரசு கொறடா சபரிநாதன் எனப் பட்டாளமே ரோகினி திரையரங்கில் குவிந்தது.

அமைச்சராக இருப்பவர் படம் பார்த்துவிட்டு அளித்த பேட்டிதான் இதில் ஆகப் பெரிய நகைமுரண். “படம் இணையத்தில் கசிந்திருந்தாலும் (Leak) மக்கள் கூட்டம் குறையவில்லை. நாங்கள் ஊழலற்ற, லஞ்சமற்ற ஆட்சியை வழங்க நினைத்தோம்; அதை இன்று செய்து வருகிறோம். இந்த படத்தில் நானும் ஒரு காட்சியில் நடித்துள்ளேன்” என்று பெருமிதம் பொங்கப் பேசியுள்ளார் அமைச்சர் அருண்ராஜ். ஒருபுறம் இணையத்தில் படம் லீக் ஆனதைப் பற்றிப் பேசும் அரசுப் பிரதிநிதி, இன்னொரு புறம் தான் அதில் நடித்திருப்பதைப் பற்றிப் பூரிப்படைகிறார். அரசு நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் திரைப்படக் கொண்டாட்டங்களில் காட்டுகின்ற இந்த தீவிரத்தை, மக்கள் நலப் பணிகளிலும் காட்ட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.ஆட்சி அதிகாரமும் 'ஜனநாயகன்' ரிலீஸும் - கொண்டாட்டப் போர்வையில் விதிமீறல்கள்!

மதுரவாயல் ஏ.ஜி.எஸ் முதல் மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஒரு திருவிழாவைப் போலக் காட்சிளித்தாலும், அதன் நிழலில் மறைந்திருக்கும் அதிகாரத் தலையீடுகளும், விதிகளை மீறிய ரசிகர்களின் அராஜகங்களும் தவிர்க்க முடியாத கறைகளாக படிந்துவிட்டன. திரையில் ‘ஜனநாயகன்’ பேசும் கருத்துக்களும் கொள்கைகளும், நிஜத்தில் ரசிகர்களின் செயல்பாடுகளிலும் ஆட்சி நிர்வாகத்திலும் பிரதிபலிக்கிறதா அல்லது வெறும் திரைக்கதை வசனத்தோடு முடிந்துவிடுகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

எம்.ஜி.ஆர் முதலமைச்சரானபோது ‘மீனவ நண்பன்’… இப்போது விஜய்யின் ‘ஜனநாயகன்’: வரலாற்றை மீண்டும் பிரதிபலிக்கும் திரையுலக அதிசயம்!

MUST READ