Homeசெய்திகள்கட்டுரைஎம்பிக்கள் பலத்துடன் திமுக கெத்து; அதிமுக-தவெக நகர்வுகளால் விறுவிறுப்பு! – மூத்த பத்திரிகையாளர் இதயா பேட்டி

எம்பிக்கள் பலத்துடன் திமுக கெத்து; அதிமுக-தவெக நகர்வுகளால் விறுவிறுப்பு! – மூத்த பத்திரிகையாளர் இதயா பேட்டி

-

- Advertisement -

தமிழக அரசியல் சூழலில் ஆளுங்கட்சியான தவெக (தமிழக வெற்றிக் கழகம்), எதிர்கட்சியான அதிமுக மற்றும் திமுக இடையே நிலவும் அரசியல் நகர்வுகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா விவகாரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் இதயா சிறப்பு நேர்காணல் ஒன்றில் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பத்திரிகையாளர் இதயா

we-r-hiring

திமுக – அதிமுக கூட்டணி அமைய சாத்தியமா?

அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தவெக இழுத்து வரும் நிலையில், “ஸ்டாலினுக்குக் கோபம் வந்தால் ஆட்சி கவிழும்” என்ற கருத்து குறித்துப் பேசிய பத்திரிகையாளர் இதயா:

“கடந்த காலத்தில் எத்தனையோ எதிரெதிர் துருவங்களாக இருந்த கட்சிகள் அரசியல் தேவைகளுக்காக ஒன்றிணைந்துள்ளன. 1990-களிலேயே சோ ராமசாமி குறிப்பிடும் போது, ‘இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் வீழ்த்த ஒரு புதிய சக்தி வரும்போது, அவர்கள் ஒன்றி இணைய வாய்ப்புள்ளது’ என்றார்.

தற்போதைய சூழலில், நாடாளுமன்றத்தில் 22 எம்பிக்கள் பலத்துடன் திமுக வலுவாக உள்ளது. அதேவேளையில் 41 எம்.எல்.ஏ.க்களுடன் இருக்கும் அதிமுக சற்று பலவீனமடைந்துள்ளது. வருங்காலத்தில் பொது வேட்பாளரையோ அல்லது அரசியல் உடன்பாட்டையோ எட்ட இரு கட்சிகளும் முயன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை”.

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ‘குதிரை பேரம்’ என்ற கூற்று சரியா?

சமீபகாலமாக அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் விலகி தவெகவில் இணைவதும், அவர்களுக்குப் பல கோடி ரூபாய் பேரம் பேசப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் தனது மாற்றுப் பார்வையை முன்வைத்தார்:

  • ரிஸ்க் எடுக்கும் மக்கள் பிரதிநிதிகள்: ஒருவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சிக்குச் செல்வது ‘குதிரை பேரம்’ ஆகாது.

  • மக்களின் தீர்ப்பே இறுதி: ராஜினாமா செய்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வரும்போது, மக்களிடம் சென்றுதான் மீண்டும் வெற்றி பெற வேண்டும். அதில் மக்கள் அவர்களை நிராகரிக்கவும் வாய்ப்புள்ளது.

  • சபாநாயகருக்கு எதிரான தீர்மானம்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்து அவரைப் பதவியிலிருந்து இறக்கினாலும் ஆட்சி கவிழ்ந்துவிடாது; துணை சபாநாயகர் அந்தப் பொறுப்பை ஏற்பார். எனவே, இதைக் குதிரை பேரம் என்று அழைப்பது லாஜிக் அற்றது.

முதலமைச்சர் விஜய்யின் ‘தூய ஆட்சி’ எச்சரிக்கை

சமீபத்தில் நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் கடுமையாக எச்சரித்தது பற்றிப் பேசுகையில்:

“தன் ஆட்சியில் சிறு தவறு அல்லது ஊழல் நடந்தாலும் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் எச்சரித்திருப்பது வரவேற்கத்தக்க நேர்மறை நடவடிக்கை. ‘தூய சக்தி ஆட்சி’ என்று கூறி ஆட்சிக்கு வந்த பிறகு, சிறை மரணங்கள் அல்லது சிறு தவறு நடந்தாலும் அது ஆட்சிக்கு மைனஸாக முடியும் என்பதை உணர்ந்தே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்”.

இடதுசாரிகளின் நிலைப்பாடு & அமைச்சரவை பங்கேற்பு

கூட்டணி ஆட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் (CPM) கட்சிகளின் நகர்வுகள் குறித்து கூறுகையில், இரு கட்சிகளும் டெல்லி ‘பொலிட் பீரோ’ வழிகாட்டுதலின் படியே முடிவெடுக்க முடியும் என்றார்.

மேலும், “இடதுசாரிகள் வெறும் கோரிக்கைகளுக்காகப் போராடுவதைக் காட்டிலும், அமைச்சரவையில் பங்கேற்று தொழிலாளர் துறை அல்லது வேளாண்மைத் துறையைக் கைப்பற்றி மக்களுக்கு நேரடியாகச் சட்டங்களையும் அரசாணைகளையும் நிறைவேற்ற முன்வர வேண்டும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

MUST READ