163 ஆண்டுகளில் விதிக்கப்படாத அதிகபட்ச தண்டனையை ராகுல் காந்திக்கு விதித்திருக்கிறார்கள் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார மேதைகளில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் அவர்கள் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு 05. 04.2023 அன்று அளித்த பேட்டி.

கேள்வி : நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களோட சொந்த மண்ணில் சந்திக்கிறோம். உடல்நிலை மனநிலை எல்லாம் எப்படி இருக்கிறது?
ப.சிதம்பரம் : உடல்நிலை, மனநிலை எல்லாம் மிக மிக நலமாக இருக்கிறது.
கேள்வி : ராகுல் காந்தியின் தீர்ப்பை கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள், அதை எப்படி பார்கிறீர்கள் ?
ப.சிதம்பரம் : இந்த தீர்ப்பு அபூர்வமான தீர்ப்பு. அதாவது இந்திய குற்றவியல் சட்டத்தில் எங்களுக்கு தெரிந்தவரை, நாங்கள் விசாரித்த வரை, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகளை எல்லாம் கேட்டவரை கடந்த 163 ஆண்டுகளிலே வாய்மொழி அவதூறு (ஆங்கிலத்தில் Slander என்று சொல்வார்கள், அதுவே எழுத்து மூலம் அவதூறு என்பது Libel).
இந்த வாய்மொழி அவதூரு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்ச தண்டனை இரண்டு ஆண்டுகள் கொடுத்ததாக சான்றே கிடையாது. ஆக 163 ஆண்டுகளில் விதிக்கப்படாத அதிகபட்ச தண்டனையை ராகுல் காந்திக்கு விதித்திருக்கிறார்கள் என்பது தான் இந்த தீர்ப்பு உடைய அதிசயம், அபூர்வம்.
கேள்வி : 163 ஆண்டுகள் இந்த மாதிரியான தண்டனை இல்லை என்று சொன்னால், இந்த மாதிரியான தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இல்லையா?
ப.சிதம்பரம் : சட்டத்துல இடம் இருக்கிறது. ஆனால் எந்த நீதிபதியும் இரண்டு ஆண்டுகள் அதிகபட்ச தண்டனை விதிக்கவில்லை. சாதாரணமாக 15 நாட்கள், 30 நாட்கள், ஒரு 5000 ரூபாய் அபராத தண்டனை, அப்படித்தான் விதிப்பாங்க. வாய்மொழி அவதூருக்கு அதிகபட்ச தண்டனை இரண்டு ஆண்டுகள் என்று விதித்திருப்பது தான் பலபேருக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது.
கேள்வி : சட்டத்தை கரைத்து குடித்தவர் நீங்கள், எப்படி இந்த அதிசயம், அபூர்வம் நிகழ்ந்திருக்கும் என்று நினைக்கிறீர்ள்?
ப.சிதம்பரம் : இந்த கேள்வியை கேட்க வேண்டிய இடத்தில் கேட்கனும். ஆனால் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். அவர்கள் பதில் சொல்வதற்கு உங்க முன்னால் வரமாட்டாங்க. இந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடிய வில்லை.
ஆனால் இது என் மனதில் கவலை அளிக்கிறது. ஒருவேளை இந்த சட்டத்தில் 10 ஆண்டுகள் அதிகபட்ச தண்டனை இருந்தால் அதற்கு பத்து ஆண்டுகள் தண்டனை விதிப்பார்களா? தெரியல, மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பு, 24 ஆம் தேதி தகுதி இழப்பு. அதுவே மனதை உருத்துகிறது. தண்டனை விதித்த நீதிபதியே தன்னுடைய தண்டனையை நிறுத்தி வைக்கிறார். உத்தரவிட்ட அன்றைய தினமே (மார்ச் மாதம் 23ஆம் தேதி) மறுபரிசிலனை செய்ய மனம் இருந்தது அதனாலேயே அவர் 30 நாள் கால அவகசம் கொடுத்திரப்பார் என நான் கருதுகிறேன். தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் 24 ஆம் தேதி தகுதி நீக்கம் செய்துள்ளனர். இதற்கு யார் கையெழுத்து போட்டார்கள் என்பது மர்மமாக இருக்கிறது. 24ஆம் தேதி அன்று தகுதி இழப்பு அறிவிப்பு வெளியானது என்றால் இது தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்யவில்லை என்பது நிருபனம் ஆகிவிட்டது.
குடியரசுத் தலைவர் உத்தரவில் கையெழுத்திடவில்லை என்பதும் நிருபனம் ஆகிவிட்டது. அப்படி என்றால் இந்த உத்தரவுகளில் யார் கையெழுத்திடார்கள்? இந்த கேள்விக்கும் கடந்த 10, 12 நாட்களாக பதில் இல்லை?
கேள்வி : பிரச்சனை அப்போ எங்க?
ப.சிதம்பரம் : தெரியல. ஒரு மர்மத்துக்குள்ள புதைந்திருக்கிற விடுகதை.
கேள்வி : உங்களுக்கே அந்த விடுகதைக்கு பதில் தெரியவில்லையா?
ப.சிதம்பரம்: Winston Churchill சொன்னாரு
A riddle wrapped in a mystery inside an Enigma (ஒரு புதிர், அதற்குள் மர்மம் புதைந்திருக்கும்) என்றார். அந்த விடுகதைக்கு யாராவது பதில் சொல்லனும், எனக்கு தெரிய வில்லை.
கேள்வி : ராகுல் காந்தி தகுதி நீக்கம் என்பது காங்கிரஸ்க்கு அனுதாபத்தை உண்டாக்கி இருக்கிறதா?
ப.சிதம்பரம் : இதை பற்றி இப்போது சொல்ல முடியாது. இந்த பாரத ஒற்றுமை பயணத்தின் போது வீடுகளுக்குள் இருந்த பல கோடி மக்கள் அவரை பார்க்க தெருவிற்கு வந்தார்கள் . அவரை பார்க்கனும், அவரோடு நடக்கனும், அவரோடு பேசனும், என்கிற உணர்வு எல்லோருக்கும் வந்தது. அந்த ஜனங்கள் பார்க்கிறார்கள் அல்லவா , அவர்களுக்கு தொன்றுகிறது என்ன இது போன மாசம் தான் யாத்திரை வந்தார் , அதுவும் 3500 கிலோ மீட்டர் நடந்து வந்தார். இப்படி அன்மையில் 3500 கிலோ மீட்டர் யாரும் நடந்ததாக சரித்திரமே கிடையாது. அவரை போய் தகுதி நீக்கம் செய்கிறார்களே! என்ன காரணம், என்ன அவசரம் என்று மக்களை யோசிக்க வைத்ததே பெரிய வெற்றி என்று நினைக்கிறேன்.
கேள்வி : ஒன்றிய அரசை கோபப்படுத்தியதற்கான காரணம், இந்த ஒற்றுமைக்கான யாத்திரை என்று சொல்வீர்களா அல்லது அதானி விவகாரமா?
ப.சிதம்பரம் : ராகுல்காந்தி பேச பேச தங்களுக்கு பாதிப்பு என்று நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ராகுல்காந்தி பேசக்கூடாது. நாடாளுமன்றத்தில் எதை பேசினாலும் அதை யாரும் தடுக்க முடியாது. அவை குறிப்பில் இருந்து நீக்கலாமே தவிற நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு தடை செய்ய முடியாது. தண்டனை தர முடியாது.
அந்த ஒரு அவையில் தான், இந்தியாவிலேயே அரசியல் அமைப்பில் எதை வேண்டுமென்றாலும் பேசலாம். உங்களைப் பற்றி நான் பேசலாம். அவை குறிப்பில் இருந்து நீக்குவார்கள் ஆனால் பேசியது பேசியது தான். ஆக நாடாளுமன்றத்தில் அவர் பேசக்கூடாது. அப்படி பேசினால் நாடாளுமன்ற தொலைக்காட்சியில் பதிவாகிவிடும் ,YOU TUBE – ல் பதிவு ஆகும் ,கட்சியை தாண்டி பத்திரிகைகளில் வெளியிடப்படும்.
இவை அனைத்தையும் தவிற்க வேண்டுமென்றால் நாடாளுமன்றத்திலேயே இவர் பேசக்கூடாது. நாடாளுமன்றத்தில் பேசக்கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும் ? நாடாளுமன்றத்தை விட்டு நீக்கிவிட வேண்டும்.
பின்னர் அவர் வெளியில் தான் பேசலாம் . வெளியில் பேசினால் பேசியதிலிருந்து ஏதாவது ஒரு வார்த்தை, ஏதாவது வாசகத்தை எடுத்து ஒரு வழக்கு போடலாம். ஆக இதெல்லாம் திட்டமிட்ட செயல்கள். நாடாளுமன்றத்தில் அவருடைய குரல் ஒலிக்க கூடாது என்பதற்காக திட்டமிட்ட செயல் தான் ராகுல் காந்தியை நீக்கியதற்கு காரணம் என்று நாங்கள் நினைக்கிறோம்.
கேள்வி : ராகுல் காந்திக்கு எம்பி பதவி திரும்ப கிடைப்பதற்கு சட்ட ரீதியாக ஏதாவது வாய்ப்புகள் இருக்கிறதா?
ப.சிதம்பரம் : உச்ச நீதிமன்றத்தினுடைய உத்தரவுகள் தெளிவாக இருக்கிறது. குற்றவாளி என்பது CONVICTION. அது நிறுத்தி வைக்கப்பட்டால் தகுதி இழப்பு கிடையாது. தற்காலிகமாக கிடையாது. மீண்டும் பதவி ஏற்கலாம். அதற்கு பின்னால் மேல்முறையீட்டில் என்ன ஆகிறது என்று பார்ப்போம்.
கேள்வி : ராகுல் காந்திய பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு காங்கிரஸ் – ன் நோக்கம் இல்லை என்று பேசி இருந்தீர்கள், அப்படி என்றாள் காங்கிரஸ் விட்டு கொடுக்க தயாராகிவட்டதா ?
ப.சிதம்பரம் : இது நான் மட்டும் சொல்ல வில்லை ! ராகுல் காந்தியே சொல்லி இருக்கிறார், காங்கிரஸ் கட்சி சொல்லி இருக்கிறது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே அவர்களும் சொல்லியிருக்கிறார்.
ஒருவரை பிரதமராக முன்னிறுத்துவது எங்களுடைய நோக்கம் அல்ல. முதலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையை வேண்டும். எதிர்க்கட்சிகள் கூடுமான இடங்களில் கூடுமானவரை ஒரே வேட்பாளரை போட வேண்டும். பாரதிய ஜனதா கட்சியை எதிர்க்க வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்து மாற்று அரசு ஏற்பட வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கம். இவை யெல்லாம் நடந்த பின்னர் தான் பிரதமர் . முதலில் பாரதிய ஜனதா கட்சிக்கு மாற்று அரசு அமையட்டும். அமைந்த பிறகு யார் பிரதமர் என்பதை எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுப்பார்கள்.
கேள்வி : உங்களுக்கு தெரியாது ஒன்றுமில்லை எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது சாத்தியம் என்று நினைக்கிறீங்களா?
ப. சிதம்பரம் : சாத்தியம் தான்! 542 இடங்களிலும் ஒற்றுமை ஏற்படுமா என்று சொல்ல தெரியாது. ஆனால் ஒரு 400 – 450 இடங்களில் ஒற்றுமை ஏற்பட்டு ஒரே வேட்பாளரை பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக நிற்க வேண்டும். அதற்கான சாத்தியம் இருக்கிறது.
கேள்வி : அதற்கான முன்னெடுப்பு தமிழகத்தில் இருந்து கூட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிட்டு இருக்காரு, அது எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்று நினைக்கிறீர்கள்?
ப. சிதம்பரம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். என்னை விட தெளிவாக இருக்கிறார். தமிழ்நாட்டில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி அணிக்கு எதிராக ஒரு முக்கிய வேட்பாளர் தான் நிற்பார். அதில் சந்தேகமே கிடையாது.
ஆக இந்த 40 தொகுதிகளிலே ஏற்படக்கூடிய எதிர்க்கட்சி ஒற்றுமை ஒரு பிரதான வேட்பாளரை நிறுத்துவது என்ற முடிவு அடுத்தடுத்து மாநிலங்களுக்கு பரவினால் ஏறத்தாழ 400 இடங்களில் ஒரு வேட்பாளரை போட முடியும். 542 தொகுதிகளில் போட முடியுமா? நான் சொல்ல முடியாது. ஆனால் 400 இடங்களில் போட முடியும்.
கேள்வி : ராகுலுடைய யாத்திரையில் பெரிய அளவுல வரவேற்பு இருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளோட முகமா மாற்றுவதற்கு காங்கிரஸ் தவறிவிட்டதா?
ப. சிதம்பரம் – எதிர்க்கட்சிகள் முகமாக மாற்றுவது எங்கள் நோக்கம் இல்லையே. நாடு முழுவதும் பகை, வன்முறை, வன்மம் பரவி இருக்கிறது. இன்றைக்கு எதற்கு எடுத்தாலும் செய்தித்தாள்களில் ”காதல் போர் ”- ஒரு பையன் ஒரு பெண்ணை கடத்திக்கொண்டு சென்று விட்டார் ,இவர் ஒரு சமுதாயம் அவர் ஒரு சமுதாயம் என்று செய்தி வருகிறது. பின்னர் ரெண்டு மாட்டை ஒரு வண்டியில் எடுத்துக்கொண்டு போனால் ”நீ மாடு கடத்துகிறாய்”. மாட்டு இறைச்சிக்காக மாடு கடத்துகிறாய் என்று குற்றச்சாட்டு.
மாதா கோயில்களில், கிறிஸ்துவர் கோயில்களில் சிலுவை உடைக்கப்படுகிறது. அங்கு பூஜை செய்தால் அதற்கு போய் தடை செய்கிறார்கள். ராம நவமி கொண்டாட்டத்தில் கூட சமுதாயத்தில் கலவரங்கள் ஏற்படுகிறது.
இதெல்லாம் கவலை தரவில்லையா? இதெல்லாம் அதிர்ச்சியும் கவலையும் தருகிறது. அதாவது நான் மிகைப்படுத்தி சொல்றேன் என்று நினைக்க வேண்டாம். ஒரு 30 நாள் பத்திரிகை எடுத்து வைத்து தொகுத்து படியுங்கள்.ஒரு பத்திரிகைலயாவது ஒரு நாளாவது ஒரு செய்தியாவது இல்லாத நாளே கிடையாது. ஆக இவ்வளவு பகை, இவ்வளவு வன்மம், இவ்வளவு வன்முறை பரவி வருகின்ற நாட்டில் ஒற்றுமை, அமைதி, அன்பு, சகோதரத்துவம் இந்த கொள்கைகளை சொல்வதற்காக நான் பயணம் மேற்கொள்கிறேன் என்று ஒரு 51 வயது இளைஞர் ராகுல் காந்தி புறப்படுகிறார் என்றால் இது சாதாரண விஷயம் இல்லை.
நான் கூட கன்னியாகுமரியில் ஒரு 7, 8 கிலோமீட்டர் நடந்தேன். அப்பறம் மைசூர்ல ஒரு 8 கிலோ மீட்டர், டெல்லியில் ஒரு 6, 7 கிலோ மீட்டர் நடந்தேன். என் வயதுக்கு 7, 8 கிலோ மீட்டரே களைப்பாக இருந்தது. சரி வயது குறைந்தவர்கள் 10 கிலோ மீட்டர் நடக்கலாம் 20 கிலோ மீட்டர் நடக்கலாம்.
நாள்தோறும் 24, 25 கிலோ மீட்டர் நடந்து 3500 கிலோ மீட்டர் நடந்துள்ளார். அதாவது குளிர் பிரதேசம், வெயில் பிரதேசம், மலை பிரதேசம் என எல்லா பருவ சூழ்நிலையிலும் 3500 கிலோ மீட்டர் ஒரு மனிதன் நடந்திருக்கிறார் என்றால் அவருடைய நெஞ்சு உறுதியை பார்க்கனும்.
கேள்வி : நடை பயணத்தில் வந்த கூட்டம் எல்லாம் காங்கிரசுக்கு வாக்களிக்க வாய்ப்பு இருக்கிறதா?
ப. சிதம்பரம்: அதை சொல்ல முடியாது. எல்லோரும் வந்தார்கள். எல்லா கட்சிகளும் வந்தது, நான் இல்லை என்று சொல்ல வில்லை. ஆனால் அந்த வாக்காளர்கள் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நாட்டில் அமைதி, சகோதரத்துவம், அன்பு நிலவ வேண்டும் என்பவர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் பெருவாரியான வாக்குகள் காங்கிரசுக்கு மாறும்.
கேள்வி : ஒரு கட்சியை ஆட்சிக்கு வர விடாமல் செய்வதற்கு எதிர் கட்சிகள் எல்லாம் ஒரே அணியில் திரளுனும். அப்படி என்று சொன்னால் அந்த கட்சி ரொம்ப பலமா இருக்கு என்று எடுத்துக்கலாமா? இல்லை நாம் ரொம்ப வீக்கா இருக்கிறோம் என்று எடுத்துக்கலாமா?
ப. சிதம்பரம் : அந்த கட்சி பலமாக இருக்கிறது மட்டும் அல்ல, அந்தக் கட்சிக்கு பல துணை சக்திகள் அசுர பலத்தை தந்திருக்கிறார்கள். அதில் முதலில் இருப்பது பணம்.
(நன்றி சன் நியூஸ்)
(தொடரும்)