கரூரில் செந்தில் பாலாஜி பிரமாண்டமான முறையில் நடத்திய திமுக பூத் கமிட்டி கூட்டம் என்பது எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுவினர் இடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருப்பதாக கள நிலவரம் சொல்கிறது என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக தரப்பில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இதில் இரு கட்சிகளின் பிரச்சார யுக்திகள் குறித்தும், அதற்கு மக்களிடம் உள்ள வரவேற்பு உள்ளிட்ட களநிலவரம் தொடர்பாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் வெளியிட்டுள்ள காணொலி பதில் கூறியிருப்பதாவது:- 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகிய இரு தரப்பிலும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்கள். ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் திமுக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை மீட்போம், மக்களை காதுப்போம் என்கிற பெயரில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இதில் அதிமுகவின் தேர்தல் பரப்புரை என்பது தொடக்கத்திலேயே சில கருத்தியல் ரீதியான சறுக்கல்களை எதிர் கொண்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை என்பது திராவிட இயக்கத்தின் ஒரு அடிநாத கொள்கையாகும். நீதிக்கட்சி காலம் முதல் திராவிட இயக்கத்தினர் இந்து சமய அறநிலையத் துறை வேண்டும் என்று சொல்லக்கூடியவர்கள்.
இந்நிலையில் ஹெச்.ராஜா, பாஜக பாணியில் இந்து சமய அறநிலையத்துறையை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி பேசியது அதிமுக தொண்டர்கள் மத்திலேயே அதிர்ச்சியாக உள்ளது. தமிழக மக்கள் திமுக, அதிமுக என்று மாற்றி மாற்றி வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள். தோற்கடிக்கவும் செய்வார்கள். ஆனால் இரு கட்சிகளும் என்றைக்கும் திராவிட கட்டுமானத்தில் இருந்து விலகாது என்று நினைத்திருந்தனர். இப்படிபட்ட அதிமுகவில் எடப்பாடி, திராவிட இயக்கத்தின் அடிப்படை உணர்வுகள், கொள்கைக்கு மாறாக பேசியுள்ளார். ஏனென்றால் அவர் அமித்ஷா, பாஜகவின் ஸ்க்ரிப்ட்டை பார்த்து படிக்கும் அளவுக்கு போய்விட்டார். இது நம்முடைய கொள்கை இல்லை என்று கூட அவருக்கு தெரியவில்லை.
கடலூர் ரயில் விபத்து தொடர்பாக பாஜகவினர் தங்களுடைய சமூகவலைதள பக்கத்தில் என்ன எழுதி இருந்தனரோ, அது அப்படியே கட் காபி பேஸ்ட் செய்த ஸ்கிரிப்ட் ஆக எடப்பாடியிடம் வருகிறது. அதை பார்த்தால் தெரியும். இந்த விபத்திற்கு மத்திய அரசை குற்றம்சாட்டக்கூடாது. சுரங்கப்பாதை அமைப்பதற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை. மத்திய அரசு எப்போதோ நிதி ஒதுக்கிவிட்டது என்று பாஜகவினரின் ஸ்கிரிப்ட்டை அப்படியே பார்த்து வாசித்து விட்டார். எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தின் தொடக்கமே இந்து சமய அறநிலையத் துறைக்கு கல்லூரிகள் கட்டக்கூடாது எனறு சொல்கிறார்.
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா போன்ற தலைவர்களே இதுபோன்ற கருத்துக்களை சொன்னது கிடையாது. ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலேயே இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கல்லூரிகள் நடந்தது. அப்போது ஜெயலலிதாவின் ஆட்சிக்கு எதிராகவே எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கிறார். இதையும் கோவையில் சென்று சொல்கிறார். கோவை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் உள்ள 35 தொகுதிகளில் அதிமுக 21 இடங்களில் வென்றுள்ளது. தற்போதும் எடப்பாடி பழனிசாமி நம்புவது கொங்கு மண்டலத்தை தான். அங்கேயே அவர்களுக்கு சறுக்கு ஏற்பட்டுவிட்டது.
திமுக தரப்பில் ஓரணியில் தமிழ்நாடு பிரச்சாரத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கும் நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தீயாக இறங்கி வேலை பார்க்கிறார். கருர் மாவட்டத்தில் பூத் கமிட்டி மாநாட்டிற்கே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கூப்பிட்டு, 35 ஆயிரம் பேருக்கு கறிவிருந்து வைத்துள்ளார். இதில் அதிமுகவினருக்கு என்ன பயம் என்றால்? செந்தில் பாலாஜியிடம் மட்டுமே முதலமைச்சர் 35 தொகுதிகளுக்கான பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார். மேற்கு மண்டலத்தில் கோவை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அவர் பொறுப்பாளராக உள்ளார்.
தற்போது கரூரில் ஒத்திகையை தான் நாம் பார்த்தோம். கோவைக்கும் செந்தில் பாலாஜி இறங்குகிறார். எடப்பாடி பழனிசாமி காரைவிட்டு இறங்காமல் பிரச்சார வாகனத்தில் இருந்து தப்பு தப்பாக தரவுகளை பேசிக்கொண்டும், திராவிட இயக்கத்திற்கு எதிராகவும் பேசிக் கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜி தெரு தெருவாக போக தொடங்கிவிட்டார். ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வது. பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது. பெரிய மாநாடுகள் நடத்த தொடங்கிவிட்டார். அடுத்து அவர் கோவை, ஈரோடு போன்ற மற்ற மாவட்டங்களிலும் செய்வாரா? என்கிற பதற்றம், பயம் அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டுவிட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டிலேயே இதுவரை திமுகவினரே இந்த வேலைகளை தொடங்கவில்லை. செந்தில்பாலாஜி மட்டும் தான் தொடங்கி இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் இது ஒரு முக்கியமான தொடக்க புள்ளியாக இருக்கப் போகிறது. இதே பாணியில் அவர் மேற்குமண்டலத்தில் செய்யப் போகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு இது மிகப்பெரிய ஆபத்தாகும். ஏனென்றால் அவர் நம்பி இருப்பது மேற்கு மண்டலத்தைதான். அங்குள்ள அண்ணாமலை ஆதரவாளர்கள் எடப்பாடிக்கு, அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார்களா? என கேள்வி எழுகிறது. கோவை தெற்கில் அதிமுக – பாஜக இணைந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பது வானதி சீனிவாசனுக்கே தெரியும். தற்போது அதிமுக – பாஜக இடையே ஜெல் ஆகுமா? என்று தெரியவில்லை. இந்நிலையில் கோவையில் செந்தில் பாலாஜி களமிறங்கினால் அதிமுக பழையபடி வெற்றி பெற முடியுமா என கேள்வி பொதுவான பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பாதிக்கு பாதி திமுக வென்றது. தற்போது முழுமையாக வென்று தருதற்காக செந்தில் பாலாஜி களமிறங்கி இருக்கிறார். மற்றொரு புறம் அதே மேற்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். எம்ஜிஆர் – ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லாமல் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கினார் என்கிற விமர்சனம் அவர் மீது உள்ளது. கட்சி அமித்ஷா கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டதாக விமர்சனங்கள் வர தொடங்கின.
இந்நிலையில், அதிமுக பலமானதாக இருப்பதாக சொல்லக்கூடிய மேற்கு மண்டலத்தில் திமுக தங்களுடைய வேலையை தொடங்கி விட்டார்கள். அதற்கு காரணம் செந்தில்பாலாஜி. அவர் கருரில் தொடங்கி இருக்கிறார். இவர் கோவையிலும் கடந்த முறை திமுக தோற்ற அனைத்து தொகுதிகளிலும், இதேபோல் ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களையும் நேரடியாக சந்திக்கக்கூடிய அளவிற்கு இறங்கப்போகிறார். ஈரோடு, திருப்பூர், போன்ற மாவட்டங்களிலும் இதேபோல கறி விருந்து நடத்தி, நாங்கள் செய்யப்போகிறோம் என்று சவால்விட்டு இறங்கியுள்ளார். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு எ.வ.வேலு, சக்கரபாணி போன்றவர்கள் இருக்கின்றனர். எல்லோருக்கும் தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆனால் யாரும் இந்த ஸ்டைலில் இறங்கவில்லை. எனினும் இவர்களை போல அவர்களும் இறங்க வாய்ப்பு உள்ளது.
எவ்வாறாயினும் செந்தில்பாலாஜி, திமுக – அதிமுக என 2 கட்சிகளுக்கும் முன்மாதிரியாக களத்தில் இறங்கி காட்டியுள்ளார். ரிசல்ட் எப்படி வருகிறது என்று பார்ப்போம். கொங்கு மண்டலம் என்றாலே அதிமுக – பாஜகவுக்கு சாதமாக இருக்கிறது. அந்த இடத்தில் டார்கெட் வைத்து, செந்தில்பாலாஜி இதேபோல் நான் வேலை செய்ய போகிறேன் என்று சொல்கிறார். இது உண்மையில் எடப்பாடிக்கு கலக்கத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக தான் அங்கிருந்து வரக்கூடிய கள தகவல்கள் தெரிவிக்கின்றன. போக போக இது எப்படி அமையும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.