தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் தொடங்கும் நிலையில், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் தொடங்க உள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த் நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று முதல் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான படிவங்களை அச்சடிக்கும் பணிகளும் இன்றுதான் தொடங்குகிறது. இதனை முடித்துவிட்டு தான் பணிகளை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் இரு பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெறும் என்று சொல்கிறார்கள். இந்த அறிவிப்புடன் சேர்த்து சில கேள்விகளுக்கான விளக்கங்களையும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கொடுத்திருக்கிறார். எஸ்.ஐ.ஆர், நடவடிக்கையால் பீகார் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாக அவர் சொல்கிறார். உயிருடன் இருக்கும் ஒருவரை இறந்துவிட்டார் என்று சொல்லி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கினால் அவர்கள் சந்தோஷப்படுவார்களா?

தேர்தல் ஆணையம், வங்கதேசம், நேபாளத்தில் இருந்த வந்த வெளிநாட்டி, வாக்காளர் பட்டியலிலும் வந்துவிட்டனர். அதனால் பீகாரின் தலையெழுத்தை வெளிநாட்டினர் நிர்ணயம் செய்வார்கள். எனவே சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணிகளை கொண்டுவருவதாக சொன்னார்கள். தற்போது பீகாரில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிந்து 2 கட்டங்களாக சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆனால் இந்த நடவடிக்கையில் எத்தனை வெளிநாட்டினரை கண்டுபிடித்தார்கள் என்று ஒருவருடைய பெயரை கூட தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை.
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி சூரியகாந்த் மற்றும் ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. விசாரணையில் தேர்தல் ஆணைய நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிப்பதாக கண்காணித்தனர். கேள்விகளை எல்லாம் எழுப்பினார்கள். ஆனால், அவ்வளவுதான். பீகாரில் பெற்ற அனுபவத்தை கொண்டு நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். நடத்தலாம் என்று அனுமதி வழங்கிவிட்டனர். தற்போது எஸ்.ஐ.ஆரை 12 மாநிலங்களில் நடத்தப் போகிறார்கள். தேர்தல் ஆணையம் இறந்துவிட்டதாக சொன்ன எத்தனை பேர் உயிருடன் வந்தார்கள் என்று யோசித்து பார்க்க வேண்டும். அப்போது என்ன விதமான தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அது.

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியதை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்கள் வாரியாக நீக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட சொன்னார்கள். அதேபோல் ஆணையம் வெளியிட்டது. அதன் பிறகு நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் மீது நடைபெற்ற திருத்தத்தில் 18 லட்சம் பேர் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தனர். குறிப்பாக ஏற்கனவே இருந்தவர்களில் 3.66 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அப்போது முன்னதாக வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலுக்கு என்ன அர்த்தம் உள்ளது?. வாக்காளர் பட்டியலில் 21.53 லட்சம் பேர் தற்போது சேர்க்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டு சேர்க்கப்பட்டவர்களா? அல்லது புதிதாக சேர்க்கப்பட்டவர்களா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஆனால் அதற்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை. 3.66 லட்சம் பேர் புதிதாக நீக்கப்பட்டார்கள் எனில், எந்த அடிப்படையில் அவர்கள் நீக்கப்பட்டனர் என்பதற்கும் பதில் இல்லை.

ஆனால் எஸ்.ஐ.ஆர். நன்றாக நடைபெற்றது. பீகார் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதனால் 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் செய்யப் போகிறோம் என்கிறார்கள். வெளி மாநிலங்களில் வேலை செய்கிற 35 லட்சம் பேரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நடைபெறும்போது பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் தமிழ்நாட்டில் சேர்க்கப்படுவார்கள். அவர்களை பாஜகவினர் தத்து எடுத்துக்கொள்வார்கள். அப்போது தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் என்ன ஆகும்? எனவே அரசியல் கட்சிகள் வடமாநில தொழிலாளர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க அனுமதிக்கக் கூடாது. அப்படி செய்யாவிட்டால் திமுக வென்ற இடத்தில் பாஜக வெற்றி பெறும்.

டிசம்பர் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். அதில் பொதுமக்கள் தங்களுடைய பெயர்கள் இருக்கிறதா என்பதை பார்த்து உறுதி செய்ய வேண்டும். காரணம் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக தான் எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுவதாக ஞானேஸ்குமார் சொல்கிறார். ஆனால் பீகாரில் உயிருடன் இருப்பவர்களை சாகடித்த கதைதான் நடைபெற்றது. அதேபோல் இங்கு நடக்க விடாமல் நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.
வாக்குச்சாவடி வாரியாக வெளியாகும் பட்டியலில் தங்களுடைய பெயர் இருப்பதை வாக்காளர்கள் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும், இறுதி வாக்காளர் பட்டியலிலும் பெயர்கள் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும். உங்களுடைய வீட்டில் இல்லாத 5 பேரை வாக்காளர்களாக சேர்த்திருப்பார்கள். அவர்கள் யார் என்று கேட்டு புகார் அளிக்க வேண்டும். எனவே நமக்கு நிறைய வேலைகள் உள்ளன. இது அரசியல் கட்சிகளுடைய வேலை மட்டுமல்ல. இது நம்முடைய வேலை. நம்முடைய எதிர்காலத்திற்கான வேலையாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


