பாஜக தேசிய தலைமையின் கட்டளையின் காரணமாகவே அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசி வருவதாகவும், அதன் தொடர்ச்சியாக மூப்பனார் நினைவு தினத்தில் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் என்றும் அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.


ஜி.கே.மூப்பனாரின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். இந்த கூட்டம் தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்பது குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- காமராஜரால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக வந்தவர் ஜி.கே.மூப்பனார். 1996 -1997 கால கட்டத்தில் தேவகவுடா பிரதமராக இருந்தபோது, அவர் மீது அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் பிரதமரை மாற்ற வேண்டும் என்று யுனைட்டெட் பிரண்ட் கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அப்போது, மூப்பனாரை பிரதமராக்க வேண்டும் என்கிற எண்ணம் ப.சிதம்பரம் போன்ற தமாகாவினருக்கு இருந்ததாக சொல்கிறார்கள். அதை அவர்கள் வெளியே சொல்லவே இல்லை.
ஐ.கே.குஜராலை அவர்கள் பிரதமராக தேர்வு செய்துவிட்டார்கள். அந்த காலகட்டத்தில் தமாகாவுக்கு என்று 20 எம்.பிக்கள் இருந்தனர். திமுகவுக்கு 19 எம்.பிக்கள் இருந்தனர். அப்போது மூப்பனார் தான் பிரதமராக வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு காய் நகர்த்தி இருந்தார்கள் என்றால், லாலுபிரசாத் யாதவின் வீட்டில் நடைபெற்ற அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் மூப்பனார் பிரதமராக வர வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்று இருக்கும். அங்கே பேசாமல் இருந்துவிட்டு, வெளியே வந்த உடன் மூப்பனாரை தேர்வு செய்வதை கலைஞர் தடுத்துவிட்டார் என்கிறார்கள்.

கலைஞர் மூப்பனார் பிரதமர் ஆவதை தடுக்கவில்லை. தங்களிடத்தில் முன்கூட்டியே ஏன் ஆதரவு கேட்கவில்லை என்று கலைஞர் கேட்டார். மூப்பனார் ஒரு காங்கிரஸ்காரர். காங்கிரசின் ஆதரவில்தான் கூட்டணி அரசே நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் மூப்பனார்தான் பிரதமராக வேண்டும் என்று ப.சிதம்பரம் போன்றவர்கள் பேசி இருந்தால், திமுக ஆதரித்து இருக்கும். குஜராலுக்கு மிகவும் நேர்மையானவர் என்கிற பட்டம் உள்ளது. அதேவேளையில் மூப்பனார் காங்கிரசில் இருந்து பிரிந்துசென்றவர் என்பதால், அவர் மேல் கட்சி தலைமைக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதனால் அது சாத்தியப்படவில்லை. அந்த பழியை தூக்கி திமுக மீது போட்டார்கள். திமுக வெறும் 19 எம்.பிக்களை மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி பிரதமரை தேர்வு செய்யும்? மூப்பனாரை பிரதமர் ஆக்குவதற்கான திட்டமிடல் இல்லை என்பதுதான் திமுக தரப்பு வாதமாகும்.

தேமுதிக நிர்வாகி எல்.கே.சுதீஷ், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளது, தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. அதேபோல் மதிமுகவும் பாஜக அணிக்கு செல்லும் என்றும் தகவல்கள் வெளியாகின. மதிமுக எம்.பி., துரை வைகோ, பிரதமர் மோடியை தனியாக சந்தித்துவிட்டு வந்ததாகவும், அவர் மத்திய அமைச்சராக முயற்சித்து வருவதாகவும் அக்கட்சியில் அதிருப்தியில் இருந்து வரும் மல்லை சத்யா போன்றவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். ஆனால் அவை எல்லாம் உறுதிபடுத்தப் படாத தகவல்கள். பாஜக பக்கம் அவர்கள் அணி மாறினால் தான் அது உறுதியாகும்.
தேமுதிகவை பொருத்தவரை விஜயகாந்தின் மறைவுக்கு பின்னர் கூடிய கூட்டத்தை பார்த்து, பிரேமலதா அரசியலில் ஒரு பெரிய வெற்றி காத்திருப்பதாக அவர் கருதிக்கொண்டார். விஜயகாந்தின் மறைவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும், அவருக்கு அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. எனினும் பிரேமலதா திமுக கூட்டணிக்கு வரவில்லை. அவர் முழுக்க முழுக்க அதிமுக கூட்டணியை நோக்கி சென்றுவிட்டார். ஆனால் அந்த கூட்டணி அவர்களுக்கு வெற்றியை தரவில்லை. வெற்றி பெறும் வாய்ப்பு உள்ள ஒரே அணி, திமுக தான். அந்த அணிக்கு போய் சில எம்எல்ஏக்களை பெற்றால்தான் கட்சி உயிருடன் இருக்கும். தேமுதிகவுக்கு மீண்டும் அரசியல் எதிர்காலம் வேண்டும் என்றால்? திமுக கூட்டணியில் இணைவது தான் அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு.

மூப்பனார் நினைவு தினத்தின்போது பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டனர். இதற்கு காரணம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் எச்சரிக்கைதான். எடப்பாடி பழனிசாமியை திமுகவை விட கடுமையாக விமர்சித்து பேசியவர் அண்ணாமலை. இன்றைக்கு வேறு வழியில்லை. எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து பேசுமார் பாஜக தேசிய தலைமை அண்ணாமலைக்கு சொல்கிறது. அதற்கு கட்டுப்பட வேண்டிய இடத்தில் அண்ணாமலை இருக்கிறார். மூப்பனார் முதன்மைப் படுத்தப்படவில்லை என்று சொல்கிற பாஜகவினர், அவருடைய மகன் ஜி.கே.வாசனை துணை குடியரசுத் தலைவராக அறிவித்து இருக்க வேண்டியது தானே. அல்லது அவரை மத்திய அமைச்சர் ஆக்குங்கள்.
தமிழ்நாட்டிற்கு பாஜக எந்த நன்மையும் செய்தது இல்லை. அப்படி செய்யாமல் அவர்கள் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. விஜயின் மதுரை மாநாட்டிற்கு பிறகு பாஜக, எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்த தொடங்கியுள்ளது. அதற்கு காரணம் அவர்கள் தமிழகத்தில் காலூன்ற முடியாது. அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்துவிட்டால், பாஜக கவிழ்ந்து விடும். தற்போது பாஜகவிடம் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 4 இடங்கள் 8 ஆக மாற வேண்டும் என்றால் அதிமுகவினரின் தயவு அவர்களுக்கு தேவை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


