தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு சமூக, பொருளாதார புரிதல்கள் இல்லை என்றும், அவர் தவறானவர்களின் கைகளில் சிக்கினால் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் உள்ளதாகவும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆகியோர் ஆதவ் அர்ஜுனா எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர்களது சந்திப்பு குறித்தும், நடிகர் விஜயின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
விகடன் நடத்தும் புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயும் ஒரே மேடையில் பங்கேற்க உள்ளனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா எழுதிய நுலை அவர்கள் வெளியிடுகின்றனர். திமுக குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்த ஆதவ் அர்ஜுனா மீது திருமாவளன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், விஜய் தனது கட்சி மாநாட்டின்போது, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்குவதாக கூறியிருந்தார். இந்த சூழலில் தான் திருமாவும், விஜயும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக, அதிமுக நிழலில் இருக்கும்போது வளர முடியாது தான். கடந்த முறை திமுக வழங்கிய 6 தொகுதிகளை திருமாவளவன் ஏற்றுக் கொண்டார். சனாதனத்தை எதிர்த்து போராட வேண்டும் என்பதற்காக அதனை ஏற்றுக்கொள்வதாக திருமா விளக்கம் அளித்திருந்தார். ஆனால் அவர் தற்போது கட்சியின் வளர்ச்சிக்காக எந்த முடிவும் எடுக்கலாம்.
தமிழக வெற்றிக் கழகம் கொள்கையில் எந்த அளவிற்கு உறுதியாக உள்ளது என்பது நமக்கு தெரியாது. திமுக அடிப்படை கொள்கைகளில் உறுதியாக உள்ள கட்சி, ஆனால் அதிமுக பாஜகவுடன் கொள்கையில் சமரசம் செய்து கொண்டுவிட்டது. இதனால் நடுநிலையான வாக்காளர்கள் திமுகவை முழுமையாக ஆதரிக்கின்றனர். அவர்களை கவருவது தான் விஜயின் திட்டமாக உள்ளது. திராவிடம், தமிழ் தேசியம் ஆகியவை தனது இரு கண்கள் என வீஜய் கூறியுள்ளதன் மூலம் நாம் தமிழர் கட்சியின் வாக்காளர்களுக்கு அவர் குறிவைத்து விட்டார். அதனால் விஜய் கூறுவது கோமாளித்தனமானது என்று சீமான் தனது கட்சியினர் இடையே கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் திருவிதாங்கூர், மைசூர், புதுக்கோட்டை தவிர்த்து, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என மற்ற அனைத்து பகுதிகளும் மதராஸ் ராஜதானியாக தான் இருந்தது. பணக்காரர்களாக இருந்தவர்கள் தங்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் போன பின்னர், பிராமண சமுதாயத்தினர் அதிகார வர்க்கத்தை கைப்பற்றி கொண்டனர். இதனால் மற்ற பணக்காரர்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற விரும்பினார்கள். இதனால் ஏழை, எளிய மக்களை ஈர்க்கும் விதமாக அவர்களுக்கு மதிய உணவு, வேலை வாய்ப்பு இடஒதுக்கீடு, அறநிலையத்துறையை உருவாக்கியது என பல்வேறு நலத் திட்டங்களை நீதிக்கட்சி காலத்திலேயே கொண்டு வந்தனர். தமிழ்நாட்டில் தியாகராயர், கேரளாவில் நாயர், ஆந்திராவில் பொட்டி ஸ்ரீராமுலு, பிரகாசம் போன்ற பல்வேறு தலைவர்கள் இருந்தனர்.
எனினும் தந்தை பெரியார் சமத்துவ சமுதாயத்தை படைக்க இது போதாது என எண்ணினார். மக்களின் சுய மரியாதையை அசைக்கும் மதம் போன்ற நிறுவனங்களை அசைக்க வேண்டும் என எண்ணினார். அதனால் தான் தொடங்கிய அமைப்பிற்கு திராவிடர் கழகம் என பெயர் வைத்தார். இந்த அமைப்பு தமிழர்களின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் தான் பாடுபட்டு வருகிறது. திராவிடம் என வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டால் இதனை எதிர்க்கலாம். ஆனால் தமிழ் வளர்ச்சி, மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே திராவிடர் கழகம் பாடுபட்டது. மானுவிடயல், வரலாறு, அரசியல் என அனைத்து அம்சங்களிலும் வைத்து பார்த்தால் திராவிடம் என்ற வார்த்தையின் மீது இத்தனை காழ்ப்புணர்ச்சி கொள்ளத் தேவையே இல்லை என்பது தெரியவரும். மேலும், திராவிடம் என பெயர் வைத்ததால் காவிரியில் கர்நாடகா அணைக்கட்ட அனுமதி வழங்கியதா?, இல்லை. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும் தான் பாடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 1991க்கு பிறகு தமிழ் வழியில் தொடங்கப்பட்ட பள்ளிகளை, அரசு உதவி பெறும் பள்ளிகளாக ஏற்க முடியாது என அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதனால் தமிழ்வழி பள்ளிகள் தற்போது மோசமான நிலையில் உள்ளன. எனினும் அதே காலக்கட்டத்தில் தொடங்கப்பட்ட ஆங்கில வழிப் பள்ளிகளின் உரிமையாளர்கள் பெறும் பணக்காரர்களாக மாறிவிட்டனர். இது தமிழை வளர்ப்பதாக கூறும் திமுகவுக்கு பெரும் கரும் புள்ளியாகும். திமுக தமிழ் மொழியை காப்பாற்றும் என பெரும் மக்கள் கூட்டம் நம்புகிறது. இதனை செய்ய திமுக தவறினால், விஜய் பயன்படுத்திக் கொள்வார். கொள்கையை பேச்சளவில் மட்டும் இல்லாமல் செயல்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பார்வையோடு பார்க்க வேண்டும். இதன் பலன் மக்களுக்குத்தான் சென்றடையும்.
அதிமுக, விஜயை ஆதரித்து தான் பேசி வருகிறது. நடிகர் விஜயும் திராவிட கட்சிகள் என்று பொதுவாக விமர்சிக்க வில்லை. மாறாக திமுகவை மட்டுமே குறிவைத்து பேசுகிறார். இதனால் அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கட்சிகள் தேர்தலில் கூட்டணி சேர முனைப்பு காட்டுவார்கள் என தோன்றுகிறது. அப்போது, கட்சியின் வளர்ச்சிக்காக திருமாவளவன் அவர்களுடன் சென்றாலும் தவறில்லை. எனவே அவர்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க திமுக முன்வந்தாக வேண்டிய நிலை ஏற்படலாம்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மீது எனக்கு அடிப்படையிலேயே சந்தேகம் உள்ளது. திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்.ஜி.ஆர். சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த் போன்றவர்களில் எம்.ஜி.ஆரும், விஜயகாந்தும் ஏழை, எளியவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தவர்கள். விஜயகாந்த் நல்ல உடல் நிலையுடனும், தனது குடும்பத்தினரை கட்சியை ஆக்கிரமிக்காமல் தடுத்திருந்தாலும் அரசியலில் நன்றாக வளர்ந்திருப்பார். ஆனால் ஜெயலலிதா உடன் கூட்டணி அமைத்து, தனது வளர்ச்சியை அவரே தடுத்துக் கொண்டார். ஆனால் எம்.ஜி.ஆர், விஜயகாந்த் ஆகியோரிடம் உள்ள மனிதநேயம் விஜயிடம் உள்ளதா என கேள்வி எழுகிறது?.
ரூ.200 கோடி சம்பளம், உச்ச நட்சத்திரமாக திரைத்துறையை விட்டு விலகுவதாக கூறும் விஜய், தனது கட்சி மாநாட்டிற்கு செலவு செய்ததற்கான கணக்குகளை காட்ட வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் கட்சியை தொடங்கியபோது, அவருக்கு நன்கொடையாக கிடைத்த ஒவ்வொரு ருபாய்க்கும் கணக்கு காட்டினார். ஆனால் லஞ்சம், ஊழலை எதிர்த்து கட்சி தொடங்கியுள்ள விஜய், தனது கட்சி மாநாட்டிற்கு செய்த செலவு விவரங்களை கணக்கு காட்ட வில்லை.
பொதுவாக நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். திரைத்துறையில் எம்.ஜி.ஆர் மிகப் பெரிய நிபுணர். அனைத்து துறைகளையும் நன்கு அறிந்த அவர், ஒரு படத்தை எப்படி வெற்றி பெற செய்ய வேண்டும் என அனைத்து விஷயங்களையும் அறிந்தவர். அவர் ஆனால் அரசியலில் அவருக்கு சமுக, பொருளாதா புரிதல் இல்லாமல் இருந்தது. அதனால் தான் ஆட்சியில் இருந்தபோது பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார். மக்களவைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தோல்வி அடைந்ததால், இடஒதுக்கீட்டை ஒரே அடியாக 69 சதவிகிதம் என உயர்த்தினார்.
வறுமையின் கொடுமையை அறிந்திருந்த எம்.ஜி.ஆர். மதிய உணவு, முதியோர் உதவித் தொகை என பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் ஆலோசகர்களின் தவறான வழிகாட்டுதலால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 133 அடியாக குறைக்க ஒப்புக்கொண்டார். மாணவர்களின் நலனுக்காக பொறியியல் கல்லூரிகளை கொண்டுவந்தார். ஆனால் உச்சபட்ச கட்டண அளவை நிர்ணயிக்காததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். 1947 முதல் 1987 வரையிலான கால கட்டத்தில் மறைமுக வரிகள் அதிகம் இருந்தது எம்.ஜி.ஆர். ஆட்சியில் தான். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் தான் பாதிக்கப்பட்டனர். தரமான ரேஷன் அரிசி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என எம்.ஜி.ஆர். எண்ணினார். ஆனால் கடைநிலை மக்களுக்கு அதிகாரம் சென்று சேருவதற்கு அவர் முனைப்பு காட்டவில்லை.
தந்தை பெரியார் தான் முதன் முதலில் விளிம்பு நிலை மக்களுக்கு அதிகாரம் சென்றடைய வேண்டும் என எண்ணினார். அந்த பணியை பேரறிஞர் அண்ணா தொடங்கி வைத்தார். கலைஞர் கருணாநிதி அதனை முன்னெடுத்துச் சென்றார். எம்.ஜி.ஆர், கலைஞர், காமராஜர் என 3 பேரின் ஆட்சிக் காலத்திலும் லஞ்சம், ஊழல் இருந்தது. ஆனால் நாம் எதை பார்க்க வேண்டும் என்றால் லஞ்சம், ஊழலால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டனரா? அல்லது அவர்களுக்கு அதிகாரம் சென்றடைந்ததா? என்பதை தான். திமுகவில் எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர். சிவாஜி போன்ற பல நடிகர்கள் இருந்தனர். நடிகர் விஜயை திமுக என்றும் கூத்தாடி என கூறியது இல்லை. மற்றவர்கள் கூறியதற்கு திமுகவை பொறுப்பாக்க கூடாது. விஜய் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மென்மையான கருத்துக்களையே கூறுகிறார். சிஏஏ தொடர்பாக தனது கருத்தை தெரிவித்தாரா? என்றால் இல்லை.
திராவிடம், தமிழ் தேசியம் என்று கூறினால் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியில் உள்ளவர்கள் தன்னிடம் வந்துவிடுவாரகள். இதனை வைத்து ஆட்சி அமைத்துவிடலாம் என விஜய் எண்ணுகிறார். இதனால் இவர் பின்னால் யார் உள்ளார்கள் என எண்ண தோன்றுகிறது. பெரியாரை தலைவராக ஏற்பதாகவும், ஆனால் ஒன்றே குலம் ஓருவனே தேவன் என்ற அண்ணாவின் கொள்கையை பின்பற்றுவதாகவும் கூறுகிறார். அண்ணா சொன்ன மாநில சுயாட்சி குறித்தே அவரும் பேசுகிறார். போராட்டத்தில் நம்பிக்கை இல்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் மக்கள் தங்களது உரிமைகளுக்காக அமைதியான வழியில் போராட வேண்டும். தலைவர் களத்தில் முன்னால் நின்று போராட்டத்தை வழிநடத்த வேண்டும். அப்போது தான் அவரது அரசியல் நிலைப்பாடு தெரியவரும்.
என்னுடைய அச்சம் எல்லாம் விஜய் தவறானவர்களின் கைகளில் சிக்கிக் கொண்டால் நாட்டுடைய அரசியலும், அவரது அரசியலும் தவறான பாதையில் சென்றுவிடும் என்பதுதான். நடிகர் விஜய்க்கு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பற்றிய புரிதல் கிடையாது. எம்.ஜி.ஆரை 10 ஆண்டுகள் வரை மக்கள் ஆட்சிபுரிய அனுமதித்தனர். அதற்கு காரணம் அவரிடம் இருந்த ஏழைகளுக்கு உதவிடும் குணம், அரசியலுக்கு வரும் முன்பாக 30 ஆண்டுகளாக ஏழைகளுக்கு அள்ளிக் அள்ளிக் கொடுத்த குணம் ஆகியவை தான். இவை எல்லாம் விஜயிடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.