நடிகர் விஜய், தன்னை ஒரு கல்ட் எனப்படும் வழிபாட்டிற்குரிய நபராக மாற்ற முயற்சி செய்கிறார். பகுத்தறிவுக்கு ஒவ்வாத அவரது நடவடிக்கையை தமிழக மக்கள் ஊக்குவிக்கவே கூடாது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசியது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல் :- கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய், மகாபலிபுரம் தனியார் ரெசார்ட்டில் சநதித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும், அனுமதி கிடைத்திருந்தால் கரூருக்கு வந்திருப்பேன் என்று சொன்னதாகவும் பாதிக்கப் பட்டவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்திய அரசியல் வரலாற்றில் இதுபோன்று ஒரு தலைவர் நடந்துகொண்டதை இப்போது தான் முதன் முறையாக பார்க்கிறேன். இதுபோன்ற ஒரு துயர சம்பவம் நடைபெறுகிறபோது அரசியல் கட்சியினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதை பார்த்திருக்கிறோம்.
குறிப்பாக பதவியில் இருக்கும் அரசியல் தலைவர்களும், விபத்தில் தொடர்புடைய கட்சியின் தலைவரும் சம்பவ இடத்திற்கு செல்வார்கள். கரூரில் துயர சம்பவம் நடைபெறுவதை பார்த்துவிட்டும் விஜய் சென்னைக்கு திரும்பிய நிகழ்வு, அவர் மீதான மதிப்பை குறைத்துவிட்டது. பொதுமக்கள், ரசிகர்கள் பார்வையில் விஜய் மீதான மதிப்பு அப்போதே போய்விட்டது. சம்பவத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக சார்பில் உதவி செய்யாத நிலையில், அப்படி உதவியவர்கள் மீதும் குற்றம்சாட்டுகிற மோசமான நிலைக்கு போய்விட்டனர்.

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மீது அன்பு இருக்கலாம். அவர்கள் விஜயை குறை சொல்லாமல் இருக்கலாம். இறந்தவர்கள் இறந்திருக்கலாம். எஞ்சியிருக்கும் வாழ்க்கையை அவர்கள் கடத்த வேண்டும். அவர்களுக்கு பல உதவிகள் உறுதிசெய்யப்படுகிறது. அந்த உதவிகள் அவர்களுக்கு கிடைக்கும். அதிலும் பிரச்சினை வரக்கூடாது. அவர்கள் குடும்பங்களை தவெக தரப்பில் தத்தெடுப்பதாகவும் சொல்கிறார்கள். அப்படி இருக்கும்போது அவர்கள் விஜய் குறித்து எதிர்மறையான கருத்துக்களை சொல்ல மாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரும் விஜயின் ரசிகர்களாக இருக்க மாட்டார்கள். வேடிக்கை பார்க்க போய்கூட அவர்கள் உயிரிழந்திருக்கலாம்.
அதேநேரத்தில் ஒரு கட்சி கூட்டம் நடத்துகிறபோது, அந்த கட்சியின் தலைவர் பொறுப்பு என்ன? பாதிக்கப்பட்ட மக்களே குறை சொல்லவில்லை என்பதை தவெகவினர் எப்படி மாற்றுகிறார்கள் என்றால்? அப்போது அந்த மக்கள் விஜய் மீது எவ்வளவு வெறித்தனமாக இருக்கிறார்கள் என்று பார்த்தீர்களா என்று சொல்கிறார்கள். விஜயை கல்ட் எனப்படும், வழிபாட்டிற்குரிய வெறித்தனமான கும்பலை போன்று மாற்றுகிறார்கள். எந்த விதமான பகுத்தறிவும் இல்லாமல் எது செய்தாலும் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் கும்பலை தயார் செய்கிறார்கள்.

விஜயின் ஆலோசகர் ஒருவர் பத்திரிகையாளரிடம் பேசுகையில், தங்களுக்கு விஜய் கல்ட்டை வளர்ப்பது தான் நோக்கம் என்றும், என்ன நடந்தாலும் அவர்கள் விஜய் பின்னால் தான் நிறபார்கள் என்றும் சொல்லியுள்ளார். அப்படி அவர் சொன்னது உண்மை எனில் இந்த கணமே தமிழ்நாட்டு மக்கள் தவெகவை புறக்கணிக்க வேண்டும். காரணம் கல்ட் என்பது பக்தி தொடர்பான விஷயமாகும். அதுவே கூடாது என்பதுதான் நம்முடைய கருத்தாகும். அப்படி இருக்கும்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்பவர் கல்ட்டை வளர்க்க விரும்பினார் என்றால், அது பகுத்தறிவு சிந்தனைக்கு சற்றும் ஒவ்வாதது.
அப்படி செய்ய விஜய் விரும்பினால், முதலில் தன்னுடைய வழிகாட்டியாக சொல்கிற பெரியாரை ஒதுக்கி வைக்க வேண்டும். பகுத்தறிவு இல்லாத ஒரு கல்ட் கும்பலை வளர்ப்பவர் எப்படி பெரியாரை வழிகாட்டியாக வைக்க முடியும். எனவே பெரியார் படத்தை எடுத்துவிட்டு, நீங்கள் எந்த கல்ட் படத்தை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாட்டு மக்கள் இதுபோன்ற அரசியல் தலைவர்களை ஊக்குவிக்கவே கூடாது.

கல்ட் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணம் தான், கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் விஜய் மீது குறை சொல்லாமல் இருக்கிறார்கள். விஜய் கூட்டம் நடத்தியதில் பல்வேறு தவறுகள் இருக்கிறது. அதை சொல்லாமல், தன்னுடைய குழந்தை இறந்தாலும் பரவாயில்லை. விஜயை அருகில் சென்று பார்க்க முடிந்தது என்று சொல்கிறார்கள். இது தான் கல்ட் மனப்பாண்மை. இதைதான் முதலில் ஒழிக்க வேண்டும். அத்தகைய கல்ட் கலாச்சாரத்தை வளர்க்கும் தலைவர்களையும் ஒதுக்கித்தள்ள வேண்டும்.
ஒரு கட்சியின் தலைவருக்கும், தொண்டர்களுக்கும் உள்ள தொடர்பு என்பது கட்சியின் கொள்கை, செயல்பாட்டை அடிப்படையாக கொண்டதாகும். மாறாக வழிபாட்டிற்குரிய தன்மை கிடையாது. அப்படிபட்ட கல்ட் கலாச்சாரத்தை விஜய் வளர்க்க விரும்பினால், நாம் முதலில் விஜயை எதிர்க்க வேண்டும். அதுபோன்ற கல்ட் கலாச்சாரத்தையும் வளரவிடக் கூடாது. அப்போது தமிழ்நாட்டில் போதிக்கப்பட்ட பகுத்தறிவுக்கு எந்த வித பயனும் இல்லாமல் போய்விடும் , இவ்வாறு அவர் தெரிவித்தார்.


