2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் ஒரு ஸ்பாய்லராக இருப்பார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியாது என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசியல் களம் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகர், விஜயிடம் சேர்ந்துவிட்டார். ஓபிஎஸ் இடம் 2வது விக்கெட் காலியாகிவிட்டது. ஆனால் வில்லிவாக்கம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கட்சியில் சேர்கிறார் என்கிற போது, அவருக்கு உரிய குறைந்தபட்ச மரியாதை கூட அளிக்கப்படவில்லை. அதிமுகவில் பதவியில் இல்லாத ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது தெரியவில்லை. ஆனால் தவெகவுக்கு ஒரு நல்ல வேட்பாளர் கிடைத்துள்ளார்.
இதேபோல் விஜய் 234 தொகுதிகளுக்கும் நல்ல வேட்பாளர்களை தேட வேண்டும். அதற்கான கால அவகாசம் அவர்களிடம் இல்லை. நான் களத்திற்கு நேரடியாக சென்று பார்க்கிறபோது விஜய்க்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. விஜயை மூன்றாவது பெரிய சக்தியாக மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் ஆவது, அமைச்சரவை ஏற்படுத்துவார். ஆட்சியில் பங்கு தருவார் என்பது ஏற்புடையது அல்ல.

தமிழக அரசியலில் புதிதாக ஒரு முகம் வரும்போது, எப்போதும் அதற்கு 8 முதல் 10 சதவீதம் வாக்குகள் வரும். அப்படி வந்தது தான் தமாகா, மதிமுக, கமல்ஹாசன், அமமுக, விஜயகாந்த், அன்புமணி போன்றவர்கள் தான். விஜய்க்கு இதைவிட கூடுதல் வாக்குகள் வரும் என்பது என்னுடைய கணக்கு. 12 முதல் 15 சதவீதம் வாக்குகள் வரலாம். அதை விட அதிகம் போக வாய்ப்பு இல்லை. அரசியலில் எந்த அடிப்படையான விஷயங்களும் செய்யாமல் வந்த உடன் முதலமைச்சர் ஆகி விடுவேன் என்று சொன்னால், எல்லோரும் வாங்க வாங்க என்று சொல்லுவார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் நிறுத்த அதிமுகவிடம் ஆட்கள் உள்ளனர். விஜயிடம் ஆட்கள் உள்ளனரா? முதலில் விஜய் தேர்தலில் நின்று போட்டியிடட்டும். அதன் பிறகு அவருடைய அரசியல் எம்ஜிஆர் மாதிரியா? அல்லது அண்ணா மாதிரியா? என்று நாங்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொள்கிறோம். அவர்களின் உழைப்பில் கால்வாசி விஜய் செய்திருப்பாரா? எதுவும் இல்லாமல் விஜய் பில்ட்அப் கொடுக்கிறார். விஜயின் பின்னால் வயதானவர்களோ, விவசாயிகளோ கூடுவது கிடையாது. சினிமா தியேட்டரில் கூடுவது போன்று இளைஞர்கள் தான் திரள்கிறார்கள்.

விஜயால், திருப்பரங்குன்றம் விவகாரம், அரசு ஊழியர்கள் போராட்டம் என எந்த விவகாரத்திலும் உறுதியான நிலைப்பாடு எடுக்க முடியவில்லை. பரந்தூரில் மக்களை திரட்டி போராடுவேன் என்று சொன்னார். ஆனால் இதுவரை போராடவில்லை. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா போன்றவர்களை கூட வைத்துக்கொண்டு ஊழல் அற்ற ஆட்சி தருவேன் என்று சொல்கிறார். எதற்காக அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டீர்கள்? ஏன் எம்ஜிஆரை அப்போது எடுக்காமல் இப்போது எடுக்கிறீர்கள்? அதிமுக ஆவதற்கு தான் இவ்வளவு போட்டியா? நீங்கள் திமுகவை எதிர்க்கிறதுக்கு உங்களுக்கு சொந்தமாக எதுவும் கிடையாது. விஜய் சொல்வது போன்று திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்பது சாத்தியம் கிடையாது. அது விஜய்க்கே தெரியும்.
விஜய்க்கு வாக்கு வராது என்று நான் சொல்லவில்லை. அவர் ஸ்பாய்லராக இருப்பார். ஜெயிப்பவர்களை தோற்கடிக்க முடியும். தோற்பவர்களை ஜெயிக்க வைக்கக முடியும். அந்த வேலையை அவர் செய்வார். அவருடைய வேட்பாளர்களும் செய்வார்கள். விஜய், தேர்தலில் தனித்து நின்றார் என்றால் அவர் வெல்ல மாட்டார். 2031ல் முதலமைச்சர் ஆவாரா? என்றால் அதற்கு வாய்ப்பு உள்ளது. இன்றைய சூழலில் போட்டி என்பது திமுக, அதிமுக இடையே தான்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தான் போட்டி என்று சொல்கிறார். ஏன் விஜய் தான் நேரேட்டிவ் செட் செய்ய வேண்டுமா? உதயநிதி நேரேட்டிவ் செட் செய்யக்கூடாதா? திமுகவும், அதிமுகவும் முதலிடத்திற்கு சண்டை போட்டுக் கொள்கிறோம். நீங்கள் சீமானிடம் போய் மூன்றாவது இடத்திற்கு சண்டை போட்டுவிட்டு வாங்க என்று உதயநிதி சொல்லிவிட்டார். ஆனால் விஜய், திமுகவா? தவெகவா? என்று சொல்வது விளம்பரம். திமுகவில் 67 ஆயிரம் பிஎல்ஏக்கள் வைத்திருக்கிறார்கள். நீங்கள் 68 ஆயிரம் பிஎல்ஏக்களை போட்டுவிட்டு திமுகவுக்கு மாற்று என்று சொல்லுங்கள். தவெகவில் பூத் வெலவல் முகவர்களே போடவில்லை. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு பணிகளுக்கு கூட போகவில்லை என்றால் அது என்ன மாதிரியான கட்சி என்று சொல்லுங்கள்.
அரசியல் எனக்கு தெரியும் என்கிற அடிப்படையில் நான் பேசுகிறேன். அரசியல் நடத்துவதற்கான எந்த இலக்கணமும் இன்றி, நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என்று சொல்வது எப்படி? ஜேசிடி பிரபாகர், செங்கோட்டையன் போன்றவர்கள் கட்சியில் ஒவ்வொரு விஷயத்தையும் சரி செய்வார்கள். அதற்கு காலம் ஆகும். அவர்கள் இருவரும் வந்ததால் எல்லா இடங்களிலும் தவெக வென்றுவிடுமா?, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


