என்.கே.மூர்த்தி
தமிழக அரசியல் களத்தில் இரண்டாவது இடம் யாருக்கு என்ற போட்டிதான் 2026 தேர்தலில் இருக்கும். 2026 தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதுவும் நடிகர் விஜய் கட்சி தொடங்கி, கடந்த அக்டோபர் 27ல் மாநாடு நடத்தி முடித்த பின்னர் அரசியல் களம் மேலும் விறுவிறுப்பானது. விஜய் தனித்து போட்டியிடப் போகிறாரா? அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிடப் போகிறாரா அல்லது அவருடன் சில கட்சிகளை சேர்த்துக் கொண்டு களம் காணப்போகிறாரா என்ற யூகத்தின் அடிப்படையில் நிறைய செய்திகள், விவாதங்கள் நடைப்பெற்றது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு களநிலவரம் வேறுமாதிரி இருந்தது. அவர் கட்சி பெயரை அறிவித்து மாநாடு நடத்தி முடித்த பின்னர் அரசியல் களம் முற்றிலும் மாறிவிட்டது. தமிழக வெற்றிக் கழகத்தினால் சில அரசியல் கட்சிகளுக்கு நேரடியாகவே பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதில் நாம் தமிழர் கட்சிக்கு முதல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கடந்த இரண்டு மூன்று தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வந்தார்கள். அதனால் ஒவ்வொரு தேர்தலிலும் அவருடைய வாக்கு வங்கி அதிகரித்து வந்தது. 2026 தேர்தலில் அந்த வாக்குகள் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு சென்றுவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று பாஜக தலைவர் அண்ணாமலையின் அரசியல் பயணம் பல இளைஞர்களை கவர்ந்தது. அவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பினார்கள். அதனால் பாஜக தமிழ்நாட்டில் வேர்விட தொடங்கியது. தற்போது அந்த வாக்கு வங்கியும் தவெகவிற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்நாடு அரசியல் களத்தில் திமுகவின் கொள்கைகளை பிடிக்காமல் எதிர்ப்பில் உருவான கட்சிகள் தான் அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது தோன்றியுள்ள தவெக வரை. திமுக எதிர்ப்பில் உருவான அதிமுக பலமுறை ஆட்சியை பிடித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. ஊழல், சிறை தண்டனை, நம்பிக்கை துரோகம், ஏமாற்றம் என்று ஏராளமான சோதனைகளை சந்தித்த அதிமுக தற்போது தேய்பிறை காலத்தில் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சென்ற பின்னர் நடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என்று அனைத்திலும் தோல்வியை சந்தித்து தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது.
இந்த கால சூழ்நிலையை கணித்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். நடிகர் விஜய்யின் வரவை அதிமுக கொண்டாடியது. விஜய்யுடன் கூட்டணி அமைத்து 2026 தேர்தலில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு கோட்டை கட்டியது. திடீரென அதிமுகவுடன் தவெக கூட்டணி இல்லை என்று அறிவித்து அந்த கனவு கோட்டையின் மீது இடியை இறக்கினார் விஜய். அந்த அறிவிப்பினால் அதிமுக தலைமை ஆடிப்போய் இருக்கிறது. செய்வதறியாமல் தவிக்கிறது.
திமுகவின் வாக்கு வங்கி எந்த காலக்கட்டத்திலும் குறைந்ததில்லை. அதுவும் தற்போது குடும்பப் பெண்களுக்கு உரிமை தொகை, இலவச பேருந்து பயணம், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய், ஆரம்பப் பள்ளியில் காலை உணவு திட்டம் என்று மக்கள் பணிகளினால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கு உயர்ந்தது இருக்கிறது. அதனால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவது உறுதியாகி விட்டது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கடந்த அதிமுக அரசை கண்டித்து அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கடுமையாக போராடினார். கிராம சபை கூட்டங்களை நடத்தி அதிமுக அரசின் ஊழல்களை மக்களிடம் கொண்டு சேர்த்தார். கொரோனா காலக்கட்டத்தில் மக்களுக்கு அரசி, மளிகை என்று பல்வேறு உதவிகளை செய்தார். அதனால் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியது. 2021 தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானார். தற்போது எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி ஆளும் திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தியதை விரல்விட்டு எண்ணிவிடலாம். மாவட்டம், ஒன்றியம் வாரியாக அதிமுகவின் செயல்பாடு முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. அதிமுக தொண்டர்களிடம் இயல்பாகவே சோர்வு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் எல்லோரும் திமுகவை வீழ்த்த தற்போது உள்ள அதிமுகவினால் முடியாது என்ற மனநிலைக்கு வந்துள்ளனர். அதனால் தான் அதிமுக -தவெக கூட்டணி அமையும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். அது நடக்கவில்லை என்றதும் சோர்வடைந்து உள்ளனர்.தற்போது இரண்டாவது இடத்தை பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் அதிமுக தொண்டர்களிடம் எழுந்துள்ளது. இரண்டாவது இடத்தை அல்லது அதிகாரப் பூர்வமாக எதிர்கட்சி வரிசையில் அமரப்போவது அதிமுகவா? தவெகவா? என்ற போட்டி எழுந்துள்ளது. இதுவே தற்போது மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
திமுகவை எதிர்த்து விஜய் குரல் கொடுத்தால், பழனிச்சாமி பதறுவது ஏன்?