புதுமைப்பெண் திட்டம் – மாணவிகள் கருத்து
அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு அரசு வழங்கும் மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை பயனுள்ளதாக இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி மாணவிகளின் கருத்துக்களை காண்போம்.
பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் பட்டப்படிப்பு, டிப்ளமோ- தொழில் படிப்புகளில் இடை நிறுத்தம் இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கில் மாணவிகளுக்கு ரூ.1,000 மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நடப்பாண்டிலேயே இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது.
2, 3 மற்றும் 4-ம் ஆண்டு கல்லூரி படித்து வரும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
உதவித்தொகை சென்றடையும் வகையில், அனைத்து செயல்பாடுகளையும், இணையதளத்தின் வழியே நடக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டிருக்கிறது.
தற்பொழுது 1,000 ரூபாய் உதவித்தொகை மாணவிகளுக்கு அவர்களது வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது என்ற தகவலையும் நாம் அறிவோம்.
அரசின் இந்த புதுமைப்பெண் திட்டம் மாணவிகளுக்கு சரியாக கிடைக்கிறதா, இல்லையா?
அந்த தொகை எந்த அளவுக்கு அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது?
என்பது குறித்து, திட்டத்தில் பயன்பெற்ற மாணவியின் கருத்துக்களைப் பார்ப்போம்.
மாணவியின் கருத்து:
என் பெயர் சத்யா பிரியா நான் சென்னை Thiruvottiyur Government Arts And Science College 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். தமிழக அரசின் இந்த புதுமை பெண் திட்டம், 1000 ரூபாய் உதவித்தொகை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
எனது அப்பா இறந்துவிட்டார். என் அம்மா தான் என்னை கல்லூரியில் சேர்த்து படிக்கவைக்க மிகவும் சிரமம் படுகிறார். என் அம்மாவோ கட்டட வேலை செய்பவர்.
6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலு,ம் 11, 12-ம் வகுப்புகளை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் முடித்தேன்.
இந்த தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வங்கியில் செலுத்துவதால் கல்லூரி படிப்பிற்கு பயனாக உள்ளது. எனது கல்லூரி படிப்பை எந்த வகையிலும் பாதிப்பு இன்றி தொடரவும் முடிகிறது.
சத்யா பிரியாவை தொடர்ந்து மற்றொரு மாணவியிடம் கேட்டோம்:
என் பெயர் கவிதா என் அப்பா கூலி வேலை செய்கிறார் எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். எங்கள் இருவரையும் படிக்க வைக்க அவர் மிகவும் கஷ்டப்படுகிறார்.
அரசு தரும் இந்த உதவித்தொகை எனக்கு மட்டும் அல்ல என் தங்கையின் படிப்பிற்கும் மிகவும் உதவியாக உள்ளது.
மூன்றாண்டு வரை எங்கள் கல்லூரி படிப்பை முடிப்பதற்கு இந்த புதுமை பெண் திட்டம் மிக உதவியாக உள்ளது.
இந்த மாணவிகள் இருவரும், மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து ஏழை, எளிய மாணவர்களுக்கு பள்ளியோடு கல்வியை நிறுத்தி விடாமல் உயர் கல்வியை தொடர்ந்து படிக்க ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் உள்ளது என்று கூறி விடைப்பெற்றார்கள்