spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆன்மீகம்பக்தர்கள் புனித நீராடி வழிபாடு - மாசி மகம்

பக்தர்கள் புனித நீராடி வழிபாடு – மாசி மகம்

-

- Advertisement -

மாசி மகம் தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர். 7 தலைமுறை தோஷம் போக்க முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

தமிழ் மாதம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவிதமான மகத்துவம் உண்டு. மாசி மாதத்தை “தீர்த்தமாடும் மாதம்“ அல்லது ”கடலாடும்” மாதம் என்று கூறுவர்.

மகம் நட்சத்திரத்தை பித்ருதேவா நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள். தமிழ் மாதங்களில் விசேஷமான மாசி மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்று கூறப்படுகிறது. அதன்படி இன்று(06.02.2023) மாசி மக தினமாகும்.

we-r-hiring

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி விரதம் இருந்து, பக்தியுடன் குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை வழிபடுவது என்பது வழக்கமாக உள்ளது. அப்படி வழிபட்டு வந்தால் , எல்லாவிதமான தோஷங்களும், பாவங்களும் விலகி, குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது நம்பிக்கை.

தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், தோஷங்கள், நோய்கள் அனைத்தும் இந்த மாசி மகம், மகாமகத்தின்போது குளத்தில் நீராடுபவர்களுக்கு நீங்கி அவர்கள் ஞானமும் ஆரோக்கியமும் பெறுவார்கள் என கூறப்படுகிறது.

மகம் நட்சத்திரம் இன்று இரவு 9.30 மணி முதல் இன்று நள்ளிரவு 12.05 வரை நீடிக்கிறது. மாசிமகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் 7 ஜென்ம தோஷங்கள் நீங்கி சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும் என்பது நம் பிக்கை. மகம் நட்சத்திரத்தை பித்ருதேவா நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள்.

சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.

மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். ஆகையால் அன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும்.

அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் அம்மா மண்டபத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அங்கு தயார் நிலையில் இருந்த சிவாச்சாரியார்கள், புரோகிதர்கள் மூலம் தங்களது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து திரளானோர் வழிபாடு நடத்தினர்.

பின்னர் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரெங்கநாதரையும், மலைக்கோட்டை தாயுமான சுவாமியையும் வழிபட்டனர். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினத்தில் உள்ள வெள்ளி கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி வழிபட்டனர்.

நீராடும் முறைகள்:

புண்ணிய நதிகளில் நீராடுபவர்கள், ஒரே ஆடையை உடுத்தி நீராடக் கூடாது. இடுப்பில் மற்றொரு ஆடையை உடுத்திக்கொண்டு நீராட வேண்டும். அதற்கு முன்னர், வடக்கு அல்லது கிழக்கு நோக்கி மூன்று முறை சிறிதளவு நீரை  உள்ளங்கையில் எடுத்து தலையின் மீது தெளித்துக்கொள்ள வேண்டும். இரவில் நீராடக் கூடாது.

புண்ணிய நதியில் புனித நீராடுபவர்களுக்கு சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் பல்வேறு பலன்களை வழங்குவர். மூன்று முறை நீராடுவதற்கும் நன்மைகள் உண்டு. முதல் முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை மூழ்கினால் சொர்க்கப்பேறு கிடைக்கும். மூன்றாம் முறை மூழ்கி எழுந்தால் அவர் செய்த புண்ணியத்துக்கு ஈடே கிடையாது என்று சொல்லப்படுகிறது.

மாசி மகத்தின்போது அதிகாலையில் எழுந்து நீராடி, பக்தியுடன் துளசி கொண்டு மகாவிஷ்ணுவை வழிபட்டு வந்தால், வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட வாழ்வில் இன்பமும் வெற்றியும் கிடைக்கும்.சரஸ்வதியை மணமுள்ள மலர்களால் வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

இந்த மாசி மகத்தின்போது நாம் செய்யும் எல்லாக் காரியங்களும் இரட்டிப்புப் பலன்களைத் தரும்.

இந்த தினத்தில் பல கோவில்களில் உற்சவ மூர்த்தியுடன் மக்களும் நீர்நிலைகளில் மூழ்கி வழிபாடு நடத்தும் தீர்த்தவாரி நடைபெற்றது. புனித நீராட்டு மற்றும் வழிபாட்டுடன் சில தான தர்மங்களையும் செய்வதால் பாவங்கள் நீங்கி அனைத்து வளங்களும் கிடைக்கப் பெறுவது உறுதி.

அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது தான் மாசி மகம் என்பதால், பலர் தங்களால் இயன்ற அன்னதானம் செய்தனர். அதுமட்டுமின்றி சிவபெருமான் வருண பகவானுக்கு சாப விமோசனம் அளித்ததும் இந்தநாளில்தான் என்பதால் மழை வளம் பெருகி, அனைவரும் சுபிக்ஷமாக இருக்க மாசிமக வழிபாடு சிறந்ததாகும்.

MUST READ