ஹாட்சிப்ஸ் உணவக தயிர்பூரியில் கரப்பான் பூச்சி
சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஹாட்சிப்ஸ் உணவகத்தில் கொரட்டூரை சேர்ந்த ஜான், சினேகா, திவ்யா ஆகியோர் பேல்பூரி, பாவ்பாஜி, தயிர்பூரி உணவருந்தியுள்ளனர். அப்போது, திவ்யா சாப்பிட்ட தயிர்பூரி உணவில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் உண்ட உணவில் கரப்பான்பூச்சி கிடந்ததாக உணவக நிர்வாகத்தினரிடம் குற்றம் சாட்டியுள்ளனர். அப்போது உணவகத்தினர்‘சார், வழக்கமாக இது போல நடக்காது. தெரியாமல் நடந்துவிட்டது. இதனை பெரிது படுத்த வேண்டாம்’ என சமாதானம் செய்துள்ளனர். அப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே திவ்யாவிற்கு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி எடுக்கவே, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.

இதற்கிடையே சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை உதவி எண்ணிற்கு போன் செய்து புகார் அளிக்கவே, தி.நகர் பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஹோட்டலில் சோதனை நடத்தினார். சோதனை தொடர்பாக தகவல் தெரிவித்த உணவு பாதுகாப்பு அதிகாரி, “உணவில் கிடந்தது கரப்பான்பூச்சி இல்லை, மின் விளக்கு ஒளியில் வரும் பூச்சி தான். சோதனையில் சமையலறை பகுதி தூய்மையாகப் பராமரிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. சமையல் பொருட்கள் முறையாக மூடி வைக்கவில்லை என்பதும் தெரியவந்தது” என்றார்.
இதனை அடுத்து உணவு பாதுகாப்புத் துறை விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காததால் குறைபாடுகளைச் சரிசெய்ய உத்தரவிட்டு ஹாட்சிப்ஸ் உணவகத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


