பிரபல தொழிலதிபர் நிறுவனத்தில் விடிய விடிய ஐடி ரெய்டு
சென்னையில் தொழிலதிபர் பாரிஸ் அபூபக்கருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி அதிகாரிகள் மூன்றாவது நாளாக சோதனை நடத்தினர்.
பிரபல தொழிலதிபரான பாரிஸ் அபூபக்கர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். முக்கியமாக கேரளா, சென்னை, பெங்களூர், மும்பை என நாடு முழுவதும் நிறுவனங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறார். இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பாரிஸ் அபூபக்கர் பெயரில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இவருக்கு தொடர்புடைய இடங்களில் நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது.
அந்தந்த மாநிலங்களில் உள்ள வருமான வரித்துறை பிரிவின் உதவியோடு இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் குறிப்பாக பாரீஸ் அபூபக்கர் தொடர்பாக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 92 கம்பெனிகள் செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னை கிண்டியில் சோபா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திலும் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக நிலம் வாங்கும் விவகாரத்தில் பினாமி பெயர்களில் பாரிஸ் அபூபக்கர் நிலங்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கணக்கில் வராத கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு பண பரிவர்த்தனை மேற்கொண்டு அதற்கான உரிய வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வரியை பெறுவதற்கான தொடர்பாக தொழிலதிபர் பாரிஸ் அபூபக்கருக்கு கொச்சின் வருமானவரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருப்பதாக வருமான வரி துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
பாரிஸ் அபூபக்கர் தொடர்புடைய இடங்களில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் நிலம் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், பினாமி சொத்துக்களாகவும் சட்டவிரோத பணப்பரிவினை மூலம் எத்தனை நிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தெல்லாம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழிலதிபர் பாரிஸ் அபூபக்கர் தொடர்பான இடங்களில் மட்டுமல்லாது முக்கிய நிலத்தரகர்கள் சில அரசு அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடத்தி வருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.