சென்னையில் மாஞ்சா நூல் வாங்க, விற்க, பயன்படுத்த தடை
சென்னையில் 60 நாட்களுக்கு மாஞ்சா நூல்களை வாங்கவோ விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் சிலர் தங்களது வீட்டு மாடிகளில் காற்றாடிகளை வானில் பறக்கவிடுகிறார்கள். அதற்காக கண்ணாடி துகள்கள் கொண்ட மாஞ்சா நூலை பயன்படுத்துகின்றனர்.
அந்த மாஞ்சா நூல் அறுபட்டு சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கழுத்தை அறுத்துவிடுகிறது. இதனால் விபத்து மற்றும் உயிரிழப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளது. இதனை தடுக்கும் வகையில் சென்னையில் மாஞ்சா நூலை வாங்குபவர்கள் மீதும் விற்பவர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்தது.
இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். மார்ச் 6 முதல் மே மாதம் 4ம் தேதிவரை 60 நாட்களுக்கு மாஞ்சா நூலை வாங்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.