போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2021ம் ஆண்டு அடையார் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 14 வயது (2021) சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் J-9 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு, இவ்வழக்கில் தொடர்புடைய 20 வயதுடைய எதிரியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

இவ்வழக்கு தரமணி காவல் நிலையத்திலிருந்து W-21 கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. W-21 கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயார் செய்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு W-21 கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து புதிதாக அமைக்கப்பட்ட தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. மேலும் நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் 20 வயது எதிரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 20 வயது குற்றவாளிக்கு 366 இ.த.ச சட்டப்பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், ரூ.2,000/- அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சாட்சிகளை ஆஜர்படுத்தி, தொடர்ச்சியான நடவடிக்கைகளினால் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரை உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.