சென்னை வர்த்தக மையத்தில் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி 2.0 நடைபெற்றது.
பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப துறையில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், சென்னை வர்த்தக மையத்தில் 3 நாள் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி 2.0 நடைபெறுகிறது. இதனை தக்ஷின் பாரத் கட்டளை பொது அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பரார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை ஸ்வதந்த்ரா அறக்கட்டளை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம்(TIDCO) மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இணைந்து நடத்துகிறது. இதில் நூற்றுக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்(MSME) கலந்துகொண்டன.
கண்காட்சியுடன் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் பாதுகாப்புத் துறையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி, சிறு, குறு நிறுவனங்களின் திறன் முக்கியத்துவங்கள், பாதுகாப்பு கொள்முதல், உள்நாட்டுமயமாக்களில் சிறு, குறு நிறுவனங்களின் முக்கிய பங்கு உள்ளிட்டவை குறித்து பாதுகாப்புத்துறை சார்ந்த நிபுணர்கள் எடுத்துரைத்தனர். அத்துடன் முந்தைய கண்காட்சியின் போது புதிய ஆர்டர்களை பெற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. தொடர்து விமான போக்குவரத்துத் துறை உள்ளிட்ட துறைசார்ந்த வளர்ச்சி வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நேருக்கு நேர் சந்திக்க முடியும். இதன்மூலம் புதிய தொழில் ஒப்பந்தகள், ஆர்டர்கள் கிடைக்க ஒரு வாய்ப்பாக அமையும் என கூறப்படுகிறது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்க எந்த நுழைவுக் கட்டணமும் இல்லை. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழா நாளை ( செப்டம்பர் 5) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் பாதுகாப்பு துறை இணையமைச்சர் அஜய் பட் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார்.