முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால், இந்தியாவிலேயே 42 சதவீதம் பெண்கள் பணி செய்யக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி கண்டுள்ளது என, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் கூறியுள்ளார்.
அகில இந்திய கட்டுமான அமைப்பு சாரா அனைத்து தொழிற்சங்கங்களின் கலந்தாலோசனை கூட்டம், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 1.3 லட்சம் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க வேண்டியிருந்த நிலையில், 2 மாதத்திற்குள் கல்வி உதவி தொகை உட்பட பல திட்டங்கள் 50 ஆயிரம் பேருக்கு முதலமைச்சரால் வழங்கப்பட்டதாகவும் மீதமிருந்தோர்க்கான நிலுவைத் தொகையை ஒரே நாளில் வங்கி கணக்கில் சேர்த்த பெருமை தமிழக அரசையே சாரும் என்றும் தெரிவித்தார்.
தொழிலாளர்கள் உயிரிழந்தால் ஓரிரு நாட்களிலேயே அவர்களது குடும்பத்துக்கு இழப்பீடு தொகையை பெற்றுத் தருவதாகவும் எங்கு கோரிக்கை வந்தாலும் தாமே முன்நின்று நிறைவேற்றி தருவதாகவும் அமைச்சர் கணேசன் கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் , தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 20 அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில்,நேற்று வரை அதாவது, கடந்த 19.8.2024 வரை 44.74,682 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளார்கள் என்றும் 27 திட்டங்களை புதிதாக முதலமைச்சர் அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
23,70,288 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் கணேசன், 17,29,750 பேர் புதிதாக பதிவு செய்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இணையதள சேவையில் உள்ள சர்வரில், தரவுகள் காணாமல் போனதாக கூறப்படும் காலத்தில் மட்டும் 1,79,719 தொழிலாளர்கள் புதிதாக பதிவு செய்துள்ளனர் என்றும் 13,76,618 தொழிலாளர்களுக்கு,1,28,41,88,503 ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சி.வி.கணேசன் பெருமையுடன் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களால், இந்தியாவிலேயே 42 சதவீதம் பெண்கள் பணி செய்யக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி கண்டுள்ளது என அமைச்சர் சி.வெ.கணேசன் குறிப்பிட்டார்.