மழை நீர் சூழ்ந்து காணப்படும் கொரட்டூர் ESIC மருத்துவமனை-வருடா வருடம் இதே நிலை நீடிப்பதால் நிரந்தர தீர்வு காண அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை.
சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று இரவு தொடர் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில் சென்னை கொரட்டூர் ESI மருத்துவமனையில் மழை நீர் தேங்கியுள்ளதால் மருந்து வாங்க வருவோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
மருத்துவமனை வளாகத்திற்கு செல்ல செங்கல் வைத்து அதன் மூலம் கடந்து செல்ல கூடிய சூழல் உருவாகியுள்ளது. ஒவ்வொரு மழைக்கும் இந்த மருத்துவமனையில் மழை நீர் தேங்கி மருந்துகள் நீரில் வீணாகும் நிலை தொடர்கிறது, தற்காலிகமாக தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற அவ்வப்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இம்மருத்துவமனை நிலப்பகுதியில் தாழ்வான நிலையில் உள்ளதால் மழை நீர் தொடர்ச்சியாக இப்பகுதியில் தேங்கும் நிலை நீடித்து வருவதாக பொது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என அரசுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.