சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் வடமாநில பயணிகளுக்கு டிக்கெட் வாங்கி தருவதாகக் கூறி, செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரை பெரியமேடு போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்வதற்காக குவிந்த வண்ணம் உள்ளனர். அப்படி சொந்த ஊருக்கு போக விரும்பும் மக்கள் பலர் கடைசி நிமிடத்தில் டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது. அப்படி டிக்கெட் கிடைக்கப்பெறாமல் அவதிப்படும் நபர்களை, அவர்களின் முக பாவணையை வைத்து அடையாளம் கண்டு தான் டிக்கெட் வாங்கி தருவதாக கூறி திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார் ஒரு இளைஞர். அப்படி, நம்பி வரும் பயணிகளின் செல்போன் லாக் மற்றும் ஜி பேயின் ரகசிய எண்ணை வாங்கி கொண்டு, கன்ஃபார்ம் டிக்கெட் போடுவதாக சொல்லி ஒருசில நிமிடம் காத்திருந்து டிக்கெட் போடுவது போல பாவணை செய்து, பின்னர் டெக்னிக்கல் பிரச்னை இருப்பதாக சொல்லி அங்கிருந்து செல்போனுடன் மாயமாகி விடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
இதுதொடர்பான தொடர் புகார்களின் பேரில் பெரியமேடு போலீசார் புறநகர் ரயில் நிலைய வளாகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி அந்த இளைஞரையும் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று சிசிடிவியில் பதிவான நபர் ரயில் நிலைய வளாகம் வந்ததை அடையாளம் கண்ட போலீசார், அவரை பிடித்து பெரியமேடு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த இளைஞர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராம்தயாள் லக்கார் என்பது தெரியவந்தது.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், வடமாநில நபர்களை குறி வைத்து செல்போன்களை அபகரித்து சென்றதும், திருடப்படும் செல்போன்களை திருவல்லிக்கேணியில் செல்போன் கடை நடத்தி வரும் கேரள மாநிலத்தை சேர்ந்த நவ்சாத் என்பவரிடம் விற்று விடுவதாக ராம்தயாள் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனடிப்படையில் நவ்சாத் நடத்தி வந்த கடைக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்த 12 திருட்டு செல்போன்கள் மற்றும் ராம்தயாள் வைத்திருந்த 10 செல்போன்கள் என மொத்தம் 22 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப் படி இருவரையும் சிறையில் அடைத்தனர்.