தென்னிந்திய திரை உலகில் சமீப காலமாக பிரபலங்கள் கைது செய்யப்படும் தகவல் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரையுலகிலும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மலையாள சினிமாவில் நடிகர் முகேஷ், பாலியல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அதேபோல் தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டார்.
இயக்குனர் மோகன் ஜி கடந்த 2016இல் வெளியான பழைய வண்ணாரப்பேட்டை போன்ற படத்தின் மூலம் அறியப்படுபவர். அதைத் தொடர்ந்து இவர் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்களை இவர் இயக்கியிருந்தார். இவர் இயக்கிய படங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாக பலரும் விமர்சித்து வந்த நிலையில் சமீப காலமாக மோகன் ஜி யும் தனது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய சில கருத்துக்களையும் வெளியிட்டு வந்தார். அந்த வகையில் பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலப்பதாக இவர் வெளியிட்டிருந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் போலீசார் இவரை கைது செய்திருந்த நிலையில் பின்பு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மோகன் ஜி மீது பழனி மலை அடிவாரத்தில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கோயில் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு ஐந்து பிரிவுகளின் கீழ் மோகன் ஜி மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.