தமிழில் டப் செய்யப்பட்ட ஆவேஷம்… விரைவில் ஓடிடி தளத்தில் வெளியீடு…
- Advertisement -
ஃபகத் பாசில் நடித்த ஆவேஷம் திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மலையாளம் சினிமாவில் வெளியான அனைத்து திரைப்படங்களும் அதிரி புதிரி ஹிட் அடித்தன. நடப்பாண்டில் வெளியான பிரேமலு, மஞ்சுமல் பாய்ஸ் ஆகிய திரைப்படங்கள் மலையாள ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழிலும் பெரும் ஹிட் அடித்தன. அந்த வகையில், ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான ஆவேசம் திரைப்படம் சுமார் 100 கோடி வசூலை கடந்து ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது.
ஜித்து மாதவன் இத்திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆசிஸ் வித்யார்தி, சஜின் கோபு, பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். கடந்த 11-ம் தேதி இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இத்திரைப்படம் மலையாளம் மொழியில் மட்டுமே வெளியானது. இருப்பினும், படம் தமிழ், தெலுங்கு, என அனைத்து மொழி ரசிகர்களாலும் விரும்பி பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஆவேஷம் திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. தற்போது மலையாளத்தில் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கும் ஃபகத், தெலுங்கில் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமன்றி ரஜினியுடன் சேர்ந்து வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். தற்போது கூலி படத்திலும் அவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.