நடிகர் பிரபு குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.
அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தினை மார்க் ஆண்டனி படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஐதராபாத் பகுதியில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் பிரபுவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் பிரபு, அஜித் நடிப்பில் வெளியான அசல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளார்.