விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் திரைப்படம் தான் தளபதி 69. இந்த படத்தினை தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்க இருக்கிறார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க இருக்கிறார். அனிருத் இந்த படத்தில் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், பிரியாமணி, கௌதம் மேனன், நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படத்தின் பூஜை இன்று (அக்டோபர் 4) சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை (அக்டோபர் 5) படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மேலும் படமானது 2025 அக்டோபர் மாதம் திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இதன் கூடுதல் தகவலாக, நடிகை மோனிஷா பிளஸ்ஸி தளபதி 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது மோனிஷா பிளஸ்ஸி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.