தெகிடி படப்புகழ் பிரதீப் கே. விஜயன் மறைவு… திரையுலகினர் அதிர்ச்சி…
- Advertisement -
பிரபல நடிகர் பிரதீப் கே.விஜயனின் திடீர் மறைவு, திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னையைச் சேர்ந்தவர் பிரபல நடிகர் பிரதீப் கே.விஜயன். இவர், தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். தமிழில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான தெகிடி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் பல படங்களில் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்திருந்தாலும், இத்திரைப்படம் பிரதீப்பிற்கு நல்ல பெயரையும், அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்தது. இதில், வில்லன் வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

தெகிடி படத்தைத் தொடர்ந்து, வைபவ் நடித்த மேயாத மான், விஷாலின் இரும்புத் திரை, நகுலின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆர்யா நடித்த டெடி, லிப்ட் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். டோலிவுட்டிலும் அவர் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது வீட்டின் கதவு கடந்த இரண்டு நாட்களாக பூட்டியிருந்ததாகவும், அவர் வெளியே வரவில்லை என்றும் கூறப்பட்டது. அவரது நண்பர்களும், பிரதீப்பை செல்போனில் அழைக்க முயற்சி செய்தனர். ஆனால், அவர் பதில் அளிக்காததால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், பிரதீப்பின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் அவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும், அவரை உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். பிரதீப் கே. விஜயனின் திடீர் மறைவு, திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.