நடிகை கஸ்தூரி தன் மகள் குறித்து கண் கலங்கி பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 80 – 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. தற்போது இவர் அரசியல் பிரமுகராகவும் வலம் வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அதேசமயம் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருவதும் வழக்கம். இந்நிலையில் இவர் சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் சந்தானத்திற்கு அம்மாவாக நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற மே 16 அன்று திரைக்கு வர இருக்கிறது. இது தொடர்பான ப்ரோமோஷன் நிகழ்ச்சியை ஒன்றில் கலந்துகொண்டபோது, நடிகை கஸ்தூரி கண்கலங்கி பேசியுள்ளார். அந்த பேட்டியில், “என் மகள் ஏழு வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஒவ்வொரு நாளும் என் மகள் உயிர்பிழைப்பாரா? இல்லையா? என்று மருத்துவமனையில் காத்திருந்தேன். இரண்டரை வருடமாக எங்களுக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் ஒரே சோபாவில் அமர்ந்திருந்தேன். என் மகளைப்போல் பல குழந்தைகள் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்கள். என் மகள் இறந்து விடுவாள் என்று இரண்டு முறை நினைத்தேன். ஆனால் மூன்றாவது முறை அவளை குணப்படுத்திவிட்டேன். நான் ஓரளவிற்கு செட்டிலாக இருக்கும் சமயத்தில் தான் என் மகளுக்கு இந்த நிலைமை வந்தது. ஆனால் கஷ்டப்படுகிற அவர்களுடைய குழந்தைகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டால் அந்த குழந்தைகளுக்கு செலவழிக்க முடியாமல் அவர்கள் படும் கஷ்டத்தை பார்த்து இருக்கிறேன்.
அந்த கொடுமையான வலி யாருக்குமே வரக்கூடாது. குழந்தைகள் நம் கண் முன் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருப்பதை தவிர நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. இதனால்தான் நான் மனு மிஷனை தொடங்கினேன். அதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருக்கிறேன். பல குழந்தைகளுக்கு என்னால் உதவ முடிகிறது. என் மகளைப் போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் விரைவில் நலம் பெற வேண்டும் என்பதுதான் என் ஆசை” என்று எமோஷனலாக கண் கலங்கி பேசியுள்ளார் கஸ்தூரி.